இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் “”பில்”- பி.எஸ்.என்.எல். , இழப்பீடு தர உத்தரவு

oythqpp5இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் பில் அனுப்பி, மன உளைச்சல் ஏற்படுத்திய பி.எஸ்.என்.எல். , நிர்வாகம்,  பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 11 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமுகை, சவுத் இந்தியா விஸ்கோஸ் காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம்.  1998, மே 16ல் மேட்டுப்பாளையம் சப் டிவிசனல் ( பி.எஸ்.என்.எல்.,) அலுவலகத்தில், இரண்டாயிரம் ரூபாய் டிபாசிட் செலுத்தி, தொலைபேசி இணைப்பு பெற்றார்.  இந்நிலையில், விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டது.      

இங்கு பணியாற்றிய இவரது மாமனார், மாமியார் ஒண்டிப்புதூர் அருகேயுள்ள இடையர்பாளையத்துக்குக் குடிபெயர்ந்தனர். எனவே, தொலைபேசி இணைப்பைச் சிறுமுகையில் இருந்து மாற்றிக் கொடுக்கும் படி 2006, ஏப். 26ல் விண்ணப்பம் கொடுத்தார்.இதைப் பரிசீலித்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் அடுத்த இரு நாட்களில் இணைப்பைத் துண்டித்தனர்.  ஆனாலும், இருமாத காலம் இணைப்பு மாற்றிக் கொடுக்கவில்லை. மாறாக 2006, ஜுன் 7ல் வந்த அஞ்சலில் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணமாக 347 ரூபாய் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், பில் வந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணிக்கம், வேறு வழியின்றி பணத்தை செலுத்தினார்.  இதன் பிறகும், டிசம்பரில் 740 ரூபாய் செலுத்த வேண்டும் என பில் வந்தது.இது குறித்துக் கடிதம் வாயிலாகவும், நேரிலும் கேட்டபோது முறையான பதில் இல்லை. பதிலாக, வைப்புத் தொகை 276 ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படி  பி.எஸ்.என்.எல் நிர்வாகம் காசோலை அனுப்பியது.  இணைப்பு பெறும்போது இரண்டாயிரம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தியிருந்த நிலையில் தற்போது 276 ரூபாய் அனுப்பியதால், அதைப் பெறாமல் திருப்பி அனுப்பினார்.    

 பி.எஸ்.என்.எல் நிர்வாகத்தின் சேவைக்குறைபாடு குறித்து, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மாணிக்கம் வழக்கு தொடர்ந்தார்.  நீதிபதி ஸ்ரீராமுலு, உறுப்பினர்கள் மாதவி, ரத்தினம், ஆகியோர் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு கூறினர்.  இதன்படி, பாதிக்கப்பட்ட மாணிக்கத்துக்கு 11 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், துண்டிக்கப்பட்ட இணைப்பை உடனடியாக வேறு  இடத்துக்கு மாற்றித் தரவேண்டும் என பி.எஸ்.என்.எல், நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

About வழக்கறிஞர் A K ராஜேந்திரன்

View all posts by வழக்கறிஞர் A K ராஜேந்திரன் →