கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல் கொஞ்சம் வேளாண்மை…..

enமேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குச் சரிவுகள் மழை மிகு பிரதேசங்களாக உள்ளன. கேரள மாநிலம், தமிழகத்தின் சிறு பகுதிகள், கடற்கரை கர்நாடகப் பகுதிகள் இதில் அடங்கும். இப்பிரதேசங்களில் மழைக்காடுகள் அதிகம். மழைக்காடுகள் (Rain Forest) எனப்படும் இக்காடுகளில் உள்ள மரங்கள் அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பம் காரணமாக மிக உயரமாக வளரக் கூடியவை.

தென்மேற்குப் பருவமழை மூலம் அதிகமான மழையை இப்பகுதிகள் பெறுகின்றன. காற்றில் ஈரப்பதம் மிகுந்திருப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலையின் இப்பகுதியில் மிகமிக அபூர்வமான ஆர்க்கிட் மலர்களை (orchid Flower) முக்குருத்தி வனப்பகுதிகளில் காணலாம். அமைதிப் பள்ளத்தாக்கு, அப்பர் பவானி, முக்குருத்தி வனப்பகுதிகள் கடும் கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டு வருவதால் இன்றும் இத்தகைய வனங்களைப் பெற்றுள்ளோம்.

Flora And Funa என்று ஆங்கிலத்தில் சொல்ல கூடிய தாவர மற்றும் விலங்கு வகைகள் அதிக அளவில் இந்த மழைக்காடுகளில் உள்ளன.

ராஜ நாகங்கள், மழைக்காடுகளின் மூங்கில் புதர்களில் அதிகம் காணப்படுகின்றன. இவை மூங்கில் புதர்கள் இன்றி இவைகளால் அடைகாக்க இயலாமையால் இவை அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த மழைக் காடுகள் யானை, காட்டு மாடுகள் போன்றவைகளுக்கு அடைக்கலமாக உள்ளன. தொடர்ந்து வரும் பருவ மழையை வைத்தே யானைகள் இடம் பெயருகின்றன.

இவை பல ஆயிரம் ஆண்டுகளாக சற்றேரக்குறைய ஒரே வழியில் இடம் பெயருகின்றன. இதுதான் யானை வழித்தடம்  (Elephant Corridor) எனப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாகக்கப்பட்ட தேயிலை, காப்பி… பெருந்தோட்டங்களும்… அதைத் தொடர்ந்து தோன்றிய உல்லாச விடுதிகளும், யானைகளைத் தடம் மாறச் செய்து மனித மிருக மோதலை அதிகப்படுத்தி விட்டன.

நீதிமன்றங்கள், முதுமலை, பண்டிப்பூர் முத்தங்கா தேசிய பூங்காக்கள் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரப் போக்குவரத்தையே தடை செய்திருப்பதன் மூலம் நிலைமையின் தீவிரத்தை உணரலாம். அதிக ஒலி மற்றும் ஒளிகள் விலங்குகளை மிரள வைத்து இனப்பெருக்கம் கூட பாதிக்கப்படலாம்.

பாதுகாக்கப்பட்ட வனச்சரணாலயங்களில் யூக்கலிப்டஸ் மற்றும் தேக்கு மரங்களை நட்டு வளர்ப்பது மிகமிக வேதனையானக்குரிய ஒன்று. ஏற்கனவே நாம் கூறியபடி மேற்கண்ட தாவரங்களால் அங்குள்ள விலங்குகளுக்கு நன்மை ஏதும் இல்லை. மாறாக தீமைகளே அதிகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அந்நிய தாவரங்களை உடனே அகற்றினால் வன விலங்குகளுக்குப் பேருதவியாக அமையும்.

இன்று Nilgiri Tahr எனப்படும் நீலகிரி வரையாடுகளுக்கு ஏற்ற உணவின்மையால், அவை அருகி முக்குருத்திப் பகுதியிலும், கேரள மாநிலம் இரவிகுளம் தேசியப் பூங்கா ஆகிய இடங்களில் மட்டும் வாழ்கின்றன. இதற்குக் காரணம் நாம் புல்வெளிகளை அழித்து அவற்றின் உணவையே இல்லாமல் செய்ததே ஆகும். தரமான காடுகள் என்பவை மலை உச்சியில் அமைந்த புல்வெளிகளே ஆகும். இவை மலைகளின் நீர்த் தொட்டிகள், இவற்றை அழித்து அந்நிய மரங்களை வணிக நோக்கிற்காக அரசு நட்டதன் விளைவு வனப்பகுதி அதிகரித்தும், மழை அதிகரிக்கவில்லை. தமிழக அரசின் தேசிய விலங்கான வரையாட்டிற்கு ஏற்பட்ட கதி மற்ற விலங்குகளுக்கும் ஏற்படாமல் தடுத்து, நம் சந்ததியினரையும் காப்பது நமது கடமை.

இனி வேளாண்மை…

வேளாண்மை என்றுமே உலகில் முக்கியதுவம் பெற்றுவந்துள்ளது. கி.பி. 1773-ல் ஐக்கிய அமெரிக்க குடியரசிலுள்ள பாஸ்டன் துறைமுகத்தில், வரி தொடர்பான பிரச்சனை, பின்பு அமெரிக்க புரட்சியாக மாறி பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்கா ஐக்கிய நாடு உருவானது. இதை, ‘பாஸ்டன் தேனீர் விருந்து’ என வரலாறு குறிப்பிடப்படுகிறது.

