உள்ளத்திலிருந்து……..

pen“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”

உண்பவர்க்கு உணவுகளை விளையச் செய்தும், குடிப்பவர்க்குத் தண்ணீராகவும் (தானும் உணவாகவும்) இருப்பது மழையே யாகும்.  இத்தகைய மழை

“கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம்  மழை”

பெய்யாமல் உயிர்களைக் கெடுப்பதும் அவ்வாறு கெட்டவர்க்கு – தவித்த உயிர்களுக்குத் துணையாக நின்று பெய்து வாழ வைப்பது ஆகிய எல்லாம் வல்லது மழை.

இத்துடன் நிற்காது அளவு கடந்து பெய்து அழிக்க வல்லதும் மழையே யாகும்.  இதை இன்று நாம் தமிழ் நாட்டில் நன்கு காண்கிறோம்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சி முதல் பல மாவட்டங்களில் அளவு கடந்து 100 ஆண்டுகட்கு முன்பு பெய்த மழையைக்காட்டிலும் அளவு கடந்து பெய்து நகரங்களையயல்லாம் தீவுகளாக்கியுள்ளது. இவ்வாறு மழை பார்த்துப் பெய்தால் நம்மால் ஒன்றும்செய்ய இயலாது என்பது தெரிந்ததே.  இருந்தாலும் நாம் நமது மக்கள், பிற உயிர்கள் அனைத்தையும், ஏன்? பொருள்களையும் காக்க வேண்டியது நமது கடமையாகும்.  இதை அரசு நல்ல முறையில் செயல் படுத்தி, தம்மை உயர்த்திக் கொள்வது சிறந்த முறையாகும்.

உணவு, மருத்துவம், தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய அனைத்தும் செய்து மக்களைக் காப்பாற்றுவது இன்றியமையாததாகும்.  அவர்கட்கு மீட்பு வாழ்க்கையும் அமைத்துத் தரவேண்டும்.  இதற்கு, மாநில, மத்திய அரசுகள் வரிந்து கட்டிக் கொண்டு பணியாற்றவேண்டும். நமது அதிகாரிகளுடன் இராணுவமும் இணைந்து பணியாற்றுவது போற்றத்தக்கது.

இப்பேரிடர் நீங்கியதும் தமிழக அரசு வீணாகும் நீரை எப்படி வீணாகாது தடுக்கலாம் என்பதை ஆராய்ந்து ஏரிகளைத் தூர் வார்த்தும், தூர்ந்த கால்வாய்களைச் செப்பனிட்டும், ஒவ்வொரு பகுதிக்கும் எப்படிச் செய்தால் தண்ணீர் வெளியேறும் என்ற நிலைகளையயல்லாம் உணர்ந்து இந்த ஆண்டே செயல்படுத்துவது மிகமிக முக்கியம்.

சாலைகள் பராமரிப்பு, மின்சாரச் சரிபார்ப்பு, நதிநீர் இணைப்பு, புதிய ஏரிகள் அமைப்பு, புது கால்வாய்கள் வெட்டுதல் (அவிநாசிக் கால்வாய் திட்டம்) ஆகியவகைகளை, மத்திய அரசு தரும் தொகைகளைத் தக்கவழியில் பயன்படுத்தி – நாட்டை வளமுடையதாக்க, முதன்மையுடையதாக்க ஆவண செய்யும் நமது அரசு என நாம் எதிர்பார்ப்போமாக.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே.”
– பாரதியார்,

இவ்விதழில் ஒருங்கிணைந்த பண்ணையம் , பஞ்சகவ்வியம் தயாரிப்பு முறை, நெற்பயிர் காக்கும் தொழில் நுட்பம் ஆகிய சிறந்த நல்ல ஆக்க முறைகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன.  ஆகவே, இத்தொழில் முறைகளைப் பயன்படுத்தி, குறைந்த செலவில் விளைவித்து, நல்ல வாணிபம் செய்து விவசாயிகளாகிய நாம் உயர்வோமாக.

“முயற்சி திருவினையாக்கும்”
உழைப்பு உயர்வைக் கொடுக்கும்
அறிவு ஆக்கம் தரும்”
உழைக்க ! வாழ்க !! வளர்க!!!