உள்ளத்திலிருந்து…

213pb0kd“எண்ணிய எண்ணியாங்கு எய்துப – எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின் – ” குறள்

எண்ணிய படி புது அமைச்சரவை தமிழ் நாட்டில் வந்தெய்தியுள்ளது மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில். வாழ்க ! தமிழகம் உயர்க !! மிளிர்க !!!

நிகர மெஜாரிட்டி பெற்று அமைச்சரவை அமைத்துள்ள முதல்வர் அவர்கள் விவசாயம், பள்ளி, மதுவிலக்கு, பெண்கள் நிலை ஆகியவற்றில் முதல் கையயழுத்திட்டு ஆட்சியைத் துவங்கியுள்ளார்கள். அவர்கட்குக் ‘கோவை வணிகம்’ சார்பில் வாழ்த்துக்கள். விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி மிகச்சிறப்பான ஒன்று; அது சிறு குறு விவசாயிகள் என்பதை நீக்கி அனைத்து விவசாயிகளுக்கும் என்று விரிவடையச் செய்து விவசாயம் ஓங்க வழி செய்வது மிகவும் நல்லது என்று பணிவன்புடன் ‘கோவை வணிகம்’ வேண்டுகிறது ; அதை நிறைவேற்றுமாறு பணிவுடன் வேண்டுகிறோம். ஏனெனில் உழவு செழித்தால் தான் நாடு வறுமையின்றி வாழும்.

“ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ; மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

மேலும் விவசாயம் சிறக்க பெய்கின்ற மழை நீரெல்லாம் கடலுக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு முதற் முயற்சிசெய்வது சாலச் சிறந்தது.

இன்று தமிழகத்தில் அஇஅதிமுக அரசு அமைய மிக உறுதுணையாக இருந்தது கொங்குமண்டலம். ஆகவே, இக் கொங்கு மண்டலம் சிறக்க கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள, நொய்யல், கெளசிக ஆறுகளைத் தூர்வாரி, அவைகளை சரிசெய்து நீர் ஏரிகளைத் தேக்க ஆவன உடனடியாகச் செய்தல் வேண்டும். பவானி, மோயாறு ஆகியவைகளை நன்கு பயன்படுத்த வேண்டும். ‘அத்திக்கடவு அவிநாசி’ த் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தி கொங்கு நாட்டை வளம் கொழிக்கும் நாடாக மாற்றவேண்டும். ஏனெனில் “ கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்” எனும் பழமொழிக்கு இணங்க கொங்குமண்டலம் வளம் கொழித்தால் வேண்டும்; தமிழகமே வளம் கொழிக்கும்.

அதுமட்டுமல்லாமல்கடலில் கலக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறக்கும் ஆறுகள் தமிழ் எல்லையிலேயே தடுத்து பவானி, நொய்யல், அமராவதி நதிகளுடன் இணைத்து, இன்னும் காவிரியிலும் பல தடுப்பணைகள் போட்டு, பாய்ச்சவும், மின்சாரம் எடுக்கவும் பயன்படுத்தி தமிழகத்தை வளம் கொழிக்கச் செய்து, மிளிரச் செய்ய அரசு ஆவண செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இவ்விதழில் வெண்டையைத் தாக்கும் நோய்களும் அவற்றை நீக்கும் வகைகளும் உரைக்கப்பட்டுள்ளன. மேலும், புலிகளால் ஏற்படும் நன்மைகளும், பளு இழுக்கும் மிருகங்கள் பற்றிய செய்திகளும், தென்னையில் ஊடுபயிர்களும், ஊடுபயிர்களை தோழமைப் பயிர்களாகக் கூறியுள்ள செய்திகள் அனைத்தும் படித்துக் கடைபிடிக்க வேண்டியவை என்பன போன்ற செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

“ காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி – என
மேவிய யாறு பல வோடத் – திரு
மேனி செழித்த தமிழ் நாடு”