1740-41-ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் ஐயர்லாந்தில் (Ireland) உருளைகிழங்கில் ஏற்பட்ட பின் கருகல் நோய் காரணமாக பெரும் பஞ்சம் ஏற்பட்டு இலட்சக்கணக்கானோர் மாண்டனர் (பூஞ்சாண நோய்க்கான மருந்துகள் அப்போது கண்டு பிடிக்கப்படவில்லை).

உயிர் பிழைத்த மக்கள் அமெரிக்கா சென்று குடியேறினர். அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரும் இப்படி குடியேறிய மக்களுள் ஒருவர். ஆகவே தேயிலையும், உருளைக் கிழங்கும் இன்று உலக வல்லரசை உருவாக்கியது என்றால் மிகையாகாது.

நமது நாட்டில் 1943-44 ல் வங்கப் பஞ்சம் ஏற்பட்டு சுமார் 1.5 மில்லியன் முதல் 4 மில்லியன் மக்கள் உணவின்றி மடிந்தனர். பர்மாப் பகுதியில் ஐப்பானியர் முற்றுகை, உணவு தானியங்களை பிரிட்டிஷ் அரசு ஏற்றுமதி செய்தது மற்றும் நெல்லை “Brown Rust” என்ற பூஞ்சாண நோய் தாக்கி நெற் பயிரை அழித்தது ஆகியவை பஞ்சத்துக்கு முக்கிய காரணங்கள். ஆகவே விஞ்ஞானிகள் இந்த மனித குல அழிவைத் தடுக்கப் பயிர் நோயியல் “Plant Pathology” என்கிற துறையை ஏற்படுத்தித் தீர்வை காண முயன்றனர்.

சுதந்திரம் பெற்ற போது, அரசு சுமார் 40 கோடி மக்களுக்கு உணவளிக்க முடியாமல் திணறியது. இன்று 120 கோடி மக்களுக்கு உணவளித்தது போக ஏற்றுமதியும் செய்கிறோம். பல கோடி மக்களின் கல்லறையின் மீது பல ஆயிரம் விஞ்ஞானிகளின் அற்பண உணர்வில் கண்டுபிடிக்கப்பட்டவை தான் பூஞ்சாணக் கொல்லிகள். ஆனால், விவசாயிகளுக்கும் விற்பனையாளருக்கும் தெளிவான விளக்கங்கள் சென்று சேராமையால் இன்று உணவில் நச்சுத் தன்மை அதிகமாகி உணவே வி­மாக மாறிவிட்டது.

வேளாண்மை படித்தவர்கள் கண்டிப்பாக ஒரு வருடம் ஒரு கிராமத்தில் அரசுப் பணியாற்றினால் மட்டுமே பட்டம் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும் (மருத்துவத் துறையில் உள்ள நடைமுறை போன்று). இன்று பூஞ்சாணக் கொல்லி அதிக அளவு உபயோகத்தால் நன்மை செய்யும் பூஞ்சைகளையும் அழித்து, தீமை செய்யும் பூஞ்சைகளுக்கு எதிர்ப்புத் திறன் அதிகமாகி நோய்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

விவசாயப் பெருமக்களே! கூடுமான வரை இயற்கை எதிர்ப் பூசணங்களை (சூடோமோனாஸ், டிரைக்கோடர்மா விரிடி… போன்றவை) விதை நேர்த்தி முதல் அறுவடை வரை உபயோகியுங்கள், நிலைமை தீவிரமாகி பொருளாதார சேதார நிலை ஏற்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்குள், குறிப்பிட்ட காலத்திற்குள் உபயோகிக்க வேண்டும். இரண்டு பூசணக் கொல்லிகளை கலக்காதீர்கள். தயாரிப்பாளர் தரும் அறிவுரைப் படிவத்தைப் படித்துப் பார்க்கவும்.

‘போடோ கலவை’யை நீங்களே தயார் செய்து பூஞ்சாணக் கொல்லி உபயோகத்தைத் தவிர்க்கலாம். போடோ கலவை நல்ல பூசணக் கொல்லியாகச் செயல்படக் கூடியது. ஆனால், ஆரம்ப நிலையில் தான் நன்கு செயல்படும். முற்றிய நிலையில் அல்ல.

போடோ கலவை (Bordeaux Mixture) தயாரிப்பு முறை.
1 கிலோ காப்பர் சல்பேட், 1 கிலோ சுண்ணாம்பு மற்றும் 100 லிட்டர் நீரில் கலந்து தயாரிக்கலாம்.

‘மயில் துத்தம்’ என்னும் காப்பார் சல்பேட் மற்றும் சுண்ணாம்பைத் தனித்தனியே கலந்து, உபயோகிக்கும் போது மட்டுமே கலக்க வேண்டும். பிளாஸ்டிக் கொள் கலன்களில் மட்டுமே கலக்க வேண்டும். ஏனெனில், இக்கலவை உலோகங்களுடன் வேதி வினை புரியகூடியவை. கலவையை ஒரு கத்தி அல்லது பிளேடு கொண்டு சோதித்து, உபயோகிக்கலாம். அளவுக்கு அதிகமான போடோ கலவை உபயோகம் நிலத்தையும், மீன்களையும் பாதிக்கக் கூடியவை. ஐரோப்பாவில் அங்கக வேளாண்மைத் தோட்டங்களில் சில வேளைகளில் உபயோகிக்கிறார்கள்.

மேலும் தொடர்புக்கு,
திரு. மரியா ப்ரான்சிஸ்
94884 85892.

இன்னும் கொஞ்சம் உண்டு…

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →