இலுப்பை- வாசம் இழுக்கும்.

vkufrx3rஇலுப்பை மரங்களைப் பொறுத்த வரையில் இரண்டு விதமான வகைகள் காணப்படுகின்றன. இவை இரண்டும் பொதுவாக மகுவா (Mahua) என்று அழைக்கப்படுகின்றன. இம்மரம்  எண்ணெய் உற்பத்தி செய்வதில் பெரிதும் பயன்படுகின்றது.

தமிழ்நாட்டில் இம்மரம் இலுப்பை என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாக இலையுதிர் தகவமைப்பைக் கொண்ட இம்மரம் 70 அடி உயரம் வரை வளரக் கூடியது. 8 முதல் 15 வருடங்களில் இருந்து பூக்கத் துவங்கி விடுகின்றது. இம்மர விதைகளில் 70 % வரை எண்ணெயின் அளவு வேறுபடுகின்றது.

பரவல்

இந்தியாவைப் பொறுத்தவரையில் நடுத்தர மர வகையைச் சார்ந்து காணப்படக்கூடிய இம்மரம் தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத், மத்திய பிரதேசம், ஒரிசா, பீகார் மற்றும் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

பூத்தலும் காய்த்தலும்

இம்மரமானது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை பூக்கும் காலமாகும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரைகாய் காய்க்கும். 10 வருட மரங்களே நன்கு முதிர்ந்த காய்களைக் கொடுக்கும். 1 கிலோ விதையில் 450 முதல் 500 விதைகள் இருக்கும்.

இனப்பெருக்கம்

தேர்வு செய்யப்பட்ட தாய்மரத்தில் இருந்து முற்றிய காய்களைச் சேகரிக்க வேண்டும். காய்களை நன்கு வெயிலில் காய வைத்து விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். இவ்விதைகளைச் சாதாரண நீரில் 6 முதல் 12 மணிநேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்தல் வேண்டும். நேர்த்தி செய்த விதைகளைப் பாலித்தின் பைகளில் விதைக்கும் போது 5 முதல் 7 நாட்களில் முளைப்பு கிடைக்கும். இதன் முளைப்புத் திறன் 70 முதல் 90 சதவீதம் ஆகும்.

அதிக எண்ணெய் அளவினைக் கொண்டுள்ள தாய்மரத்தைத் தேர்வு செய்து அதிலிருந்து தாய்க்குச்சிகளைச் சேகரிக்க வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட தாய்க்குச்சிகளின் அடிப்பாகத்தை ‘A’ வடிவத்தில் கூர்மையாகச் சீவ வேண்டும். இதைப்போல் வேர்ச் செடியிலும் ‘A’ வடிவ பிளவினை ஏற்படுத்தித் தாய்குச்சியினை வேர்ச் செடியில் காற்று இடைவெளி இல்லாமல் நன்கு பொருந்துமாறு அமைத்துப் பாலித்தீன் கயிற்றினால் இருக்ககட்டி ஒட்டுக்கட்டுதல் மூலம் தரமான உயர் விளைச்சல் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.

நடவு மற்றும் மகசூல்

4 முதல் 6 மாதக்கன்றுகளை நடவு வயலில் 3 X 3 மீ இடைவெளிமுதல் 8 X 8 மீ இடைவெளியில் தோப்புகளாக வயலில் நடவு செய்ய வேண்டும். இம்மரம் 8 வருடத்தில் காய்த்து விதைகளைத் தரவல்லது. ஒரு முதிர்ந்த மரம் 20 முதல் 24 கிலோ விதைகளை ஒரு வருடத்தில் தரவல்லது.

பயன்கள்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யானது பயோ டீசலாகப் பயன்படுகிறது.

பொது பண்புகள்

இலுப்பை மரத்தின் பூக்களானவை மருத்துவ குணமிக்கதாகவும் உண்ணக் கூடியதாகவும் காணப்படுகின்றன. ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் இம்மரத்தின் பூக்களில் இருந்து பெறப்படக் கூடிய எண்ணெய்யை உணவுப் பொருட்களுடன் பயன்படுத்துகின்றனர். எண்ணெய்யை எடுத்து, பின்பு கழிவுப்பொருளாக உள்ள விதைகளை மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர்.

மேலும் பீல் (Bhil) பழங்குடியினர், குறிப்பாக மத்திய பிரதேசப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் எண்ணெய் எடுக்கப்பட்ட விதைக் கழிவுகளை எரித்துப் புகையை உருவாக்கி பாம்புகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றனர். மேலும்இலுப்பை எண்ணெயிலிருந்து,ஹேர் ஆயில்,சோப்புத் தொழிற்சாலைதோல் பாதுகாப்பு, எண்ணெய் தயாரிப்பு போன்ற தொழிற் சாலைகளிலும் பயன்படுகின்றது. மேலும் இம்மரப் பூக்களில் சர்க்கரையின் அளவு அதிகமாகக் காணப்படுவதால் பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை” என்ற பழமொழி இதன் சர்க்கரைத் தன்மையை விளக்குகிறது.

