உள்ளத்திலிருந்து…

pen‘கோவை வணிகம்’ தனது குறிக்கோள்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது.   வேளாண்மை, வணிகம், சுற்றுப்புறச் சூழல் ஆகிய இம்மூன்றும் நன்கு அமையவும் உயர்வடையவும் அதுதன் கடமையைச் செவ்வனே செய்து வருகிறது.  அதன் பலனும் மக்களிடத்துப் பிரதிபலிக்கிறது.

இவ்வாண்டு நடைபெறும் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே விவசாயத்திற்கு முன்னுரிமை தருகின்றன.  பருவச் சூழ்நிலை மாறிவரும் இக்காலத்தில் விவசாய நிலை உயர்வதற்கு உரிய மாற்றங்களைச் செய்து, விளையும் பொருள்களை நல்ல முறையில் ‘சந்தைப் படுத்தினாலே’ போதும் விவசாயம் உயர்ந்து விடும்.  அதில் முன்பு எப்படி ‘ கிராம சேவகர்’ களைத் கொண்டு விவசாயத்தை வளர்த்தார்களோ அதுபோலச் செய்தால், இயற்கை வழியில் பண்படுத்துதல், உரமிடுதல், நோய்ப் பாதுகாப்பு செய்தல், சந்தைப் படுத்துதல் ஆகியவற்றைச் செய்தால் இன்னும் விவசாயி உயர்நிலை அடைந்து வாழுவான்.  வேளாண்மையும் சிறக்கும்.  நம் நாடு உணவுத்துறையில் தன்னிறைவு அடைவதுடன் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

இவ்விதழ் இக்கருத்துக்களையயல்லாம் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.  வெட்டி வேர், மூங்கில் ஆகியவைகளைப் பாதுகாப்பு அரணாகப் பயிர் செய்து மண் அரிப்புத் தடுப்பு, வேலி அமைப்பு ஆகியவைகளுடன் நல்ல மகசூலையும் பெறலாம்.  அத்துடன் எண்ணெய் வித்துக்கள், ஊடுபயிர், தேனீயின் சிறப்பு ஆகிய இவைகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன.  அரசு இப்பணிகளுக்கு நல் ஒத்துழைப்புத்தந்து, வேளாண்மைத் துறையில் நன்கு காப்பீட்டுத்துறையை அமுல் படுத்தினால் நாடும் செழிக்கும் ;  நாமும் முன்னேறுவோம்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப  ; எண்ணி யார்
திண்ணிய ராகப் பெறின்”

–  குறள்