கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை.- அறிந்துகொள்வோம்.

AGசுற்றுப்புறச்சூழல் மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகமாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. இம்மலைகளில் காலநிலை மாற்றமே இதற்கு ஆதாரமாக உள்ளது. சூழல் சீர்கேட்டில் அரசின் பங்கு கணிசமாக உள்ளது. காப்புக் காடுகளை அழித்து யூக்கலிப்டஸ் மரங்களை நீலகிரி மலை மட்டுமல்லாது கொடைக்கானல், சத்தியமங்கலம் தலமலை மற்றும் மூணார் பகுதிகளில் நட்டு தற்போது நீர் வற்றிய ஆறுகள் உருவாக மூல காரணமாகும்.
இதனால் யானைகள் குடிநீரின்றி குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து அனேக உயிர்கள் பலியாகிறதைக் காண்கிறோம். இப்போதாவது வனத்துறையில் காப்புக் காடுகளிலிருந்து ( சுமார் 1,500 எக்டேர் ) யூக்கலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும்.

சீமைக்கருவேல மரம் அகற்ற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது போல, யூக்கலிப்டஸ் அகற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது அனைவரின் கடமை, இல்லையேல் தமிழகம் பாலைவனமாக மாறுவது தவிர்க்க முடியாதாகிவிடும்.
இன்று புவி வெப்ப மயமாக்கலால் எல்லோரும் பாதிக்கபட்டு கொண்டிருக்கிறோம். புல்வெளிகள் அற்ற காடுகளைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகள் குளிர்ச்சிக்குப் பதில் வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருக்கின்றன.ஊட்டி – மைசூர் சாலையில் சாந்தி நல்லா என்ற இடத்தில் சோலைக் காடுகளையும் (Shola Forest) புல்வெளிகளையும் ஒருங்கே கொண்டுள்ளதைக் காணலாம். இப்புல்வெளிகள் நீராவிப் போக்கால் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மேலும் மண்ணின் அங்ககக் கரிமத்தை அதிகரித்து மண்ணரிப்பை தடுப்பதால், சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கிறது. மழைக் காலங்களில் நீரை உள்வாங்கி ஆண்டு முழுவதும் ஆறுகளுக்கு நீரை வழங்கி வருகிறது.புலிகள், நீர் நிரம்பிய இப்புல்வெளிகளில் மேயும் விலங்குகளை வேட்டையாடி வந்தது. வனக்கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் இப்புல்வெளிகளை அழித்து அதில் யூக்கலிப்டஸ் வகை மரங்களையும், தேக்கு மரங்களையும் நட்டதால் தாவர உண்ணி விலங்குகள் இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், புலிகள் போன்ற ஊன் உண்ணிகளும் இடம் பெயர்ந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு இரைகிடைக்காமையால் வருகின்றன.
மேலும் மூங்கில் மரங்கள் பூ பூத்து அரிசி உண்டான உடன் மடிந்து விடும். இந்நிகழ்வு சுமார் 30 வருடங்களுக்கொரு முறை நிகழும். கடந்த இரு ஆண்டுகளாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல பகுதிகளின் மூங்கில்கள் மடிந்து, யானைக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டு மனித குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன.

ஆகவே தற்சமயம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காடுகளில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் எங்கெங்கு புல்வெளிகள் வனப்பகுதியில் இருந்தனவோ, அதே வகைப் புல்வெளிகளை அந்நிய மரங்களை அகற்றி, அவ்விடத்தில் உருவாக்க வேண்டும்.

அழிந்து போன மூங்கில் புதர்களை மீண்டும் உருவாக்கி யானைகளை இடம் பெயராமல்     காடுகளுக்கு உள்ளேயே உணவு கிடைக்கச் செய்யலாம். இதனால், தமிழகத்தின் வளம் நிச்சயம் மேம்படும்.

இனி வேளாண்மை,

இயற்கை வழி வேளாண்மையும் தேனீ வளர்ப்பும்

நவீன வேளாண்மையில் இரசாயன நஞ்சுகள் இன்றி பயிரைப் பயிர் பகைவர்களிடமிருந்து காக்க இயலாது என்று ஆகிவிட்டது. ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு, பூச்சி நோய் கட்டுப்பாட்டில் பிற முறைகளின் அவசியம் பற்றி வலியுறுத்துகின்றது. மேலும் பூச்சிகளால் ஏற்படும் சேதம் பயிரில் பொருளாதார சேத நிலையினைத் தாண்டும் போது மட்டும் தேவையின் அடிப்படையில் தெரிந்து செயலாற்றும் இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றது.

ஆனால், இயற்கை வழி வேளாண்மை இரசாயன இடுபொருட்கள் இல்லாது உணவு உற்பத்தி செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நோக்கு, தேனீ வளர்ப்பு செழிக்கவும், சிறக்கவும் வழி வகுக்கின்றது, இரசாயன நஞ்சுகளின் பயன்பாட்டால் நலிவுற்ற தேனீக்கள் இயற்கை வழி வேளாண்மையை மேற்கொள்வதால் செழிக்கும் என அறிந்து உணர்ந்து செயல்பட்டால் சிறந்த விளைவுகள் தோன்றும்.

தேனீக்கள் நலிந்தது ஏன்?

பயிரைத் தாக்கும் பூச்சிகளை முற்றிலுமாக அழித்து விட வேண்டும் என்ற ஒரே நோக்குடன், அப்பூச்சிகளின் இயற்கை எதிரிகள் மற்றும் பயிரில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட உதவும் தேனீக்கள் போன்ற பூச்சிகளின் நலன் பற்றிக் கருதாது இரசாயன நஞ்சுகளை கண் மூடித்தனமாகவும் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தியதால் பல கேடுகள் தோன்றியுள்ளன.

நாம் முற்றிலுமாக அழிக்க நினைத்த பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டு நஞ்சிற்கு அஞ்சாத பூச்சிகளாகி விட்டன. பயன்படுத்திய நஞ்சுகள் பயிரில் தங்கி உணவின் தரத்தைக் குறைத்துவிட்டன. ஒன்று போனது ஆனால் மற்றொன்று வந்தது என்ற ரீதியில் புதிது புதிதாகப் பூச்சிகளின் தொந்தரவு அதிகமானது மற்றும் சுற்றுச்சூழல் மாசுபட்டது.

குறிப்பாகப் பயிர்கள் பூத்திருக்கும் தருணத்தில் பயிர்ப் பாதுகாப்பிற்குக் கூடுதலாக இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தியதால் விளைந்த மற்றொரு பெரிய கேடு எது தெரியுமா?

பயிர் விளைச்சலைப் பல மடங்கு கூட்டவல்ல வேளாண்மைத் தேவதைகள் என்று போற்றப்படும் நமது உற்ற நண்பர்களான தேனீக்களையும், இரசாயனப் பூச்சிக் கொல்லிகளுக்கு இலக்காகி அழியச் செய்து விட்டோம்.

இயற்கையில் பொந்துகளில் வாழும் அடுக்குத் தேனீக் கூட்டங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் பயிர்ப் பாதுகாப்பில் இரசாயன நஞ்சுகளை இடுபொருளாகப் பயன்படுத்தியதே ஆகும்.

கிராம அளவில் சிறப்புற நடைபெற்று வந்த தேனீ வளர்ப்பு படிப்படியாகக் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் இரசாயன நஞ்சுகளை மட்டுமே நம்பிப் பயிரைப் பாதுகாக்க நாம் எடுத்த நடவடிக்கைகளே.

பூச்சிகளின் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படாது தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துகிறோம். இவை அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்களையும் பிற பூச்சிகளையும் கொல்ல நேரிடும் போது பூச்சிகளை மட்டுமே அயல் மகரந்தச் சேர்க்கைக்கு நம்பியிருக்கும் பயிர்களில் மிகப்பெரிய மகசூல் இழப்பிற்கு வித்திட்டுவிடுகின்றன.

நம் பயிரை நாடி வரும் நண்பர்கள் யார்? மற்றும் பகைவர்கள் யார்? என்று பகுத்தறிந்து செயல்படாமல் நமது நண்பர்களாகிய தேனீக்கள் மற்றும் பூச்சிகளின் இயற்கை எதிரிகள், பயிரில் கூடுதலாக நடமாடும் தருணத்திலும் பூச்சிக் கொல்லிகளைத் தெளித்து இயற்கைச் சமநிலையைச் சீரழித்து விட்டோம்.

செள செள போன்ற பயிர்கள், தேனீக்களையே முற்றிலுமாக மகரந்தச் சேர்க்கைக்காக நம்பியிருக்கும். அப்பயிர்கள் பூக்கும் தருணத்தில் வயலில் பூச்சிக் கொல்லிகளைத் தெளித்து பூச்சிகளை அழிப்பதாக எண்ணித் தேனீக்களை முற்றிலுமாக அழித்து ஒரு காய் கூட மகசூல் பெறத் தவறிய சில விவசாயிகளின் அனுபவம் தேனீக்களின் தேவையை நமக்கு வலியுறுத்துகின்றது.

பாதிக்கப்படும் விதம்

பூச்சிக் கொல்லிகள், தேனீக் கொல்லிகளாகவும் இருப்பதால் பூச்சிக் கொல்லிகள் தேனீக்களைப் பெருமளவு பாதிக்கின்றன.
இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் எவ்வாறு தேனீக்களைப் பாதிக்கின்றன என்பதைப் பற்றி நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
தேனீ நடமாட்டம் பூத்திருக்கும் பயிரில் உள்ள போது பூச்சிக் கொல்லி தெளிப்பதாலும் குறிப்பாகத் தூள் பூச்சிக் கொல்லிகளைத் தூவுவதாலும் தேனீக்களின் உடல் மீது நஞ்சு நேரடியாகப் பட்டு தேனீக்கள் வயலிலோ வரும் வழியிலோ அல்லது கூட்டிற்கு வந்த பின்னரோ இறக்கின்றன. தேனீக்கள் பூச்சிக் கொல்லி தெளிக்கப் பட்ட பயிரிலிருந்து நஞ்சு கலந்த மதுரம் மற்றும் மகரந்தத்தைத் திரட்டிச் சேகரிக்க நேரிடுகின்றது. இதனால் இளந்தேனீக்கள் மற்றும் வளரும் புழுக்கள் காலப்போக்கில் இறக்க நேரிடுகின்றன. இவையல்லாது, இராணித் தேனீயின் செயல்பாடும் குன்றி தேனீக் கூட்டமே அழிய நேரிடுகின்றது.

களைக் கட்டுப்பாடிற்கு இரசாயனக் களைக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் களைகள் முற்றிலுமாக அழிகின்றன. இதனால் தேனீக்கள் மதுரவரத்து இல்லாத அல்லது குறைவான காலங்களில் களைச் செடிகளிலிருந்து மதுரம் மற்றும் மகரந்தம் சேர்க்க இயலாது போகின்றது. இதனால் உணவின்றித் தேனீக் கூட்டங்கள் நலியும் நிலையும் ஏற்படுகின்றது.

தேனீயால் பலன் பெறும் பயிர்கள்

இயற்கை வேளாண்மையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. இவ்வகைப் பயிர்களின் கூடுதல் உற்பத்திக்கும் தேனீக்களின் சேவை தேவையாக உள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிப் பயிர்களின் தரமான மகசூலுக்குத் தேனீக்கள் வழி வகுக்கின்றன.

பழங்கள் மற்றும் காய்களின் வடிவம் எடை மற்றும் ருசி அயல் மகரந்தச் சேர்க்கையினால் கூடுகின்றது. ஆப்பிள், பீச், பிளம், செர்ரி, பேரிக்காய், ஸ்ட்ரா பெர்ரி, ஏப்ரிகாட் போன்ற மலைத் தோட்டப் பழரகங்கள், மா, பெருநெல்லி போன்ற பழ மரங்களிலும் கொசுத் தேனீக்கள் சிறப்புறச் செயலாற்றி பழ உற்பத்தி அளவைக் கூட்டுகின்றன.

வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்த நாட்டு வெள்ளரி, சீமை வெள்ளரி, தர்பூசணி, முலாம் பழம், பரங்கிக் காய், சுரைக்காய், பூசணிக்காய் போன்ற பயிர்களில் ஆண் பூக்களும், பெண் பூக்களும் ஒரு செடியில் தனித்து இருப்பதால் இவ்வகைக் காய்கறிகளில் தேனீக்களாலே அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகின்றது. எனவே இப்பயிர்களில் மகசூல் சிறக்கத் தேனீக்கள் அவசியம்.

காரட், முட்டைக் கோஸ், பூக்கோசு, பிரக்கோலி, முள்ளங்கி, கொத்தமல்லி போன்ற பயிர்களின் விதை உற்பத்திக்கு தேனீக்களின் மகரந்தச் சேர்க்கைச் சேவை இன்றியமையாததாகும்.பயறு வகைகளில் குறிப்பாகத் துவரை, கொள்ளு, குத்து அவரை போன்ற பயிர்களின் மகசூல் தேனீக்களால் கூடுகின்றது.எண்ணெய் வித்துக்களின் தரம், எண்ணெய் அளவு மற்றும் மகசூலை மேம்படுத்துவதிலும் தேனீக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சூரியகாந்தி, எள், பேய் எள், கடுகு, தென்னை போன்றவை தேனீக்களால் பயன் பெறும் பயிர்களாகும்.    குதிரை மசால் போன்ற தீவனப் பயிர்களின் விதை உற்பத்திக்கும் தேனீக்கள் அவசியம் தேவைப்படுகின்றது.ஏலக்காய், காப்பி போன்ற மலைப் பயிர்களின் கூடுதல் விளைச்சலிற்கும் மகசூலின் தர மேம்பாடடிற்கும் தேனீக்கள் பெரிதும் உதவுகின்றன.

வெற்றிக்கு சில யுக்திகள்

இயற்கையில் காணப்படும் மலைத் தேனீக் கூட்டங்களை அழிக்கக் கூடாது.கொம்புத் தேனீக் கூட்டங்களை கிளையுடன் வெட்டி வந்து புதருக்குள் அல்லது மரத்தில் வைப்பதன் மூலம் இயற்கை வழி வேளாண் பண்ணைகளில் அயல் மகரந்தச் சேர்க்கையைக் கூட்ட இயலும்.

அடுக்குத் தேனீ இனங்களைப் பெட்டியில் வைத்து வளர்க்க வேண்டும். மதுர வரத்து மற்றும் மலர் ஆதாரம் கூடுதலாக உள்ள இடங்களில் மட்டும் இத்தாலியத் தேனீக்களை வளர்க்கலாம் பிற இடங்களில் வளர்க்க ஏற்ற தேனீ இனம் இந்தியத் தேனீயே. மலைப் பகுதிகளில் மலைரக இந்தியத் தேனீக்களை மட்டுமே வெற்றிகரமாகப் பெட்டிகளில் வளர்க்கலாம்.மா மற்றும் பெருநெல்லித் தோட்டங்களில் கொசுத் தேனீக்களை மரப் பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம்.

காடுகளுக்கு அருகில் உள்ள நிலங்கள் மற்றும் இயற்கைத் தேனீக் கூட்டங்கள் கூடுதலாக உள்ள இடங்களில் வெற்றிகரமாகத் தேனீ வளர்க்க இயலும்.

தேனீ வளர்ப்பை மேற்கொள்ள முறையான பயிற்சி அவசியம். பயிற்சிக்குப் பின்னர் தேனீ வளர்ப்பை முதலில் குறைந்தது இரண்டு தேனீக் கூட்டங்களுடன் தொடங்கிய பின்னர் விரிவுபடுத்த வேண்டும். ஓராண்டு காலமாவது ஓரிடத்தில் சிறிய அளவில் தேனீ வளர்ப்பை மேற்கொண்டு ஆய்வு செய்த பின்னரே ஓரிடம் தேனீ வளர்ப்பிற்கு உகந்ததா இல்லையா என முடிவு செய்ய இயலும்.
உணவு வரத்து போதுமான அளவு இல்லாத காலங்களில் தேனீக்களுக்குச் சர்க்கரைப் பாகு கொடுத்துப் பராமரிக்க வேண்டும்.

இயற்கைப் பண்ணைகளில் ஓரிடத்தில் வைத்துத் தேனீ வளர்ப்பை மேற்கொள்ளும் போது குறைந்த அளவே தேன் மகசூல் கிடைக்கும். பயிர் மகசூலைக் கூட்டுவதில் தேனீக்கள் ஆற்றும் பங்கினையும் தேனீ வளர்ப்பால் நாம் பெறும் ஆதாயத்தை மனதில் கொள்ள வேண்டும்.

இயற்கையோடு இயைந்து வாழும் பூச்சியினம் தேனீயினம். இதனை உணர்ந்து தான் புத்தர் பிரான் தேனீக்கள் எவ்வாறு மலரைச் சிறிதும் துன்புறுத்தாமல் மதுரத்தை எடுக்கின்றனவோ அதுபோல அறிவுள்ள மனிதர்களும் இயற்கைக்கு ஊறு விளைவிக்காமல் வாழ்வார்கள் என்றுள்ளார். இத்தகைய சிறப்பு மிக்க தேனீக்களையும் பேணி வளர்த்து இயற்கை வழியில் வேளாண்மை செய்வதே புத்திசாலித்தனமாகும்.

மேலும் தொடர்புக்கு,
திரு. மரியா ப்ரான்சிஸ்
94884 85892

இன்னும் கொஞ்சம் உண்டு…

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →