உள்ளத்திலிருந்து….

ha“கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே”,

என்றுரைக்கிறது தமிழ் நீதி நூல்.  ஆனால் இன்று நாம் பெரியோர்கள் உதவியால் அரசின் உதவியால், கடனால் எல்லாக் குழந்தைகளும் முழுக் கல்வி பெறக்கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நிறை கல்வி பெறுகிறோம்.  பெற்றும் பயனென்ன?

இன்று நமது குறிக்கோள் செல்வம் படைத்தல், இனிய நாகரீகமான வாழ்வு வாழ்தல் என்பதாம்.  அதனால், இந்நாட்டில்  மட்டுமின்றி,  திரைகடலோடியும் திரவியம் தேடுகிறோம்.  அதனால், தந்தை, தாய், மனைவி, மக்கள், என்று குடும்பத்தார் எல்லோரையும் பிரிந்து தனித்தனி வாழ்வு வாழ்கின்றோம்.  கூட்டுக் குடும்பம் என்ற தோப்பாக இருந்த நாம்  தனித்தனி மரங்களாக வாழ்கின்றோம்.

இவ்வாண்டு வந்த 10Šஆம் வகுப்பு 12Š ஆம் வகுப்புத் தேர்வுகளில் நிறைய மதிப்பெண்களுடன் 90 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மனதிற்கு மிகு மகிழ்ச்சி தருகின்றது.  அவர்கள் அனைவரும் மேனிலை, கல்லூரிக் கல்விகளுக்குச் செல்கின்றனர்.  மிகுதியாகத் தொழில்களும் நம் நாட்டில் உள்ளனவா? எல்லோருக்கும் வேலையுண்டா? கேள்விக்குறிதான்.

ஆகவே, எத்தொழில்கள் வேலைவாய்ப்புள்ளனவாக இருக்கின்றனவோ அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும்.  அப்போது தான் நம் குறிக்கோள் நிறைவேறும். இஃது ஒருபுறம் இருக்க கல்வியின் குறிக்கோள்

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்?” Š என்ற நிலையில் வள்ளுவர் கூறியுள்ளார். ஆகவே, கல்வியின் முழுமையான குறிக்கோள் இறைவனடி சேர்தலாகும்.  இது ஒன்று.

மற்றொன்று குறிக்கோளாக
“ஈன்று  புறந்தருதல்  என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
நல் நடை நல்கல் வேந்தற்குக் கடனே”என்று ‘பொன்முடியார்’என்ற பெண்பாற் புலவர் “புறநானூற்றில்” கூறியுள்ளார்.  அதனால் தாயால் வளர்க்கப்பட்டு, தந்தையால் அறிவும் பெற்ற ஒருவனை“நல்ல நடத்தையைக் கற்றுக் கொடுத்து, பண்புள்ள ஒரு சிறந்த குடிமகனாக ஆக்க வேண்டுவது அரசனது Š அரசாட்சியின் Š கடமையாகும்.
ஆகவே ஒரு நாடானது நல்ல குடிமக்களை உண்டாக்கும் பொறுப்பைத் தன்னிடத்துக் கொண்டுள்ளது.  அதனால், தவறில்லா ஒரு மனிதனை நாம் அரசால்தான் அடைய முடியும்.  இதனால் மக்கள் யாவரும் ஒளவையின் கூற்றுப்படி

“நாடா கொன்றோ ;  காடா கொன்றோ ;
அவலா கொன்றோ ;  மனையாகொன்றோ ;
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
என்ற நிலையில் பாரத நாடு முழுவதும் நல்ல குடிமக்கள் திகழும் படி செய்து இப்பாரத நாட்டை,

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வே  Š  நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே ”
என்ற பாரதியின் கொள்கையைக் கருத்தில் கொண்டு நாட்டை உயர்த்துவோமாக.  அத்துடன் கல்விக் கொள்கையாக, இறை நம்பிக்கையோடு, நல்லாட்சி நடத்தும் கல்விக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருங்கால மாணவர்களை உயர்த்துவோமாக.

“வாழிய செந்தமிழ்  !  வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
வந்தே மாதரம் !  வந்தே மாதரம்  !!  வந்தே மாதரம் !!!