எரிசக்தி மரங்களிலிருந்து மின்சார உற்பத்தி

elec இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் எரிசக்தியின் பயன்பாடு அதிகரித்து கொண்டே உள்ளது. நகரமயமாதல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டினால் மின்சக்தியின் தேவை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலக நாடுகளில், இந்தியா எரிசக்தி உபயோகத்தில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தியின் பயன்பாடு 16 மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மின்சக்தி தயாரிக்கும் திறன் 84 மடங்கு அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த எரிசக்தி கொள்கை அறிக்கை 2005, கணக்கின்படி இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இன்னும் 25 ஆண்டுகளில் நாட்டின் மின்சார தேவைத் ஆறு மடங்காக அதிகரிக்கும். நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் குறைந்து கொண்டே வருவதால் பெருகி வரும் மின்சாரத் தேவையை, இந்த புதுபிக்க இயலாத ஆற்றல் வளங்களால் பூர்த்தி செய்ய இயலாது. எனவே மாற்று வழியாகப் புதுபிக்கதக்க ஆற்றல் சக்திகளான சூரிய ஒளி, காற்று, நீர், கடல் நீர் மற்றும் உயிரி எரிபொருள் போன்றவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுப்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உயிரி எரிபொருள் மட்டும் உலகின் 11 சதவீதம் முதல் நிலை ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் இது மூன்றில் ஒரு பங்கு முதல் நிலை ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்கிறது. உயிரி எரிசக்தி மூலம் குறிப்பாக மரங்கள் மற்றும் அதன் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பமானது பெருகி வரும் நம் மின்சாரத் தேவையைப்  பூர்த்தி செய்ய சிறந்த தீர்வாக உள்ளது.

காடுகளின் மின்சார உற்பத்தித்  திறன்

        உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் 1.5 டன் மரத்திலிருந்து ஒரு மெகாவாட் (MW)  மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மின்சாரத் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக உயிர் எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க 39 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டள்ளன.  அவை 360 மெகாவாட் மின் சக்தியை உற்பத்தி செய்யும் கொள்ளலவைக் கொண்டுள்ளன. அதில் சுமார் 14 நிறுவனங்கள் தற்பொழுது உயிரி எரிபொருள் மூலம் குறிப்பாக மரம் சார்ந்த மற்றும் வேளாண் கழிவுகளைக் (Agri Biomass Residues)  கொண்டு மின்சார உற்பத்தி செய்துவருகின்றன.

மூலப்பொருள்கள்

        மூலப்பொருட்களின் (Biomass Raw Materials) பற்றாக்குறைவினால் இந்நிறுவனங்களில் தொடர்ந்து மின்சக்தி உற்பத்தி செய்யும் திறனானது பாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் எரிசக்திக்கு பயன்படும் மூலப்பொருள்களை உருவாக்குவது மிகப்பெரிய பயனைத் தரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. தமிழகத்தை பொருத்தமட்டில் சுமார் 25 இலட்சம் ஹெக்டர் நிலங்கள் விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களாகவும் சுமார் 3 இலட்சம் ஹெக்டர் நிலங்கள் பலதரப்பட்ட தரிசாகவும் உள்ளன. இந்த நிலங்கள் எரிசக்தி வனத்தோட்டங்கள் மூலம் பயன்படுத்தப்பட்டால் மின்சார உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களை பெற முடியும். மேலும் வேளாண் கழிவுகள் மூலமும் எரிசக்திக்குத் தேவையான மூலப்பொருள்களை அதிக அளவில் பெறமுடியும்.

மின்சார உற்பத்திச் செய்யப்  பயன்படும் மரங்கள்

        வனக்கல்லூரியில் தொடர் ஆராய்ச்சியின் மூலமாக அதிக எரியும் திறன், குறைந்த புகை வெளியீடு மற்றும் குறைந்த சாம்பல் உற்பத்தியைப் பொருத்து சவுண்டல், சவுக்கு, மலைவேம்பு, தைலம், எருமரம், முங்கில் மற்றும் முள்ளில்லா வேலிக்கருவேல் போன்ற மரங்கள் எரிசக்தி உற்பத்திக்கு உகந்த மரங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பயன்கள்

        எரிசக்தி வனத்தோட்டங்கள் வளர்த்து அவற்றிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறையானது வளிமண்டலத்தில் பசுமை இல்லா வாயுக்கள் வெளிப்படும் அளவைக் குறைத்து உலக வெப்பமடைதலைத் தடுக்கிறது.

        உயிரி எரிசக்தி மூலம் தயாரிக்கப்படும் ஒரு அலகு (ஹிஸீவீt) மின்சாரம் வெளிப்படுத்தும் கரியமில வாயுவின் அளவானது நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பொழுது வெளிப்படும் அளவை விட 10 லிருந்து 20 மடங்கு குறைவாக உள்ளது.

        உயிரி எரிசக்தியைப் பயன்படுத்துவதினால் படிக வளங்களின் உபயோகமும் காடுகளை அழிக்கும் விகிதமும் குறைந்து மரம் வளர்ப்பதன் தேவை அதிகமாகிறது.அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வழி செய்கிறது

ஒப்பந்த முறை சாகுபடி

        மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிசக்தி மரங்களை ஒப்பந்த முறையில் சாகுபடி செய்வதற்கான திட்டத்தை நமது மாநிலத்தில் முதல் முறையாகத் தமிழ் நாடு வேளாண்பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும் மற்றும் ஆரோ மீரா எரிசக்தி நிறுவனமும் வடிவமைத்து, அதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

        இத்திட்டத்தின்படி எரிசக்தி நிறவனம் விவசாயிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும். அதன்படி எரிசக்தி நிறுவனம் சிறந்த மரக்கன்றுகளைக் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கும்.  விவசாயிகள் அந்த கன்றுகளை அறுவடை காலமான மூன்று வருடங்கள் பாதுகாத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும். மூன்று வருட முடிவில் இந்த எரிசக்தி மரங்களை எரிசக்தி நிறுவனம் தாங்கள் குறிப்பிட்டள்ள குறைந்தபட்ச ஆதார விலை அல்லது சந்தை விலை இவற்றில் எது அதிகமோ அதை விவசாயிகளுக்கு வழங்கும். மேலும், இத்திட்டம் இடைத்தரகர்களைத் தவிர்ப்பதால் விவசாயிகள் தங்கள் மரங்களுக்கேற்ற, சிறந்த விலையைப் பெற்று நல்ல இலாபம் காணலாம்.

உயிரி எரிசக்தி மரவளர்ப்பு மாதிரிகள்

        உயர் அடர்த்தி குறைந்த சுழற்சி (High Density Short Rotation)  கொண்ட எரிசக்தி வனத் தோட்டங்கள் என்பது வேகமாக வளரக்கூடிய மரங்களை மிகக் குறைந்த இடைவெளியில் வளர்ப்பதாகும். பொதுவாக உயர் அடர்த்தி குறைந்த சுழற்சி எரிசக்தி வனத்தோட்டங்களானவை பின் வரும் வெவ்வேறு வகையான இடைவெளிகளில் வளர்க்கப்படுகின்றன.

        இவ்வகை எரிசக்தி வனத் தோட்டங்களானவை சரியான கால இடைவெளியில் நீர்ப்பாசனம் மற்றும் உரமிட்டுச் மிகச் சிறந்த முறையில் வளர்க்கப்படுவதால் மிகக் குறுகிய காலத்திலேயே அதிக மகசூலை தருகின்றன. இதன் மூலம் மரங்களிலிருந்து மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மரம் சார்ந்த மூலப்பொருள்களைத் தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளமுடியும்.

        ஒப்பந்தமுறை எரிசக்தி மரச் சாகுபடி மற்றும் எரிமரங்கள் சந்தைப்படுத்துவதற்குக் கீழ் கண்ட நிறுவனத்தை அணுகவும்.

நிர்வாக இயக்குநர்

ஆரோமீரா எரிசக்தி நிறுவனம்,

11\29 ஷஃபி முகமது சாலை,

ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006.

தொலைபேசி: 95000 89094.

முனைவர் கா.த.பார்த்திபன்

பேராசிரியர் மற்றும் தலைவர்.

வன இனப்பெருக்கவியல் துறை,

வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்.

மேட்டுப்பாளையம் – 641 301.

About Dr K T பார்த்திபன் TNAU - Forest College

View all posts by Dr K T பார்த்திபன் TNAU - Forest College →