இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அங்கக வேளாண் கண்காட்சிப் புகைப்படங்கள்

exகடந்த ஆண்டு (23.11.2014), ‘கோவை வணிகம்’ மாத இதழ் மற்றும் ‘மத்திய வேளாண்மை அறிவியல் நிலையம் (ICAR-KVK, கோவை மாவட்டம்)’ இணைந்து  ‘நலமுடன் வாழ நஞ்சில்லா விவசாயம்’ என்கிற கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் பெருந்திரளாக விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள்… எனப் பலரும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கானது, நமது தமிழகத்தில் இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் நோக்கிலும், குறைந்த முட்டுவளிச் செலவு (முதலீடு), மற்றும் இரசாயன உரம், பூச்சிக் கொல்லி போன்றவைகளைப் பயன்படுத்துவதால் மண்ணுக்கும், மனிதனுக்கும் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகள் குறித்துப் பேசப்பட்டது. மேலும், கேரள மாநிலம் என்டோசல்பான் என்னும் பூச்சிக் கொல்லியினால் மிகுந்த பாதிப்படைந்தது, இதனைத் தொடர்ந்து வருகிற 2016ம் வருடம் முதல் இயற்கை விவசாய மாநிலமாக உருவெடுக்கவுள்ளது என்பதையும் தமிழக விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற்ற விவசாயிகள் இரசாயனம் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து (குறிப்பாக இளைய தலைமுறையினர்) எதிர்வரும் காலங்களின் அங்கக / இயற்கை வேளாண் சந்தையை ஆராய்ந்து அதனை நோக்கி, தங்களின் பண்ணையை முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவில் சர்வதேச அங்கக வேளாண் கண்காட்சி, கடந்த மாதம் 5,6, மற்றும் 7 (நவம்பர் 2015) ஆகிய தேதிகளில், கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்தில் அங்கமாலியில் (BIO FACH INDIA – ஒருங்கிணைப்பாளர்) அட்லக்ஸ் கண்காட்சி மையத்தில் நடைப்பெற்றது.

இவ்வரங்கு முழுவதும் குளிர் சாதனப்படுத்தப்பட்டது, இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்றனர். அவர்கள் தங்களின் பொருட்களை (இயற்கை / அங்கக வேளாண் முறையில்) சந்தைப் படுத்தும் நோக்கில் வண்ண வண்ணப் பெட்டி, கண்ணாடி பாட்டில்கள்… போன்றவைகளைக் கண் கவர்
அலமாரி அமைப்புகளில் இடம் பெறச் செய்தனர். அங்கக வேளாண் பண்ணைகளின் நேரடி விற்பனை
மற்றும் கண்காட்சி, சமூக அமைப்புகள், அங்கக விளை பொருட்களை வாங்கும் மற்றும் வர்த்தகம்
செய்யும் நிறுவனங்கள்… போன்றவகைள் இந்தியாவின் பல மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் ஜெர்மனி, சிங்கப்பூர்… போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்தும் பங்கேற்றது (வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பார்வையாளர்கள்) அரங்கு முழுவதும் உற்சாகமுடன் காட்சியளித்தன.

அங்கக மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு, மதிப்புக் கூட்டப்பட்டு கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பொருட்கள் பற்றிய சில தகவல்கள்.

1. கடுகு முதல் அரிசி, காய்கறி, பருப்பு வகைகள்…
2. மாம்பழம், ஸ்டரா பெர்ரி, திராட்சை, பேரிச்சம் பழம்…
3. தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்…
4. ஜாம், ஜெல்லி… என மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்.
5. இயற்கை / அங்கக முறையில் விளைவித்த பருத்தியில் இருந்து இரசாயனம் சேர்க்கப்படாமல்
உற்பத்தி செய்யப்பட்ட துணிகள், படுக்கை விரிப்பு…
6. மலைப் பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் டீ, காபி, பழங்கள்…
7. பால், நெய், பஞ்சகவ்யா…
8. வாசனைப் பயிர்களான மிளகு, கருப்பு ஏலக்காய், முந்திரி, வெட்டிவேர்… தானிய வகைகள்…
9. இயற்கை விளை பொருட்களை உற்பத்தி செய்யும் வேளாண் பண்ணைகள், மதிப்புக் கூட்டும் வணிக
நிறுவனங்கள் முகவரிகள்…புத்தகங்கள்…
10. இயற்கை வேளாண்மை குறித்த புத்தகங்கள்…அங்கக உரங்கள்…

இப்படி இன்னும் பலப் பொருட்கள் விற்பனைக்காகவும் கண்காட்சிக்காகவும் இடம் பெற்றிருந்தன. விலை சற்று அதிகமாக இருந்தாலும் பொருளுக்குரிய நல்ல தரம் இருந்ததனால் பலரும் விரும்பி வாங்கிச் சென்றதும் நம்மால் காண முடிந்தது என்பது இக்கருத்தரங்கின் சிறப்பு என்றே சொல்லலாம்.

இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அங்கக / இயற்கை வேளாண் விளை பொருட்களுக்கு வருங்காலங்களில் பிரகாசமான சந்தை வாய்ப்பு உள்ளது என்பதே. இக்கண்காட்சிக் குறித்து கோவை வணிகம் மாத இதழ் கடந்த 6 மாதங்களாக வாசகர்களுக்குக் கண்காட்சிப் பக்கத்தில் நினைவூட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. இனி அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வாசகர்களின் பார்வைக்காக…

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →