உழவில்லா வேளாண்மை. – ஒளி

 u0vtqsz1 இயற்கை வேளாண்மையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மசானபு ஃபுகோகா அவர்கள். உழவில்லா வேளாண்மையை இவ்வுலகிற்குக் கற்றுத் தந்தவரும் ஆவார். இவர் ஜப்பான் நாட்டு விவசாயி. இவர் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவதற்கு முன், தனது 25 வயதில் யகோஹாமா கஸ்டமஸ் பீரோவிலுள்ள தாவர ஆய்வுப் ( PLANT PATHOLOGY ) பிரிவில் பணியாற்றினார். அடிப்படையில் இவர் ஓர் பட்டதாரி விவசாய விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.
    இவர் தனது ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்னும் புத்தகம் எழுதியதன் மூலம் இவ்வுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இந்தப் புத்தகத்தில் நான்கு வி­யங்களை வலியுறுத்தியுள்ளார்.
    1. மண்ணை உழுவதோ, புரட்டியயடுப்பதோ கிடையாது.
    2. வேதியல் உரங்களோ, தனியாக தயார் செய்யப்பட்ட தழையுரங்களோ பயன்படுத்தக் கூடாது.
    3. களையயடுப்பதோ களைக் கொல்லி பயன்படுத்துவதோ கிடையாது.
    4. பூச்சிக்கொல்லியை பயன்படுத்துதல் கிடையாது.

    மேலும், The Road Back To Nature, The Natural Way Of Farming போன்ற புத்தகங்களையும் இவ்வுலகிற்கு வழங்கியுள்ளார்.

    இந்த ஞானி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, சில தினங்கள் அவருடன் தங்கி பயிற்சி எடுத்து, உழவில்லா வேளாண்மையைத் தன் பண்ணையில் நடைமுறைபடுத்தி வருகிறார் திரு.மது.ராமகிருஷ்ணன் அவர்கள்.

    சுமார் 70 வயதான திரு.மது.ராமகிருஷ்ணன் அவர்கள் முதுநிலைப் பட்டதாரி,  எம்.இ. ப்ரொடக்­ன் இன்ஜினியரிங் முடித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் பேராசிரியராகச் சில காலங்கள் பணியாற்றி, பின்பு விருப்ப ஓய்வு பெற்று, 1975 ல் உரம் மற்றும் பூச்சி கொல்லி விற்பனை அங்காடியைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், 2002 முதல் 2008 வரை மேலாண்மைக் குழுவில் இருந்தது குறிப்பிடுத்தக்கது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்கிற கிராமத்திற்கு அருகே நரிகல்பதியில் இவருக்கு சுமார் 50 ஏக்கர் விவசாயப் பண்ணை ( சந்தோஷ் பார்ம்ஸ் ) நிலம் உள்ளது.

    இனி திரு.மது.ராமகிருஷ்ணன் அவர்கள் பேசுவார். 1992 ல் எனது தந்தை காலமானார், அப்போது முழுநேர விவசாயியாக மாறினேன். 1992 முதல் 1996 வரை விவசாய வரவு செலவு கணக்குகளைப் பார்க்கின்றேன். எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி – பண்ணையில் இருந்து எனக்கு கிடைத்த வருமானத்தைவிட செலவுகளே அதிகமாக இருந்தது.
    இப்படி ஒரு தொழில் செய்ய வேண்டுமா?
    இது சரியான வழிமுறைதானா? என்று பல கேள்விகள் என்னிடம் எழுந்தது.

    அந்தக் காலச்சூழலில் இயற்கை வேளாண்மை பற்றிப் பேச்சுக்களின் ஆரம்பகாலமாக இருந்தது. இயற்கை வேளாண்மையைப் பற்றி நிறைய புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். மசானபு ஃபுகோகா, நம்மாழ்வார், சுபாஷ் பாலலேக்கர், நாராயணரெட்டி (கர்நாடக மாநிலம்)… போன்ற அறிஞர் பெருமக்களின் புத்தகங்களைப் படித்தும், அனுபவ விவசாயிகளிடம் தொடர்பும் ஏற்படுத்திக் கொண்டேன்.

    இந்தச் சூழல்நிலையில் பொள்ளாச்சி பகுதியில் சுமார் 9 விவசாயிகள் ஒன்றிணைந்து இயற்கை வேளாண்மை பற்றிப் புரிதலுக்கு, எங்கள் தேடலைத் தொடங்கினோம். எங்கள் குழுவின் பெயர் நவரத்தினக் குழு, இதனால் நாங்கள் நவரத்தினங்களானோம் என்றார் புன்னகையுடன். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இயற்கை வேளாண்மை பற்றிய கற்றலுக்காகப் பயணம் மேற்கொண்டோம். சுமார் இரண்டு வருடங்களாக இந்தச் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

    இறுதியில், உழவில்லா வேளாண்மை வெற்றிக்கான பாதை என்று கண்டறிந்தோம். இரண்டு பிரச்சனைகள் வரும்,
    1. ஆரம்பகாலங்களில் நஷ்டம் ஏற்படும்
    2. மிகுந்த பொறுமையுடனும் முழுமனதுடனும் செய்திட வேண்டும்.

    ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தை படித்ததிலிருந்து மசானபு ஃபுகோகா அவர்களை நேரடியாக சென்று சந்திக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். 2002 ல் உத்தர்கான் மாநிலம், டேராடூனிற்கு வந்து 15 நாட்கள் பயிற்சி வழங்கினார். அந்த பயிற்சியின் பின்பு தான் இயற்கை வேளாண்மையைப் பற்றி முழுமையாகக் கற்றுக் கொண்டேன்.

    மசானபு ஃபுகோகாவிடம் அன்று சுமார் 150 பேர் பயிற்சி எடுத்துக் கொண்டோம். முதல் இரண்டு நாட்கள் மட்டுமே சந்தேகத்தைக் கேட்டறிந்தோம். பின்பு 15வது நாள் வரை யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரவில்லை. இத்தனைக்கும் ஒவ்வொரு நாளும் புதுப் புது தலைப்புகளில் தான் பாடம் இருக்கும். காரணம் எங்களுக்குப் பயிற்சி அளித்த விதம். நாங்கள் எத்தனை சந்தேகங்களைக் கேட்டாலும், அவரிடமிருந்து வரும் பதில் “see the forest”.
    ஐயா, உழவு எப்படி ஆழமாக ஓட்ட வேண்டுமா அல்லது மேலாக ஓட்ட வேண்டுமா
    “see the forest”
    ஐயா, தண்ணீர் எப்படி பாய்ச்ச வேண்டும்
    “see the forest”
    ஐயா, விதையை எப்படி சேமிக்க வேண்டும், எப்படி பக்குவப்படுத்த வேண்டும்
    “see the forest”

இயற்கையில் என்ன நடக்கிறதோ அதை நீ மீறக்கூடாது. இது தான் எங்களுக்கு அளித்த பயிற்சி. இயற்கைக்கு எதிராக எதையும் செய்யக் கூடாது. இதற்கு உதாரணமாக, வேலி வேளாண்மையைக் கூறுவார், பண்ணை நிலத்தில் இருக்கும் வேலி எவ்வளவு பசுமையாக இருக்கும், அங்கு யார் உழவு ஓட்டினார்கள்? யார் உரம் போட்டார்கள்? யார் தண்ணீர் பாய்ச்சினார்கள்? பூச்சிக் கொல்லி தெளிக்கப்பட்டதா?

ஏன் வருடம் முழுவதும் பசுமையாக இருக்கிறது? காரணம் இவை நூற்றுக்கு நூறு இயற்கையை நம்பி இருக்கிறது. இப்படி, தான் பயிற்சி எடுத்ததை மிகவும் சுவையுடன் நம்முடன் பகிர்ந்தார்.  

இனி பண்ணையைச் சுற்றுவோம்,
     பண்ணையைச் சுற்றிக் காண்பித்த படியே நம்மிடம் பேசினார். முதலில் மோனோகல்சர் மற்றும் இயற்கை வேளாண்மை பற்றி ஒரு புரிதலைப் பார்ப்போம்.

மோனோகல்சர்
    மோனோகல்சர் என்பது ஒரினப்பயிர் சாகுபடி. மோனோகல்ச்சரில் என்ன தவறு செய்கிறோம்,first law of science என்ன சொல்கிறது energy can neither be created
nor be destroyed. அறிவியலின் முதல் படி கூறுவது, ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்ற முடியுமே தவிர உருவாக்க முடியாது. உதாரணமாக : தக்காளியை மட்டுமே விதைத்தோம் என்றால், ஒரே சத்தை மட்டும் எடுத்து வளரும் பின்பு அந்தச் சத்து நிலத்தில் தீர்ந்தோ / பற்றாக்குறையாகவோ இருக்கும். அதேபோல் மற்றச் சத்துக்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கும்.

பாலிகல்சர் / பர்மாகல்சர் / இயற்கை வேளாண்மை  
    பர்மாகல்சரில், உதாரணமாக :  ஒரு தென்னை மரம், ஒரு பாக்கு மரம், ஒரு வாழை மரம், செடிகள் மற்றும் கொடி வகைகள் என பல்லினப் பயிர் சாகுபடிச் செய்யப்படும். இயற்கை வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும், காரணம் ஒவ்வொருப் பயிரும் ஒவ்வொரு விதமான சத்துக்களை எடுத்து வளரும். அதாவது பூமியில் உள்ளச் சத்துக்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துகிறோம்.     

    இங்கு இயற்கை வளங்களாக நிலம், நீர், நெருப்பு ( சூரிய வெளிச்சம் ), காற்று மற்றும் ஆகாயம் (பயிர் செய்யப்படும் இடம் ) போன்றவைகளை முழுமையாகப் பயன்படுத்தி சூழற்சி முறையை மேற்கொள்கிறோம். இப்படி பல பயிர்களைச் செய்வதற்குப் பெயர் ‘பல்லடுக்கு வேளாண்மை’. பல்லடுக்கு வேளாண்மையில் சூரிய வெளிச்சத்தை நன்கு அறுவடை செய்திட முடியும். தூய காற்றினால் மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெறுகிறது.

 களை
    களை என்பதை, விவசாயிகள் புரிந்துள்ளதே தவறான கருத்து. நாம் விளைவிக்கக் கூடிய பயிருக்கு எப்போது போட்டியாக ஒர் பயிர் வளருமோ அதைத் தான் களை என்று சொல்ல வேண்டும். தென்னந்தோப்பில் சின்ன சின்ன தாவரங்கள் எல்லாம் போட்டியே அல்ல. அதற்கு தேவையான சத்து வேறு, நீர்த் தேவை வேறு… சாகுபடி நிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே விவசாயிகளிடம் உண்டே தவிர எதற்காக களை எடுக்கிறோம் என்ற புரிதல் இல்லை.

    களை ஏன் படைக்கப்பட்டிருக்கிறது என்கிற
அடிப்படைத் தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த களையாக / தாவரமாக இருந்தாலும் மக்கிய பின்பு மண்ணிற்கு சத்துக்கள் கொடுக்கின்றன. ஒரிடத்தில் எந்தச் சத்து பற்றாக்குறையாக உள்ளதோ அந்த இடத்தில் அதே சத்துள்ள தாவரம் முளைத்து சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது. களைகளைப் பிடுங்கி வெளியயறிந்தால் அந்த மண்ணில் அச்சத்து பற்றாக்குறையாகவே இருக்கும். ஒரினப் பயிரில் களைத் தொந்தரவு இருக்கும், இயற்கை வேளாண்மையில் பல்லினப் பயிர் செய்யப்படுவதால் களைத் தொந்தரவு இருப்பதில்லை.

    பல்லினப் பயிரென்பது பல்லடுக்காகவும், கலப்புப் பயிராகவும் இருக்கும். இச்சூழலில் களைகள் இயற்கையிலேயே கட்டுப்படுத்தப்படும். இதற்குக் காரணம், எந்த ஒரு தாவரம் வளர்வதற்கும் இரண்டு அடிப்படைக் காரணங்கள் தேவைப்படுகின்றன,
    1. சூரிய ஒளி மற்றொன்று,
    2. நீர்.
    பல்லடுக்குப் பயிர் செய்யும் பொழுது சூரிய ஒளி நிலத்தில் படுவதில்லை. மேலும், சொட்டு நீர் / தெளிப்பு நீர் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதால் களைகள் முளைக்கும் வளர்ச்சியற்று / திறனற்று போகிறது. எனது பண்ணையில் சில களைகளைப் பிடுங்குவதற்குக் காரணம் கால்நடைகள் மேய்வதற்கு வசதி செய்து கொடுகின்றேன். சுமார் 20 நாட்டு மாடுகளை பண்ணைக்குள் மேய்த்து வளர்த்து வருகிறார். அதாவது கால்நடைகள் மேயாத தாவரத்தை ஆங்காங்கே

சிறுகுவியல்களாக்கப்படுகின்றன. அச்சிறுகுவியல்களை ஒரிடத்தில் குவித்து அதன் மீது சாணிப்பாலைத் தெளித்துக் காய்ந்த சருகுகளைப் போட்டு மூடி வைத்தால் போதும் மண்புழுக்கள் குவிந்து விடும். ஆரம்ப கால விவசாயிகள் இதுபோன்று செய்து சுமார் 45வது நாள் வெளியில் இருந்து மண்புழுக்களை வாங்கி இந்த பாதி மக்கிய எருவின் மீது விட்டால் நன்கு மண்புழுக்களும் உற்பத்தியாகும் விரைவில் உரமாகவும் மாற்றலாம்.  

    6 மாத பயிர்களுக்கு / காய்கறிப் பயிர்களுக்குக் களை எடுக்கத்தான் வேண்டும். களைகளை மீறி வளர்ந்த பின்பு களையயடுப்பது தேவையற்றதாகிறது. அப்படி எடுக்கும் களைகளை வெளியில் கொட்டுவதோ மற்றும் தீ வைப்பதோ கூடாது. களைகளை உரமாக மாற்ற வேண்டும். களைகளைப் பயன்படுத்துங்கள் என்கிறார்.

28 ஏக்கர் தென்னந்தோப்பை 5 பாகமாக பிரித்துள்ளேன்.
தென்னந்தோப்பில், முதல் பாகத்தில் கோகோ முக்கிய ஊடுபயிர், குருமிளகு , ஜாதிக்காய்
இரண்டாவது பாகத்தில் பாக்கு, ஜாதிக்காய், கோகோ
மூன்றாவது கறிப்பலா, கோகோ
நான்காவது மற்றும் ஐந்தாவதில் பழ     வகைகள், ஜாதிக்காய் மற்றும் கோகோ. பழவகைகள் – கொய்யா, நாவல், பப்பாளி என்று பயிர் செய்யப்பட்டுள்ளன.    

இடைவெளி
    இடைவெளியில் தான் பிரச்சனையே உள்ளது. தென்னைக்கு இடைவெளியாக 25மு25=625 சதுரஅடி சூரிய வெப்பம் கிடைக்க இடைவெளி விடுகிறோமே தவிர 625 சதுரஅடி பூமி தேவையில்லை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சூரியன் தாவரங்களுக்குத்தான் நண்பன், மண்ணுக்கு எதிரி.

    திரு.மது.ராம கிருஷ்ணன் அவர்கள் சந்தோஷ் பார்ம்ஸின்  ‘எல்லோருக்கும் இயற்கை வேளாண்மை’ என்கிற புத்தகம் எழுதியுள்ளார். மண்ணில் விளைவதை உண்ணும் அனைவருக்கும் புரிதல் வேண்டும் என்பதற்காகத் தான் இந்த புத்தகம் என்கிறார்.

ஆகவே, தென்னந்தோப்பில் சூரிய வெளிச்சத்தை
அறுவடை செய்கிறோம் மீதமுள்ள நிலத்தை பயன்படுத்திட வேண்டும். 65 % சூரிய வெளிச்சம் போதுமான பயிர்களைத் தேர்வு செய்து ஊடுபயிராக நடவு செய்ய வேண்டும், 50 % சூரிய வெளிச்சம் போதுமான பயிர், 45% அல்லது 40 % சூரிய வெளிச்சம் போதுமான பயிர் என்று தேர்வு செய்து ஊடு பயிர் செய்திட வேண்டும். இவை இடத்திற்கு இடம் மாறுபடும் ( மண் மற்றும் நீரின் தன்மை பொருத்து மாறுபடும் ).

    45% அல்லது 40 % சூரிய வெளிச்சம் போதுமான பயிரைத் தென்னைக்கு கீழே நடவு செய்ய வேண்டும். அதாவது தென்னங்கீத்து வழியாக ஊடுறுவும் சூரிய வெளிச்சம் போதுமான பயிர். உதாரணமாக : குறுமிளகு, இஞ்சி

    நெருக்கமாக நடவு செய்தால் சூரிய வெளிச்சம்
பற்றாமல் போகும், தூரமாக நடவு செய்தால் இடம் வீணாகப் போகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில்வர்ஓக் மரத்தில் குறுமிளகு சாகுபடி
    சில்வர்ஓக் மரத்து பட்டையில் வெடிப்பு இருப்பதால் குறுமிளகின் வேர் நன்கு பிடித்து ஏறும். வேறு எந்த மரத்திலும் இப்படி ஒரு பிடிப்பு இருக்காது. சில்வர்ஓக் மரத்திற்கு அடுத்த சிறந்த நட்பு மரமாக குறுமிளகிற்கு, பனை மரத்தை கூறலாம். சில்வர்ஓக் மரங்கள் பலனுக்கு வர சுமார் 20 ஆண்டுகள் பிடிக்கின்றன.

மதிப்புக் கூட்டுப் பொருள்
    இயற்கை முறையில் விளைவிக்கும் தேங்காய்களை மதிப்பூட்டியே சந்தையில் விற்பனை செய்து வருவது சந்தோஷ் பார்ம்ஸின் மற்றொரு சிறப்பு. தேங்காயை, எண்ணெய் எடுத்து விற்பனை, தேங்காய் எண்ணெயில் சோப்பு தயாரித்தல் என இரண்டு வகையான பொருட்களைத் தயார் செய்கிறார். நுகர்வோருக்குச் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும் என்பதற்காகத் தனது பண்ணை நிலத்திலேயே மரச் செக்கு அமைத்துள்ளார். சோப்பு தயாரிப்பதற்கும் சுத்தமான தேங்காய் எண்ணையே பயன்படுத்துவதால் மரச் செக்கு ஆலைக்கருகிலேயே சோப்பு தயாரிப்புக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

தேக்கு இலை
    தேக்கு மரத்தினுடைய துளிர் இலையை (சிறு செடி பருவம்) கசக்கினால் இயற்கையிலேயே சாயம் கிடைக்கும். நாங்கள் தயாரிக்கும் குளியல் சோப் எங்கள் தோப்பிலிருந்து கிடைக்கக் கூடிய இயற்கை விளை பொருளான தேங்காயிலிருந்து எடுத்துத் தயார் செய்து, சாயத்திற்கு தேக்கு இலைகளைப் பயன்படுத்துகிறோம்.

     சோப்பு தயாரிப்பதற்காகக் கேரள மாநிலத்தில் சுமார் 3 இடங்களில் பயிற்சி எடுத்து வந்தேன். அந்த பயிற்சிகள் அனைத்தும் இரசாயனங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுபவையாகும். ஒவ்வொரு இரசாயனத்திற்கும் மாற்றாக, இயற்கை பொருட்களைக் கண்டறிந்து, தற்போது 100 % இயற்கைச் சோப்பு தயாரித்து சந்தையில் விற்று வருகிறேன் என்றார்.

மருத்துவ குணம்
    தேக்கு இலை (துளிர் இலை) புண் மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றிக்கு சிறந்த மருந்தாக உள்ளது. தேங்காய் எண்ணையில் தேக்கந்தழைகளைப் போட்டுக் காய வைத்து அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்தினால் காயங்கள் ஆறுவதோடு தழும்புகளும் ஏற்படாது. தோளில் உள்ள செல்சை புதுப்பிப்பதால் தழும்புகள் ஏற்படுவதில்லை என்றார். இது போன்ற மருத்துவ குணமுடைய ஒவ்வொரு இயற்கைப் பொருட்களைக் கொண்டும் குளியல் சோப்பைத் தயாரிக்கின்றோம்.

    திரு.மது.ராம கிருஷ்ணன் அவர்கள் இயற்கை வழி வேளாண்மை குறித்து பயிற்சி வழங்குவதற்காக திறந்த வெளி பாட சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார். பண்ணைக்கு பயிற்சி பெற வரும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதற்காகவே இறவைப் பாசனம், சொட்டு நீர், தெளிப்பு நீர், ரெயின் கன், டிரஞ் இரிகே­ன் என்று பல வகையான தொழில்நுட்பங்களைத் தனது பண்ணையில் அமைத்துள்ளார்.

    ‘உழவில்லா வேளாண்மை’யின் தந்தை மசானபு ஃபுகோகா அவர்கள் 16 ஆகஸ்ட் 2008 ம் வருடம் இயற்கையுடன் கலந்தார். மசானபு ஃபுகோகா இவ்வுலகிற்கு வழங்கியது ஞான ஒளி.

                  மேலும் தொடர்புக்கு
                         திரு. மது. ராம கிருஷ்ணன்
                             94424 16543

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →