கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

  c7opc8k2  சுற்றுப்புறச்சூழல் என்பது ஒரு இடத்தை சுற்றியுள்ள கால நிலை, மரங்கள், செடிகளை உள்ளடக்கியக் காடுகள், நீர்நிலைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் என அனைத்தும் அடங்கிய ஒட்டு மொத்தச் ‘சூழல் தொகுப்பே’ ஆகும்.

    இதில் ஒவ்வொரு உயிரில்லா, உயிருள்ள சூழலியல் காரணிகளும் இயற்கையில் சிக்கலான ஒரு வலைப்பின்னல் போன்ற பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றன. இதை முழுமையாகப் புரிந்து கொள்வது சற்று கடினம்தான்.

    உதாரணமாக : ஈக்கள், கொசுக்கள் கூட சூழலியலில் ஒரு அங்கம். அவைகள் சுற்றுப்புறச்சூழலுக்கு என்ன நன்மை செய்கிறது என அறிந்து ஆராய்ந்து கூறுவது கடினமான பணிஆயினும், நமக்குத் தெரியாத வி­யங்கள் இருக்கலாம் ( சூழல் சீர்கேட்டால் ஏற்படும் சூழ்நிலை ஈக்கள், கொசுக்களுக்குச் சாதகமாக இருப்பது தற்போதைய அதன் அபரிமிதமான பெருக்கத்திற்குக் காரணம் )

    இயற்கையில் ஒரு பாறை, குன்றுகள் போன்றவை அப்பகுதியில் ஏற்படும் தட்பவெப்பத்தைப் பாதிக்கும் காரணிகளாக விளங்குகின்றன. சூரியனிலிருந்து வரும் கதிர்கள், கதிர்வீச்சு முறையில் வெப்பம் பரவுகிறது.

    மரங்கள், தாவரங்கள் இல்லாத பாறைக் குன்றுகள் வெப்பத்தை உறிஞ்சி மீண்டும் வெப்ப அலைகளாகப் பிரதிபலிக்கிறது. இதனால்தான் வேலூர், நாமக்கல், சத்தியமங்கலம் போன்ற இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கின்றது.

    இதற்குத் தீர்வு, அருகிலுள்ள குன்றுப் பகுதிகள் பசுமையாக்குவது ஒன்றே தீர்வாகும். இந்தப் பசுமைத் தாவரங்களால் வெப்பம் குறைவதோடு, மழை நீர் வேகம் குறைந்து, மண்ணரிப்புத் தடுக்கப்படும்.

    மேலும் புல்வெளிகள் என்னும் பசுமைப் போர்வையில், இந்த மலைக் குன்றுகளைப் போர்த்தினால் வறண்ட ஆறுகளில் நீர்வளம் பெருகும். ஏனெனில் புல்வெளிகளுக்கு நீரைத் தக்க வைக்கும் தன்மை உண்டு.

    மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விலங்குகள், மனிதர்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க இரவில் இயங்கக்கூடியத் தானியங்கி அகச்சிவப்புக் கேமராக்களைப் பொருத்திக் கணிப்பொறியுடன் இணைக்க வேண்டும்.

   Thermal imaging camera எனப்படும் இந்தப் புகைப்படக் கருவியினால் உயிரினங்களின் உடல் வெப்பத்தைத் தொலைவிலிருந்தே எளிதாகக் கணிக்கலாம்.
    
    இதனால், நோயுற்ற விலங்குகளைக் கண்டறியலாம்.
    நோயுற்ற / காயம்பட்ட புலிகளைக் கண்டறிவதால் மனிதர்கள் பலியாவதைத் தடுக்கலாம்.
        ரயில்வே தண்டவாலங்களை யானைகள் கடக்கும் போது இந்தக் கருவியின் மூலம் கணிப்பொறி உதவியோடு மிக எளிதாக ரயில்வே தானியங்கி சிக்னல் மையத்துக்கு அனுப்பி ரயிலை நிறுத்தி விபத்தைத் தவிர்க்கலாம்.
    காய்ச்சல் உள்ள மனிதர்களைக் கூட கண்டறிவதால் இக்கருவி பல இடங்களில் பயனளிக்கக் கூடியது.
    சூழலியல் ஆர்வலர்கள் அரசுக்கு இக்கருவி பற்றி ஆராய அழுத்தம் தர வேண்டும்.
    செயற்கைக் கோள் உதவியுடன் இயங்கும் வகையில் செயல்படும் புகைப்படக் கருவிகளே காடுகளிலும், மலைகளிலும் பயனளிக்கக் கூடியது.
    யானைகள் கடக்கும் வழியில் செல்லும் வாகனங்கள், கூடுமானவரை மெதுவாகச் செல்ல வேண்டும்.
    யானைகளைச் சாலைகளில் பார்த்தால் பாதுகாப்பான இடைவெளியில் நிறுத்தவும்.
    அதிக ஒலிகளும், அதீத ஒளியும் யானைகளைக் கோபமூட்டக் கூடியவை.
    புகைப்படக் கருவிகளின் ‘Flash’ ஒளி மிருகங்களை மிரட்சியடையச் செய்யக் கூடியவை.
    புலிகள் காப்பகம், சரணாலயப் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கும் விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இனி வேளாண்மை,
    அங்கக வேளாண்மையில் களைக்கட்டுப்பாடு என்பது மிகவும் சவாலான வி­யமாகும்.
    
    அனங்கக ( இரசாயன )  வேளாண்மையில்
    1. தேர்திறன் களைக்கொல்லி (Selective Herbicide)
    2. தேர்திறனற்ற களைக்கொல்லி (Non Selective)    
    3. முளைப்பதற்கு முன் செயலாற்றக் கூடியவை (Pre – emergence)
    4. ஊடுருவக்கூடியவை (Systamic)
    5. தொடு நஞ்சு (Contact)
       
எனப் பல வகைப்பட்டவை உள்ளன. இதன் எஞ்சிய நஞ்சு சூழலைப் பாதிக்கக் கூடியவை. உணவுப் பொருட்களிலும் ‘எஞ்சிய நஞ்சு’ இருப்பதால் வி­மாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    உருளைக் கிழங்கு அறுவடையில் களைக்கொல்லியை முதிர்ந்த பயிரின் மீது அடித்து பயிர்காய்ந்ததும் அறுவடை செய்யும் நடைமுறை இன்றும் உள்ளது. சோளத்தில் ஊடுருவிப் பாயும்  களைக்கொல்லியைத் தெளிப்பதால், களைக்கொல்லியின் நஞ்சு மண்ணில் மிக நீண்ட நாள் தங்கிச் செயலாற்றுகிறது.

சரி, இயற்கை வழியில் எப்படி களைகளைக் கட்டுப்படுத்தலாம்

    பயிர் எண்ணிக்கையை உரிய விதத்தில் பராமரிப்பது இறந்த தாவர பொருட்களைக் கொண்டு மூடாக்கு போடுவது (Mulching).    
    
    மூடாக்கிற்குப் பசுந்தாள் உரங்களான சணப்பை, தக்கைப்பூண்டு, கொழுஞ்சி கொண்டும் பசுந்தளை உரங்களான கிளைரிசிடியா (சீமை அகத்தி), அவுரி, மணிலா அகத்தி, சித்த கத்தி கொண்டும் மூடலாம்.
    
    நெல் வைக்கோலைக் கொண்டும், கோதுமைத் தாள்களைக் கொண்டும் பயிர்களின் இடைவெளிகளை மூடலாம்.
    
    தாவரப் பொருட்களால் ஆன இந்த மூடாக்கின் (Mulching) மீது கெட்ட பூஞ்சாணங்கள் வளர்ந்தால், அவை மீது சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மாவிரிடி எதிர் நுண்ணுயிர்களைத் தெளிக்கலாம், இல்லையேல் இது பயிரைத்தாக்கும்.
 
    இரு வித்திலைக் களைகளின் மீது செறிவுமிக்க மாட்டுச் சிறுநீரைத் தெளிக்கலாம்.

    பாத்திகளில் தண்ணீர் கட்டி, களைகளை முளைக்கச் செய்து, அதன் மீது கனத்த தார்பாலின் போன்ற போர்வைகளைக் கொண்டு மூடி களைகளை அழிக்கலாம்.

    பார்த்தீனியம் களைகளைக் கட்டுப்படுத்த மெக்ஸிகன் வண்டு என அழைக்கப்படும் Zygogramma bicolorata என்ற வண்டை விட்டு எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.

    சில அனுபவசாலிகள், புளியங்கொட்டையை ஊற வைத்து கரைசல் செய்தும், புளிய இலைச்சாறு, கடுக்காய் கொட்டை கரைசல் கொண்டும் களைகளைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

    களை பெரும்பான்மையாகப் பரவுவது மாட்டுச்சாணம் மூலமே. ஆக மாட்டுச் சாணத்தைக் காற்றில்லா முறையில் (Anaerobic)  பாறை உப்பு (Rock Phosphate) 25 %, தொழு உரம் 75% கலந்து கனத்த தார்பாலின் கொண்டு மூடியோ அல்லது மண் கொண்டு மூடியோ கம்போஸ்ட் செய்யும் போது களைவிதைகள் அழிக்கப்படுவதோடு மதிப்பூட்டம் ஏற்றிய தொழு உரம் கிடைக்கும்.
 
மேலும் தொடர்புக்கு,
திரு.மரியா ப்ரான்சிஸ்
94884 85892

இன்னும் கொஞ்சம் உண்டு…

சில தகவல்கள்
    உயிரியல் அறிஞரான ‘லின்னேயஸ்’ பூச்சிகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது “பூச்சிகள் அளவில் சிறியவை; சக்தியில் பெரியவை” என்கிறார்.

    தான் தூவிய மருந்தாலேயே மடிவதா மனிதன்? மிகப் பெரிய விலையைக் கொடுத்து சிறிய வெற்றியைப் பெறுவதாகவே தோன்றுகிறது. ஆண்டுதோறும் பூச்சிக் கொல்லி மருந்தைத் தங்கள் திசுக்களில் தொடர்ந்து சேர்த்துக் கொள்கிறார்கள் என்றால், பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்படும் தீமைகளைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை.

    ‘பைரிதிரின்’ போன்ற இயற்கைப் பூச்சிக் கொல்லிகள் ஆக்சான் நரம்புகளில் நிகழும் தூண்டல்களைத் தடுப்பதால், பூச்சியின் நரம்பு மண்டலம் சிதைந்து பக்கவாதம் ஏற்படும். பைரிதிரின் நரம்புத் தூண்டல்களைத் தடுத்து முனைப்பை நிறுத்திவிடுவதால் நரம்பின் மேற்பரப்பில் சோடியம், பொட்டாஸியம் அயனிகளுக்கிடையே சமமற்ற நிலை ஏற்பட்டுப் பூச்சியை மடியச் செய்கிறது. இதே போன்றுதான் டி.டி.டி யும் செயல்படுகிறது என்றாலும், சில பூச்சிகள் தம்மிடம் உள்ள ஆக்ஸிடேஸ்களின் (Oxidase) உதவியால் பக்கவாதம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்கின்றன.

    நூற்றுக்கு மேற்பட்ட பூச்சிகள் என்ஸைம்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஜீன்களை உடையவை. எனவே, அவை பூச்சிக்கொல்லிகளைச் செயல் இழக்கச் செய்யும் என்ஸைம்களை உற்பத்தி செய்கின்றன.

    பூச்சிக் கொல்லிகள் பயிர்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளை மட்டுமின்றி பயிர்களைப் பாதுகாக்கும் சில பூச்சிகளையும் சேர்த்துக் கொன்று குவிக்கின்றன ; பயிர்களுக்கு இருந்த இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையும் குறைந்தது. இதனால் பயிர்கள் தங்களுக்கிருந்த இயல்பான பாதுகாப்பையும் இழந்துவிடுகின்றன.

    முதுகெலும்புள்ள எல்லாப் பூச்சிகளும், பயிர்க்கொல்லிகளும் ‘Vermin’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுள் பயிர்களை நாசப்படுத்தும் எலிகளும் அடங்கும். பயிர்களை அழிக்கும் முதுகெலும்புள்ள பிராணிகளில் மிகவும் மோசமான பிராணி எலிதான்.

    பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் இன்னொரு வகைப் பிராணிகள் உள்ளன. இவை, கடினமான மேல் ஓடுகளைக் கொண்ட நீர்வாழ் பிராணிகளான நண்டுகள், இறால்கள் முதலியன ஆகும். இவற்றின் உடலில் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் பூச்சிகளும், உண்ணிகளும், தெள்ளுப் பூச்சிகளும் ஏராளமாய் உண்டு.

    நெல், நிலக்கடலை, மக்காச் சோளம், கேழ்வரகு ஆகிய பயிர்களில் 30 முதல் 35 நாள்களும், பருத்தியில் 45 நாள்களும், கரும்பில் 90 நாட்கள் வரையிலும் களைகள் பெருமளவில் பாதிப்பை உண்டாக்கும்.

 

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →