கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை.- அறிந்துகொள்வோம்.

eagle சுற்றுப்புறச்சூழல் என்பது இன்று அதிகம் பேசப்படும் வார்த்தைகளில் ஒன்று எனலாம். உண்மையில் நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சூழல் சீர்கேட்டைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

சூழல் சீர்கேடு எங்கே இருந்து தொடங்கியது என்றால், மருத நிலம் என்ற வயலும் வயலைச் சார்ந்த பகுதிகளின் காடுகளை அழித்து மக்கள் குடியேறியதிலிருந்து தொடங்குகிறது. ஏனெனில் குறிஞ்சி மற்றும் முல்லை என்ற மலைகள், காடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் பெரிய அளவில் காடுகளை அழிக்காமல் பயிர் செய்யலாம்.

வரலாற்றுப் பதிவேட்டின் படி சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் புலியைப் போராடிக் கொன்றதாக உள்ளது. ஆக அக்காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் புலிகள் வாழக்கூடிய அளவில் மிகப்பெரிய காடுகள் இருந்துள்ளன. ஆனால் இன்று காடுகள் அற்ற மாவட்டமாக சிவகங்கை உள்ளது.

காடுகள் இல்லாது போனதால் மெல்ல மெல்ல வாழத் தகுதியற்ற தரிசு / பாலை வனமாக உலகில் பல இடங்கள் மாறி வருகின்றன. தார் பாலை வனத்தின் கிழக்கு எல்லையில் போதிய மரங்கள் இல்லாமையால் காற்றால் அடித்து வரப்பட்ட மணல் துகள்களால் மெல்ல டெல்லியை நோக்கி விரிவடைந்து கொண்டுள்ளது.

அதே போல தென் மாவட்ட கடற்கரைகளின் அருகே நிறைய பனை மரங்கள் இருந்தன. இம்மரங்கள் கடல் காற்றின் வேகத்தைக் குறைத்து மணல் துகள்கள் பரவாமல் தடுத்தன. மேலும் நிலத்தடி நீர் மட்டத்தை ஏதோ ஒரு வகையில் பராமரித்து வந்தன. இன்று பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்ததால் கடற் காற்றால் அடித்து வரப்பட்ட மணற் துகள்கள் மெல்ல நல்ல நிலங்களைப் பாழ்படுத்தத் தொடங்கிவிட்டன.

பனை மரங்களை அதிகப்படுத்த அனைவரும் முன் வர வேண்டும். புவி வெப்பமயமாக்கல் பற்றி அனைவரும் பேசி வருகிறோம். குளிரூட்டி ((Air Conditioner)) ல் உள்ள CFC மற்றும் மீத்தேன் வாயு போன்ற வாயுக்கள் நேரடியாக ஓசோன் படலத்தைத் தாக்கக் கூடியவை.

மேலும், பசுமைக்குடில் விளைவை ஏற்படுத்தும் (Green House Effect) வாயுக்களை கட்டுப்படுத்துவதில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடையே முரண்பாடுகள் உள்ளன.

தொழிற்சாலை கழிவுகளால் 17% பாதிப்பு மட்டுமே ஏற்படுத்துகிறது. வீட்டுக்கழிவுகள், விவசாயக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், நகர்புறக் கழிவுகள், உயிரியல் கழிவுகள் போன்றவைகள் 83% பாதிப்பை தருகின்றன.

தொழிற் சாலைக் கழிவுகளைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்கள் உள்ளன. மற்ற சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளுக்கு அவ்வளவாகக் கட்டுப்பாடுகள் இல்லை (மருத்துவக் கழிவுகளைத் தவிர).

வீடுகளில் உபயோகப்படுத்தும் டிடர்ஜெண்ட் எனப்படும் சலவைச் சோப்புக் கழிவுகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்த கூடியவை.

ஆகாயத் தாமரை நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என்றால் அங்கு நீர் நிலைகள் மாசுபட்டுள்ளன எனப் பொருள். வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள், காகங்கள் மிகவும் குறைவாக இருக்கும் ஊரின் காற்று, மண், மற்றும் நீர் மாசு பட்டுள்ளன எனலாம்.

காடுகளில் இறந்த விலங்குகளை சாப்பிடும் கழுகுகள் குறைந்ததால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கழுகுகள் திடீரென குறைந்ததன் காரணம் ‘டைக்ளேஃபிநேகி’ மருந்து செலுத்தப்பட்ட இறந்த கால்நடைகளின் சடலங்களை உண்டதே என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மரங்களை வளர்க்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம், ஆனால் அந்தந்த மண் சார்ந்த மரங்களை வளர்ப்பது அதை விட முக்கியம்.

நகர்புறங்களில் ஆல மரம், அரச மரம் போன்ற அதிக ஆக்ஸிஜன் வெளியிடும் மரங்களை நட வேண்டும். இவைகள் கரியமில வாயுக்களை ஈர்த்துக் கொள்வதால் புவி வெப்பமயமாக்கலுக்கு ஒரு தீர்வாகக் கருதலாம்.

சமீப காலமாகப் புலிகள் தொடர்பாக அனேக செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. புலிகள் குட்டி யானைகளையும், காட்டு மாடுகளையும் (Gaur) வேட்டையாடுபவை. புலிகள் குறைவால் யானைகளும், காட்டு மாடுகளும் பெருகியது மனிதர்களுக்கு எவ்வளவு தொல்லை என அனைவரும் அறிந்திருப்பர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் பகுதி அதிக வெப்பமும் வறட்சியும் கொண்ட முட் புதர்க் காடுகளாகும். ஆனால் அண்டையில் உள்ள கர்நாடகப் பகுதியில் குளிர்ச்சியும் நீர் வளமும் கொண்ட வெப்பமண்டல இலையுதிர் காடுகளாக உள்ளன.

மிக முக்கிய காரணம் கர்நாடகப் பகுதியில் FICUS இன மரங்களான அரச மரம் அத்தி மரம் ஆல மரம் அதிகம். தமிழக அரசும், மக்களும் வனப்பகுதிகளில் உள்ள யூக்கலிப்டஸ் மரங்களை அழித்து மேற் கண்ட மரங்களைக் காலம் கடத்தாமல் காடுகளில் நட வேண்டும். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தேவையான உணவு கிடைக்கும். வெப்பம் குறையும், உலக வெப்பமய மாக்கலுக்குக் காரணமான கரியமில வாயுவைப் பெருமளவுக்குக் குறைக்கும்.

வெப்பம் அதிகரிக்கும் போது நீர்நிலைகளில் ஆக்ஸிஜன் கரைந்துள்ள அளவு குறைவால் நீர்வாழ் உயிரினங்கள் மடியும். மேலும் புதிய புதிய நோய்கள் உருவாகும். துருவப் பகுதிப் பனிக்கட்டிகள் உருகுவதால் பல நாடுகள் நகரங்கள் மூழ்கும்.

காற்றில் தொழிற் சாலை புகையில் கலந்துள்ள கந்தகத்தால் மேகத்தில் உள்ள ஈரப்பதத்தில் வேதி வினை புரிந்து கந்தக அமிலமாக மாறி அமில மழை பெய்யும். இதனால் அனைத்துக் கூட்டமைப்புகளும், பயிர்களும், காடுகளும் பாதிக்கப்படும்.

வெப்பத்தை ஏற்படுத்தும் பசுமைக் குடில் வாயுக்கள்
1. Co2 – கார்பன் டை ஆக்ஸைடு
2. CH4 – மீத்தேன்
3. N2O – நைட்ரஸ் ஆக்ஸைடு
4. CFC – குளோரோ ஃபுளுரோ கார்பன்

Co2 – வாகனப் புகை, மற்றும் எரிக்கும் போது வெளியாகும். பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி, தனி நபர் வாகனத்தைக் குறைத்தால் Co2 வைக் குறைக்கலாம்.

CH4 – மீத்தேன், நொதித்தலால் ஏற்படுகிறது. சொட்டு நீர் மூலம் நெல் சாகுபடி செய்தல், சாண எரிவாயுவை அதிகப்படுத்துதல் மூலம் ஓரளவு குறைக்கலாம்.

N2O-எரிபொருட்கள் மூலம் வெளியிடப்படுகிறது.

CFC – குளிரூட்டிகள் அதிகம் இவ்வாயுவை வெளியிடுகின்றன.

மேற்கண்ட வாயுக்கள் அதிகமாகி ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் சூரியனின் நேரடி கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாகி ரத்தப் புற்றுநோய், தோல், நுரையீரல், முடி பாதிப்பு, நரம்பு சம்மந்தப்பட்ட நோய்கள், கண் நோய்கள் ஆகியவை தோன்றுகின்றன.

தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள் அழிவதால் மகசூல் பாதிக்கப்படும். நுண்ணுயிர் பாதிப்பால் சூழல் சமநிலை பாதிக்கப்படும்.

கெட்ட நுண்ணுயிர்களின் வீரியம் அதிகரித்து மனிதர்கள், விலங்குகள், தாவரங்களைத் தாக்கி, பலத்த சேதத்தை ஏற்படுத்தும்.

ஒலி மாசுபாடு இன்று மனிதனால் மட்டுமே ஏற்படுவதாகும். 90 டெசிபல் அளவுக்கு மேலானதை இரைச்சல் (Noise) என்கிறோம். அதிக இரைச்சல் ஒரு மாசுபாடாகும். குறிப்பாகக் கருவிலே உள்ள குழந்தைகளை அதீத ஒலி பாதிக்கக் கூடியது. மரங்கள் ஒலிகளை உள்வாங்கக் கூடியது. மரங்கள் குறைவால் ஒலி மாசுப்பாடு அதிகரித்து விட்டது.

சுற்றுப்புறச்சூழல் மாசுப்பாடு அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதனை நாம் வீட்டிலிருந்தே துவங்கலாம்.

சூழல் சீர்கேட்டின் கொடிய விளைவுகள்
1. காற்று நஞ்சாதல், அதனால் ஏற்படும் நோய்கள்.
2. மண் மலடாதல் அதனால் வறட்சி, பஞ்சம் ஏற்படல்.
3. நீர் இன்மையால் பாலை வனங்கள் தோன்றுதல்.
4. அதிக வெப்பம், அதன் தாக்கத்தினால் பல உபாதைகள் ஏற்படல்.
5. அமில மழை.
6. அதீத மழை வெள்ளம் ஏற்படல்.
7. அதீத வறட்சி ஏற்படுதல்.
8. புதிய புதிய நோய்கள்.
9. பருவம் தவறி பெய்யும் மழை.

சுற்றுச்சூழலை நாம் காத்தால், அது நம் சந்ததியைக் காக்கும்.

இனி வேளாண்மை,

வேளாண்மையில் மிக முக்கிய பிரச்சனையாகக் கருதப்படுவது களைகளாகும். உண்மையில் களைகள் இருந்த இடத்தில் அவற்றை அழித்துவிட்டு, பயிர்களை வைத்துவிட்டு, அதைப் பிரச்சனையாக கருதுகிறோம்.

களைகளை கூடுமானவரை, வளியற்ற நிலையில், மக்கச் செய்து (ANAEROBIC – காற்று இல்லாமல்) பயிர்களுக்குக் கொடுத்தால் நுண்ணூட்டச் சத்து குறைவால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு எனச் சொல்லப்படுகிறது.

மேலும் களைகள் மண் வளத்தைக் காட்டும் கண்ணாடி எனலாம். களைகளை கண்டிப்பாக மக்கச் செய்ய வேண்டும். இல்லையேல் விதைகள் மூலம் அதீத தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எருக்கஞ் செடி வளர்ந்த நிலத்தில் போரான் குறைபாடு இருக்கும். அந்த எருக்கஞ் செடியைக் கம்போஸ்ட் செய்து கொடுத்தால் போரான் குறைபாடு நீங்கிவிடும்.

ஆக இயற்கை பிரச்சனையையும், தீர்வையையும் அருகருகே வைத்துள்ளது.

மேலும் தொடர்புக்கு,
திரு. மரியா ப்ரான்சிஸ்
94884 85892
இன்னும் கொஞ்சம் உண்டு…

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →