கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

   jlmkx2ig பொதுவாக வனப்பகுதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
    1. உள் வனப்பகுதி – Core Forest
    2. வெளி வனப்பகுதி – Outer Forest
    3. புற வனப்பகுதி – Most Outer Forest

உள் வனப்பகுதி
உள் வனப்பகுதிகளுக்குள் மனிதர்களை அனுமதிப்பதில்லை. இப்பகுதியின் அளவைப் பொருத்தே ஒரு நாட்டின் வளம் தீர்மானிக்கப்படுகிறது. செயற்கை ஏற்பாடுகள் ஏதுமின்றி இயற்கையை இயற்கையாக விட்டுவிடுவது இப்பகுதியின் சிறப்பு.

பல இனத் தாவர வகைகள் தான் இப்பகுதியின் செல்வம். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உள்வனப்பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்கள் நட்டதன் விளைவாய் இன்று இப்பகுதிகளில் தாவரச் செறிவு ( பல இனத்தாவர வகைகள் ) குறைந்து வெளி வனப் பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது.

தீபகற்ப இந்தியாவின் ஆக்ஸிஜன் தொழிற்சாலையாகவும் நீராதாரப் பகுதிகளாகவும் இப்பகுதிகள் விளங்குகின்றன. இப்பகுதியில் இயற்கையை மீட்டெடுக்க, யூக்கலிப்டஸ்   மரங்களை அரசு அகற்ற, அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.

வெளி வனப்பகுதி
வெளி வனப்பகுதி செறிவு அடர்த்தி குறைந்த வனப்பகுதி. இது உள்வனப்பகுதியின் சிதைந்த வனப்பகுதியாகும். இரவில் மட்டுமே இங்கு விலங்குகள் நடமாட்டம் இருக்கும். மனிதர்கள், வாகனப் போக்குவரத்து இருக்கும்.

 இப்பகுதியில் செயற்கையான ஏற்பாடுகள் அவை சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்றவையயன அறிந்தால் மட்டுமே அவை தற்போது அனுமதிக்கப்படுகின்றன. இவ்வகை வனப்பகுதிகளில் செறிவு மிக்கதாக்கித் தரம் உயர்த்தினால் நாட்டிற்கு நலம்.

இதனால் இடம்பெயரும் விலங்குகள் எண்ணிக்கை குறையும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வளத்திற்கு, அதன் செறிவுமிக்க வெளி வனப்பகுதியே காரணமாகும். தற்சமயம் சுற்றுப்புறச்சூழல் சுற்றுலாவிற்குப் பிரபலமடைந்து வருகிறது.

 இதில் நகர்ப்புற மக்களை, பழங்குடியினர் உதவியோடு வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்கின்றனர். இந்த சுற்றுப்புறச்சூழல் சுற்றுலாவில் பிளாஸ்டிக் போன்ற வனத்திற்கும், விலங்குகளுக்கும் தீமை செய்யும் எந்தப் பொருட்களையும் பயன்படுத்துவதுமில்லை; அனுமதிப்பதுமில்லை.

இதில் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களையும் இணைத்து, வரும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நன்மை பயக்கும்.

புற வனப்பகுதி
இவை கிராமங்கள் நகரங்கள் குடியிருப்பை ஒட்டிய முற்றிலும் சிதைந்த வனப்பகுதியாகும். சிறு புதர்களையும் சீமைக்கருவேல மரம் போன்ற கொடிய மரங்களைக் கொண்ட பயனற்றபகுதியாகும்.

கிராமத்து மக்களின் வெள்ளாடுகள் மற்றும் மாடுகளால் தொடர்ந்து இவ்வனப்பகுதிகள் சிதைக்கப்படுகின்றன. வன விலங்குகள் இவ்வனப்பகுதியில் நிரந்தரமாகத் தங்க இயலாது. ஏனெனில் நீர் வளமோ மறைவிடமோ அவ்வளவாக இருப்பதில்லை. இதை அழிவின் பிடியில் உள்ள காடுகள் எனலாம்.

தமிழகத்தில், அனேக பகுதிகளில் உள்ள சிறுசிறு குன்றுகள் மலைகளில் இந்தத் தரம் குறைந்த காடுகள் காணப்படுகின்றன. சங்கத் தமிழ் இலக்கியக் குறிப்புகளில் பெரும் காடுகளாக குறிப்பிடப்பட்ட பகுதிகள், தற்சமயம் புதர்களாகக் காட்சியளிக்கின்றன.

அந்தந்தப் பகுதி மக்கள், கரடுகள் எனப்படும் சிறுகுன்றுப் பகுதிகளில் அரசு, ஆல், பூவரசு, கொன்றை மரங்களை மழைக்காலங்களில் நடலாம். புளிய மரங்களை தவிர்த்தல் நலம். இதனால் வெப்பம் தணிந்து சூழலியல் ( Eco System ) மேம்பாடடையும்.

