எளிய முறையில் மண்புழு உரம் தயாரித்தல்…

earthஅன்பான வாசகர்களுக்கு வணக்கம்.  உழவர்களின் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் “பொங்கல் திருநாளை” மிகவும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.  விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் சூரியனை வழிபடுவதும் இந்த காரணத்திற்காகத்தான்.  சென்ற மாதம் இயற்கை விவசாயம் பற்றிப் படித்தது உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்குமெனை நம்புகிறேன்.  அது பற்றிய தங்களது கருத்துகள், சந்தேகங்கள் மற்றம் தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த மாத இதழில் “விவசாயிகளின் நண்பன்” என அழைக்கப்படும் ‘மண்புழு’ வினால் உருவாக்கப்படும் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் பற்றி எளிய முறையில் தெரிந்து கொள்வோமா?

மண்புழு உரம்

நம்மிடையே பெரும்பாலானோருக்கு மண்புழு உரம் போட்டால் மண் நல்ல வளமானதாக இருக்கும், பயிர் செழித்து வளரும் என நன்கு தெரியும்.  ஆனாலும் மண்புழுவை மக்க வைத்து அதிலிருந்து வரும் உரமே மண்புழு உரம் என பலர் நினைத்துக்கொண்டு உள்ளனர்.  ஆனால் அது தவறு.  மண்புழுவினைப் பயன்படுத்தி இயற்கையாகக் கிடைக்கும் இலை, தழைகளையும், மாட்டுச் சாணத்தையும் போட்டு அதனை அந்த புழுக்கள் செரிமானம் செய்து அவைகள் வெளியிடும் கழிவுப்பொருளே மண்புழ உரம் ஆகும்.

மண்புழு உரத்தின் பயன்கள்

ஏனைய இயற்கை உரங்களை விட மண்புழு உரம் அதிக சத்துக்களைக் கொடுக்க வல்லது.

மக்கிய எரு, தொழு உரத்தினை விட அதிக அளவு தழைச்சத்தினை (NITROGEN) மண்ணிற்குக் கொடுக்கிறது.மண்ணில் நுண்ணுயிரிகளின் வேலையினை அதிகரிக்கச் செய்கிறது.

மண்புழு உரத்துடன் அதன் முட்டைகளும், சிறிய புழுக்களும் இருப்பதால் அவை மண்ணில் பெருகி அந்த மண்ணை நல்ல நிலைமைக்குக் கொண்டு செல்கிறது.

அதிக வடிகால் உள்ள மண்ணில் நீர்பிடிக்கும் தன்மையினை அதிகரிக்கிறது.
களிமண் அதிகமாக இருந்து வடிகால் குறைவாக உள்ள மண்ணில் வடிகால் தன்மையை அதிகரிக்கிறது.மண்ணில் போடப்படும் மற்ற எரு, உயிர் உரங்கள் போன்றவைகளைச் செடிகளுக்கு நன்கு கிடைக்கும்படி செய்கிறது.

எல்லா வகையான பயிர்களுக்கும், எல்லா வகையான கால நிலைகளிலும் பயன்படுத்த முடிகிறது.

மண்புழு உரங்களைப் பயன்படுத்தும் போது சாதாரணமாக நாம் போடும் தொழு உரம் அல்லது மக்கிய எருவின் அளவினைக் குறைத்துக் தேவையான அளவு மட்டும் இடலாம்.  இதனால் அதிக அளவிலான தொழு உரத் தேவையினைக் குறைக்கலாம்.மண்புழு உரம் தயாரிக்கும் முறை

மண்புழு உரத்தினை பெரிய அளவில் வியாபார நோக்கில் தயார் படுத்தலாம்.  நமது வீட்டுத் தோட்ட அளவிற்கு மட்டும் பயன்படும் வகையில் குறைந்த செலவில் சிறிய அளவில் தயார் செய்யலாம்.  மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  நமது தேவையைப் பொறுத்து பெரிய அளவு அல்லது சிறிய அளவிலான தொட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில் தொட்டியின் அடியில் சிறிய துவாரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.  அதனைத் தேவைப்படும் போது திறந்து மூடும் வகையில் சிறிய கல், கட்டை அல்லது குழாய் கொண்டு மூடி வைத்துக் கொள்ளவும்.

அடிப்புறத்தில் கூழாங்கற்களைப் போட்டு, சிறிது மணல் போட்டு நிரப்பவும்.வீட்டுக் காய்கறி மற்றும் பழங்கள் கழிவுகளை அடியில் இட்டு, இலைகள் மற்றும் தோட்டக் கழிவு தழைகளை மேலே போடலாம்.

மாட்டுச் சாணத்தினை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து அதன் மேலே தெளித்து விடவும்.

50 முதல் 100 மண்புழுக்களை அந்த தொட்டியில் விடவும்.

பூவாளி கொண்டோ அல்லது கைகளால் தண்ணீரை அதன் மேலே தெளித்து விடவும்

தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில்  சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொண்டு வரவும்.

நாம் போட்டிருந்த காய்கறி மற்றும் பழங்களின் கழிவு அளவு குறைந்து கொண்டு வரும்.  அதன் மேலே இன்னொரு அடுக்கு வீட்டுச் சமையலறையில் கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்கள் கழிவுகளைச் சிறிய துண்டுகளாக்கி மேலே போடலாம்.  சில நாட்கள் தரையில் அப்படியே போட்டு விட்டு, பின்னர் எடுத்து மண்புழு உரத் தொட்டியில் இடலாம்.

தொட்டியில் நாம் இட்டுள்ள மண்புழுக்கள் அந்தக் காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகளை உண்டு, செரித்து, பின்னர் அதன் கழிவாக்கி சிறிய சிறிய உருண்டை வடிவில் மேற்பரப்பில் இடும்.

45 நாளிலிருந்து 60 நாட்களில் மண்புழு உரத்தினை அதன் மேற்பரப்பில் சிறு சிறு குவியல்களாக இடும்.  அதனைத் தினசரி எடுத்து, சலித்து தோட்டத்திற்குப் போடலாம்.

பச்சைச் சாணத்தினைத் தொட்டியில் போட்டால் அதில் அனைத்து மண்புழுக்களும் வந்து ஒட்டிக் கொள்ளும்.  அதனை எடுத்து அடுத்த முறை உரம் தயாரிக்கத் தொட்டியில் போட்டுப் பயன்படுத்தலாம்.

என்ன வாசகர்களே, எளிய முறையில் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் பற்றித் தெரிந்து கொண்டீர்களா?  பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.  உங்களது கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

அடுத்த மாத இதழில் இயற்கை உரமிடும் முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

About ராம்குமார் S

View all posts by ராம்குமார் S →