உயர் மாடிக் கட்டிடங்களில் “”தீ” பாதுகாப்பு…….

fireஇன்று பல மாடிக் கட்டிடங்கள் என்பது சர்வ  சாதாரணமாகப் பெருகிவிட்டன.

ஒவ்வொரு கட்டிடங்களிலும் பெருவணிகக் கடைகள், அலுவலகங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் இடமாகிவிட்டன.  ஆகவே, அவற்றினைப் பயன்படுத்தும் மக்களுக்கு அபாயம் ஏற்படாமல் பாதுகாக்கப் பலவழி முறைகளை ஆராய்ந்து வல்லுனர்களின் ஆலோசனைப்படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க அனைத்து நாட்டு அரசாங்கங்களும் உத்தரவாகி அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

உயர் மாடிக்கட்டிடங்களில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் யாவை?

உயர் மாடிக் கட்டிடங்களில் தண்ணீர் 24 மணி நேரமும் கட்டிடத்தின் அமைப்புக்கு ஏற்ப சேமித்து வைத்திருத்தல் மிக அவசியம்.  “”தீ” பாதுகாப்பிற்கு எனத் தண்ணீர்த் தொட்டிகளில் எப்போதும் நிரம்பி இருக்க வேண்டும்.

அனைத்துத் தளங்களிலும் நீர் விடு குழாய்கள் முறையாகப் பொருத்தப்பட்டுப் பராமரித்து வர வேண்டும்.  அனைத்துத் தளங்களிலும் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

அனைத்து தளங்களிலும் தானியங்கி நீர் தெளிப்பான்கள் (sprinklers)  பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்துத் தளங்களிலும் “”தீ” எச்சரிக்கை மணிகள்  (fire alaram) பொருத்தப்பட வேண்டும். மேலும் புகை எச்சரிக்கை மணிகளை  (smoke alaram) சிறிய இடங்களில் கூட பொருத்தி பாதுகாப்பாக இருக்கலாம்.

கட்டிடங்களின் அளவுக்கு ஏற்ற விதிமுறைப்படி மாடிப்படிகள் வெளியேற வழிகள் அமைக்கப்பட வேண்டும்.

தரைத் தளத்திற்குக் கீழ் உள்ள தளங்களிலும் மற்றும் அனைத்துத் தளங்களிலும் அவசரகால (Emergency lights) விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்.

கட்டிடங்களைச் சுற்றி, மீட்புப்பணி நடவடிக்கைகளுக்கு வசதியாக காலி இடம் விடப்பட வேண்டும்.

தீயணைப்புப் பயிற்சி பெற்ற ஆட்கள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும்.

பொருத்தப்பட்ட அனைத்துக் கருவிகளும் முறையாகப் பராமரித்து வரவேண்டும்.

உயர் மாடிக் கட்டிடங்களில் ஆட்களை மீட்பதும், வெளியேற்றுவதும் மற்ற கட்டிடங்களை விட சிக்கலானது.

உயர்மாடிக் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் மக்கள் அதிக தூரம் தப்பி இறங்கி வர வேண்டும் பதற்றம், அவசரம் குழப்பத்தினை விளைவிக்கும்.  ஆகவேதான் அகன்ற மாடிப்படிகள் அமைக்க வேண்டும்.  அனைவரும் வெளியேற வேண்டுமானால், மணிக்கணக்கில் ஆகிவிடும் மின்சாரம் தடைபட்டு விடுகிறது.  லிப்ட், லைட் ஆகியவை இருக்காது.  புகைமூட்டம் கூடவே சூழும்.  ஆகவே சற்றுச் சிக்கலானதுதான்.  உயரம் காரணமாக வெளியே எட்டிக் குதிக்கவும் முடியாது.  ஆயினும் தற்போது உள்ள பாதுகாப்புக் கருவிகள் பெரிய அளவிலான அபாயத்தைக் குறைக்கும் வல்லமை பெற்றவை.

முக்கிய அவசரகாலத் தயார் நிலைகள் எவை?

தீ எச்சரிக்கை மணி , அபாயம் குறித்த அறிவிப்பு வெளியேறும் வழிக் குறித்துத் தெளிவான வழிகாட்டி அட்டைகள். இவற்றை அனைவரும் காணும் இடத்தில் வைப்பது மிக அவசியம்.

உயர்மாடிக் கட்டிடங்கள் பாதுகாப்புப் பயிற்சிகள் அவசியமா?

ஆம். அதற்கு என ஒருகுழு அமைத்து, அந்தக் கட்டிடங்களில் பணியாற்றும் அனவரும் தனித்தனியாகப் பயிற்சி எடுத்தல் அவசியம். அவசர காலத்தில் எப்படி சமாளிப்பது? “”தீ” அணைப்பு உபகரணங்களை எவ்வாறு கையாளுவது? பதட்டம் அடையாமல் எப்படி அனைவருக்கும் வழிகாட்டுவது ஆகியவை இதில் அடங்கும். இதற்கான ஒத்திகையை அடிக்கடி முன்அறிவிப்பின்றி  நடத்தினால் அனைவரும் ஒரு விபத்து நேரத்திற்கு எந்தளவு தயாராக உள்ளார்கள் என்று அறிந்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

தீ விபத்து காலத்தில் மொட்டை மாடி அருகில் உள்ளது என அங்கு ஓடி விடலாமா?

தவறு; அது தப்பிப்பதைச் சிக்கலாக்கும். புகையும் உஷ்ணமும் மேல் நோக்கி எழும்.  எனவே அபாயம் அதிகம்.

மாடிப்படிகள்தவிர எஸ்கலேட்டர் உபயோகப்படுத்தலாமா?

கூடாது.  மேலும் மின் வசதி இல்லை.  ஆகவே, வேலை செய்யாது  எஸ்கலேட்டர் படிகளில் புகை பரவும்.  முடிந்த அளவு படுத்தபடி நகர்ந்து செல்வது புகை அபாயத்தில் இருந்து காப்பாற்றும்.

அருகே உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் நம்மைச் சுற்றி உள்ள கட்டிடங்களைப் பாதுகாப்பது எப்படி ?

நாம் உஷாராக இருக்க வேண்டும். “”தீ” அணைப்பு வீரர்கள் அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்வார்கள்.  நாம் கட்டிடங்களில் கருவிகளை இயக்கச் செய்து தயார்  நிலையில் இருந்து “”தீ” பரவாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் ஜன்னலை உடைத்துத் தப்பிக்கலாமா?

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் நாம் சிக்கிக் கொண்டால் தீ விபத்து ஏற்பட்டுள்ள தளத்திலும், அருகில் உள்ள தளங்களிலும் உள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விட வேண்டும். மீதித் தளங்களிலும் உள்ளவர்களைப் பாதுகாப்பான இடங்களில் பதட்டமில்லாமல் தங்க வைக்க வேண்டும்.அங்கிருந்து மீட்புபணிக் குழுவிற்குச் செல்போன் மூலமும், மேலும் புகை இல்லாவிடில் மட்டும் ஜன்லை திறந்து உதவிக்கு அழைக்க வேண்டும்.

எல்லா தளங்களிலும் பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், அபாயம் அளவு என்பது குறைவே  மீட்பு பணிக் குழு உள்ளதால் வரும் வரை அமைதியாக இருப்பது நன்று.