சமயத்தின் பெயரால் ஆல், அரசு, வேம்பு மரங்கள் காப்பற்றப்படுவது இனிப்பான செய்திதான். இருப்பினும் அதையும் தாண்டி இன்னும் செயல்படவேண்டும். ஒன்றும் வளராத வளம் குன்றியப் பகுதிகளில் குறைந்தபட்சம் பனம்பழங்களைச் சேகரித்து வீசிவிட்டுச் செல்லுங்கள்.

அவைகள் சில ஆண்டுகளில் பனங்காடுகளாக மாறும். பனங்காட்டு நரி என்ற சொற்றொடர் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் பனங்காடு எங்கே உள்ளது?

பனை மரங்களை அழிக்காமல் ; சவுக்கு, தேக்கு, மூங்கில் போன்ற வேளாண் நிலங்களில் பயிரிடப்படும் மரங்களை மக்கள் பயன்படுத்தலாம். சாலைத் திட்டங்களுக்காகத் கர்நாடகாவில் அழிக்கப்பட்ட ஆலமரங்களால் இன்று அம்மாநிலம் கடும் வறட்சியை சந்தித்திருக்கிறது.

ஆக வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் போது, சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை எப்படி ஈடுகட்ட போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். ஆக, காடுகள் எல்லாம் காடுகள் அல்ல. காடுகள் போன்று தோற்றமளித்தாலும் அங்கு சூழலியல் காக்கப்படுகிறதா? என உற்றுநோக்கி வருங்கால சந்ததியினருக்காக இயற்கையை இயற்கையாக வைப்போம்.

இனி வேளாண்மை,

பசுமைக் கூடாரம் (Green House)
பசுமைக் கூடாரம் என்பதை Green house அல்லது Poly house என்று அழைக்கின்றனர். புறச்சூழலில் கடுமையான தட்பவெப்பநிலையில் பயிர்கள் Stress என்னும் அழுத்தத்திற்கு உள்ளாகி வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைகிறது.

தாவரங்களில் முதல்நிலை வளர்சிதை மாற்றம்
( Primary Metabolic Activities ) செடிகளின் சுயவளர்ச்சிக்கும், இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றம் அதன் உற்பத்திக்குத் தேவையானதாகும். பயிர்கள் அழுத்தத்திற்கு (றீமிreவிவி) க்கு ஆளாகும் போது அதன் இரண்டாம் வளர்சிதை நிலை பாதித்து உற்பத்தி குறையும்.

    பசுமைக் குடில்கள் தாவரங்களின் அழுத்தத்தை (Stress) ஓரளவு குறைத்துத் தாவரங்களைச் சமநிலைப்படுத்துகின்றது. பசுமைக் குடில்களில் தாவரங்களின் தன்மைக்கேற்ப ஓரளவு தட்பவெப்ப நிலைகளைக் கட்டுப்படுத்தலாம்.

பசுமைக் குடில்களில் கீழ்கண்ட பெளதிகக் காரணங்களை மேலாண்மை செய்யலாம்.
1. ஒளி
2. ஈரப்பதம்
3. வெப்பம்
4. தட்பம் ( குளிர் )
5. காற்று
6. மழை
7. பனி
8. களை
9. நோய்
10. பூச்சி தாக்குதல்

பசுமைக் கூடாரங்கள் இரும்புப் பொருட்களான
( Zinc Pipes ) ஆன Skelton எனப்படும் அடிப்படை பகுதியையும், பாலித்தீன் பொருளாளான போர்வை போன்ற பகுதியையும் கொண்டது.
அரசு நிர்ணயம் செய்த தரத்தில், வழிகாட்டலின்படி பசுமைக் கூடாரங்கள் அமைத்தால் தான் மானியம் கிடைக்கும். மிக முக்கியமாகப் பயன்படுத்தப்படும் பாலித்தீன் போர்வை அகச்சிவப்புக் கதிர்களை (UV rays) பசுமைக் குடியினுள் அனுப்பாத தன்மையோடு இருக்க வேண்டும். இதனால் பயிர் விமிreவிவி என்னும் அழுத்தத்திற்குள்ளாகாது.

பசுமைக் குடில்கள் தோல்வியில் முடிவதற்கான காரணங்கள்.

1. தரமான நிறுவனங்களை நாடிப் பசுமைக் குடில்கள் அமைக்காமை.
2. தட்பவெட்பத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் இல்லாமை.
3. பாலித்தீன் தாள்களின் தரம், தன்மை அதன் மைக்ரான் அளவு போன்றவற்றை முறையாகத் தேர்வு செய்யாமை.
4. காற்று அதிக வேகத்தில் வீசும் இடங்களில் பசுமைக் குடில்கள் அமைத்தல்.
5. 1000 சதுர மீட்டருக்கு குறைவாக அமைக்கப்படும் பசுமைக் குடில்களில், பொருளாதார ரீதியில் நிகர இலாபம் குறையும்.
6. முறையாக நிபுணர்களின் ஆலோசனை பெறாமை.
7. தொழு உரம் எக்டேருக்கு 60 டன் இடவேண்டும்
(ஏனெனில் பயிர்களின் எண்ணிக்கை அதிகம்). இந்த பரிந்துரைக்கப்பட்ட தொழுஉரத்தைக் குறைவாக இடுதல்.
8. நூற்புழுக்களின் தாக்குதல்களை முறையாகக் கையாளாமை.
9. அனுபவம் இல்லாத தொழிலாளர்கள்.
10. நீரில் கரையும் இரசாயன உரங்களைத் தொடர்ந்து உபயோகிக்கப்படுவதால் மண்ணின் பெளதிக குணங்கள் சீர்கேடு அடைந்து மண்ணின் உயிரியல் பண்புகள் சீர்குலைந்து விளைச்சல் குறையும். இதற்குத் தேவையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமை.
11. தொடர்ந்து ஒரே பயிரைச் சாகுபடி செய்தல்.
12. பயிர்களுக்குத் தேவையான கார்பன் டை ஆக்ஸைடை, செயற்கையாக அல்லது இயற்கையாக பசுஞ்சாண வரட்டிகளை எரித்துக் கொடுக்கலாம்.
13. விளை பொருட்களை சந்தைப்படுத்துதலில் உள்ள பிரச்சனைகள்.
14. மலர்களை Preservatives எனப்படும் நிலைப்படுத்தும் அல்லது உற்பத்திப் பொருளின் வாழ்நாளைக் கூட்டும் பொருட்களைக் சேர்க்காமலிருப்பது அல்லது குறைந்தபட்சம் சர்க்கரையாவது பயன்படுத்தாமல் இருப்பது.
15. நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்தாமை.
16. பசுந்தாள் உரங்கள் மற்றும் பயிர்களைப் பயன்படுத்தாமை.
17. தேவைக்கு அதிகமான உரங்களைப் பயன்படுத்துதல்.
18. நோய் பாதிக்கப்பட்ட உடன் வீரிய மிக்க மருந்துகளை முதலில் பயன்படுத்துவது ( வீரியம் குறைந்த மருந்துகளை முதலில் பயன்படுத்த வேண்டும்  ).
19. பூச்சித் தாக்குதலுக்கு உயிரியல் முறையிலான ஒட்டுண்ணிகள் ஊண் உண்ணிகளை பயன்படுத்தாமை.
20. மண் பரிசோதனை, நீர் பரிசோதனை மற்றும் நூற்புழு பரிசோதனை போன்றவற்றைத் தேவையின் அடிப்படையில் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யாமை.

 மேற்கண்ட காரணங்கள் பொதுவாக பசுமைக் குடில்களின் தோல்விக்குக் காரணமாக கருதப்படுகின்றன.

பசுமைக் குடில்களின் தேவைகள்
இன்றைய காலகட்டத்தில் வேளாண்மையை வணிக வேளாண்மையாக்கத் தேவைப்படும் காரணிகளில் பசுமைக் குடில்களும் ஒன்று. உதாரணமாக: தக்காளி சராசரியாக ஒரு எக்டேரில் 25 முதல் 30 டன்கள் விளைந்தால் பசுமைக் குடில்களில் சுமார் 150 முதல் 200 டன்கள் வரை விளைய வாய்ப்புள்ளது.

இஸ்ரேல் நாடு பசுமைக் குடில்களில் பல சாதனைகளைச் செய்து வருகிறது. ஆனால் மணல்சாரி மண் வகையைக் கொண்ட அந்நாட்டின் தொழில்நுட்பத்தை, நல்ல நயமான மண்ணைக் கொண்ட நமது நாட்டில் அப்படியே உபயோகித்தால சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளன.

மலர்கள், பழங்கள் மூலிகைகள் போன்ற அதிக பொருளாதார முக்கியத்துவம் கொண்ட பயிர்களைப் பசுமைக் குடில்களில் வளர்க்கலாம். மரப்பயிர்கள் பொதுவாக பசுமைக் குடில்களுக்கு ஏற்றவையல்ல.

நோய்களும், பூச்சி தாக்குதல்களும் எளிதில் பசுமைக் குடில்களில் வளர்க்கும் பயிர்களைத் தாக்காது. ஒருவேளை தாக்குதலுக்கு உட்பட்டால் அவற்றை அகற்றுவது மிகவும் கடினம். ஆக பசுமைக் குடில்களின் வெற்றி அதன் மேலாண்மை முறையைச் சார்ந்தே இருக்கின்றது.

மேலும் தொடர்புக்கு,
திரு. மரியா ப்ரான்சிஸ்
94884 85892
இன்னும் கொஞ்சம் உண்டு…                   

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →