உள்ளத்திலிருந்து……..

bha“காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வைகை பொருனை நதி- என
மேவிய யாறு பலவோடத் –  தி ரு
மேனி செழித்த தமிழ்நாடு” – பாரதியார்

பண்டு தொட்டு தமிழ் நாடு நல்ல பருவமழை பொழிந்து ஜீவநதிகள் இல்லாவிடினும் எக்காலத்தும் வற்றாத ஆறாக ஆறுகள் ஓடிக்கொட்டிருக்கும் நாடாக இருந்தது.  அத்தகைய நாடு மழையில்லாமல் நீரின்றி, ஆறுகள் புறப்பட்டு வருகின்ற அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், மலையாளம் அகிய மாநிலங்களை எதிர்பார்த்திருக்கும் நிலையில் உள்ளது.  அவர்களைத் தண்ணீர் தரும்படி மத்திய அரசையும், நீதிமன்றங்களையும் நாடிக்கொண்டிருக்கிறது.

இது இப்படியிருக்க இவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை கொட்டோ, கொட்டென்று கொட்டிவிட்டது.  அதனால் தமிழகத்தில் என்றும் ஓடாத ஆறுகளெல்லாம் ஓடிவிட்டன ; பெருக்கெடுத்து ஓடி விட்டன.  தமிழகத்துக் காவிரி, தென்பெண்ணை பாலாறு வைகை, தாமிரபரணி ஆகிய அனைத்து ஆறுகளும், அவைகளின் உபநதிகளும் கரை புரண்டு ஓடின; ஏரிகள் நிரம்பி வழிந்தன; பார்த்த இடமெல்லாம் நீராக ஆயின.
இதனால் பல பாடங்களை நாம் கற்றுக்கொண்டோம்.

1. நமது மாநிலத்திலேயே நமக்கு வேண்டுமளவு  நமக்கு நீர் உண்டு.  அவற்றை நாம் கடலுக்குச் செல்லாமல் முழுவதும் தடுத்து நிறுத்தி நமது நாட்டை நாமே செழிப்பாக்கலாம்.

2. பழைய ஏரிகளைப் பயன்படுத்தவேண்டும்.  வாய்க்கால்களைத் தூர்வாரி ஒழுங்கான வழி செய்ய வேண்டும்.

3. வாய்க்கால்கள் செல்லும் வழியை வீடுகள் கட்டி அடைக்கக் கூடாது.

4. அரசு பருவகாலத்தில் மக்கட்கு உதவத் தயாராயிருக்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதி, சென்னை, கடலூர், தாமிரபரணி ஆற்றுக் கரை, தூத்துக்குடி ஆகிய இடங்கள் பட்ட பாடு நாம் அறிந்த ஒன்று.  நூறு ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையை விட அதிகம் பெய்து, பல துன்பங்களைத் தந்து, சொந்த நாட்டிலேயே மக்களை அகதிகளாக்கியது மழை.  இதை உணர்ந்த நாம் இதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டோம். ஏரிகள் தூர்வாரவேண்டும், அணைகள் (கரைகள்) செம்மைப் படுத்தப் படவேண்டும். கால்வாய்கள் அடைபட்டு, தண்ணீர் தடுக்கின்ற இடங்களை பழைய வரைபடத்தை வைத்துப் பார்த்து அதைத் தடுக்கின்ற அத்தனை தடுப்புக்களையும் நீக்கித் தண்ணீர் ஒழங்காகச் செல்ல வழி செய்யவேண்டும்.  எங்கெங்கு விபத்துகள் ஏற்படுகின்றனவோ அங்கங்கு சென்று வேறுபாடு பார்க்காது உதவி புரிய வேண்டும்.  அரசு மட்டும்தான் என்றில்லை.  எந்தக் கட்சியும், எந்தச் சேவை மையங்களும், நிறுவனங்களும்  உதவி செய்ய முன்வந்தாலும் அதற்கு அரசு இடங்கொடுத்து “”மக்கள் வாழ்வுதான் தேவை” என்பதை உணர்ந்து செயல் படவேண்டும்.  அடுத்த ஆண்டு இந்த நிலை ஏற்படாதவகையில் இன்று முதலே ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு முதன்மை தந்து, அடுத்த ஆண்டு மழையில் தவிக்காதபடி செய்ய வேண்டும்.

இப்படிக் காலம்அறிந்து செய்தால்

“ஞாலம் கருத்தினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின் ”  – என்ற

வள்ளுவர் வாக்கை நாம் அடைந்து விட முடியும்.

மேலும்,பருவத்தோடு ஒட்ட ஒழுதல் திருவினைத்தீராமை ஆர்க்கும் கயிறு என்ற வாக்கிற்கிணங்க அரசு இப்பருவ காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு நல்ல உதவிகள் என்ற கயிற்றினைக் கொண்டு ஆட்சி தம்மை விட்டு நீங்காது தக்க வைத்துக் கொள்ளலாம்…