உள்ளத்திலிருந்து…

obwglxxp“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் நம்அனைவர்க்கும் தாழ்வு”

பாரதி நமக்கு – பாரதத்திற்கு – எடுத்துக் கூறிய தாரக மந்திரத்தை நாம் மறந்து விடக்கூடாது. பலமொழிகள் நிறைந்த மாநிலங்களைக் கொண்டது நமது இந்திய நாடு. இன்று அவ்வம்மொழிக் குரிய கலை, பண்பாடு, நாகரிகம், வாழ்கை முறை அனைத்திலும் வேறு பட்டிருந்தாலும் “நாம் அனைவரும் இந்தியர்” என்ற ஒருமைப்பாடு எனும் நூலால் கோக்கப்பட்ட ஒரு நல்ல மணமுள்ள, கவர்ச்சியான மாலையாக வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால், இன்று அம்மாலை ‘நீர்’ என்ற ஒன்றினால், நூலறுந்து தனித்தனியாகச் சிதறுகின்ற நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. அவ்வாறு சிதற விடாது கட்டிக் காக்க வேண்டியது நமது கடமை.

நமக்கு எது கிடைத்தாலும் “பங்கித் தின்றால் பசியாறும்” என்ற நிலையிலுள்ள நாம் இன்று ஆற்று நீருக்காக மல்லுக் கட்டுகிறோம். இது ஆகாது.

நமது முன்னோர்கள் நீர் வகையில் எப்படி வாழ வேண்டுமென்று நமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள். இது வேளாண்மை செய்பவருக்கு நன்கு தெரியும். இருக்கின்ற நீரை ‘சரிதி’ போட்டு விவசாயம் செய்து வாழவழி காட்டியுள்ளார்கள். எந்த அளவு தண்ணீர் கிடைத்தாலும் கிடைத்த அதைப் பங்கிட்டு வேளாண்மை செய்வது தான் “சரிதி வழி” ஆகும்.

ஒன்று அம்முறையைப் பயன்படுத்த வேண்டும். அல்லது நதிகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்டு, செழிப்புள்ள பூமிகளில் பாய்ச்சி விளைச்சலை உண்டாக்கி வறுமை வராமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதை நடுவண் அரசு கடைப்பிடித்து, எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்த் தான் அந்தந்த மாநிலம் அதன் வழியில் இருக்கும்; இந்தியாவும் ஒன்றாக இருக்கும்.

“கங்கையில் ஒடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்ய முடியும்.”

தமிழகத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை நீர் முழுதும் கிழக்கு திருப்பிவிடப்பட்டு வளமான நாடாக்க முடியும். இதற்கு நதிகளை இணைக்க வேண்டும். நீரை வீணாக்காது பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதே உசிதம் ஆகும்.

“வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு.”

இவ்விதழில் “கீரை சாகுபடி” பற்றி விரிவாகவும், காடு வளர்ப்புப் பயிற்சி பற்றிச் சிறப்பாகவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளவை படித்துக் கடைப்பிடிக்க வேண்டியவை. அறிந்து வாழ்வோம்! வளர்வோம்!! உயர்வோம்!!!