பூக்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஊறுகாயில் இருந்து காச நோய்க்கு மருந்துகள் பெறப்படுகின்றன. மரப்பட்டைகளை பொடி செய்து மூச்சுத் திணறலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், பல்வேறு வகையான நோய்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மருந்தாகப் பயன்படுகின்றது. அவைகள்,
    
இருமல் நீக்கியாகவும், சுவாசக் கோளாறு, வாந்தி மற்றும் மயக்கம், மூல நோய், சர்க்கரை நோய், அல்சர், புண் மற்றும் காயம் போன்றவைகளுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. மேலும் இவ்வகை நோய்களைக் குணப்படுத்துவதால் இலுப்பை மரம் ஒரு மகத்துவமான மரமாகக் கருதப்படுகின்றது.

பருவ நிலை மாற்றத்தின் முக்கியத்துவத்தை ஏனைய நாடுகள் உணர்ந்த நிலையில் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டன.

கட்டுரையாளர்கள் : கா.த.பார்த்திபன், பா.பழனிகுமரன், ரா.திருநிறைச்செல்வன்

கட்டுரையாளர்கள் தொடர்புக்கு : வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்.

மரங்களைப் பற்றிய புரிதல் மற்றும் அறிவு சரியாக இருந்தால் மரங்கள் மனிதர்களுக்கு ஓர் வரமே’. இயற்கையின் சூழ்நிலை அமைப்பை மாற்றி அதிக அளவு பாதிப்பிற்குள்ளாகும் மனிதர்களுக்கு மரங்களைத் தவிர மாற்று மருந்தேதுமில்லை.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா 700 கோடி மரங்களை நட வேண்டும் என்று திட்டம் வகுத்துள்ளது. எஞ்சியுள்ள மரங்களில் இருந்து மரம் சார்ந்த தொழிற்சாலைகளான காகித ஆலை, தீப்பெட்டித் தொழிற்சாலை, ஒட்டுப் பலகைத் தொழிற்சாலை, எரி சக்தித் தொழிற்சாலை மற்றும் தடிமரத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரக்கட்டைகள் கிடைப்பதில்லை.

மேலும் மரக்கட்டைகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில், பன்னாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் அரசு நெறிமுறைகளினாலும் குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கு மாற்று வழியாக மரம் வளர்க்கும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

மரம் வளர்க்கும் நோக்கம் கொண்ட அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் தன்னார்வக் குழுமங்கள், பொதுத்தொண்டு நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொது மக்களிடம் மரங்கள் வளர்ப்பது பற்றிய தொழில்நுட்பம் குறைந்து காணப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு வகையான மரங்களுக்கும் தனித்தனியான வளர்ப்பு முறைகளும் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களும் தேவைப்படுவதால் மரங்களைப் பற்றிய அறிவியல் நுட்பங்கள் அவசியமாகின்றது.

உதாரணமாக: சந்தன நாற்றுக்களுக்குத் தானாக மண்ணில் இருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும் தன்மையற்றது. இம்மரம் பிற மரங்களின் வேர்களில் இருந்தே ஊட்டச் சத்தினால் வளரக்கூடிய ஒரு ஒட்டுண்ணி மரம் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் எந்த வகை மரங்களுடன் சந்தனம் ஒன்றி நன்கு வளரும் என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்று வெவ்வேறு வகையான மரங்களுக்கு வெவ்வேறு விதமான தொழில்நுட்பங்களைப் பரிந்துரை செய்வதுடன் அதற்கான வழிகாட்டுதலையும் செய்கின்றது. எனவே இத்தொழில்நுட்பங்களையும் ஆராய்ச்சியின் முடிவுகளின் படியும் சற்றேரக்குறைய 40 வகையான மரங்களுக்கு வளர்ப்பு முறை, நாற்றுக்கள் உற்பத்திச் செய்யும் தொழில்நுட்பம், நாற்றுகளின் விற்பனை நிலையம், விதை நேர்த்தி, சரியான வண்ணப் புகைப்படங்களுடன் கூடிய    பணம் மற்றும் பலன் தரும் மரங்கள் என்ற புத்தகம் முனைவர் கா.த.பார்த்திபன் பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் அவரின் குழுவினால் எழுதப்பட்டுள்ளது.

    
    

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →