கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை.- அறிந்துகொள்வோம்.

9d95hjwo    சுற்றுப்புறச்சூழல் ஒரு நாட்டின் வளத்தை நிர்மாணிக்கும் காரணியாக விளங்குகிறது. வேளாண்மை, தொழிற்சாலை, சாலைத் திட்டங்கள், அணைகள், குடியிருப்புகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் (Infrastructure) சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்கத்தான் செய்யும்.

    இருப்பினும் சூழல் சீர்கேட்டை எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

    மின்சாரம் தயாரிக்க அணைகள் கட்டி நீர்மின் நிலையங்களை ஏற்படுத்தும்போது பல அரிய வன வளம் நீரில் மூழ்கி அழிகிறது.  மேலும், அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்து செல்லும் மின் பாதையில் (Grid) குறுக்கிடும் வனப்பகுதி அழிக்கப்படுகின்றது.

    அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரித்து வெப்ப ஆற்றல் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நிலக்கரியை இறக்குமதி செய்யும் போதும், அதை எரிக்கும் போதும் கடுமையாகக் காற்று, மண், நீர் மாசுபாடு அடைகிறது.

    ஆகவே, மின்சாரச் சிக்கனம் ஒரு வகையில் சுற்றுப்புறச்சூழலுக்குச் செய்கிற ஒரு நன்மையாகும். ஆகவே (Green Energy) பசுமைச் சக்தி வளத்துக்கு மக்கள் முக்கியத்துவம் தர வேண்டும்.

    மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பல அணைக்கட்டுகள் உள்ளன. அவற்றினால் சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு செய்ய சம்பந்தப்பட்ட நீர்மின் திட்டத்தில் அப்பகுதியில் இயற்கையைப் பேண ஒரு நிதியை ஒதுக்க வேண்டும்.

    வனத்துறை மட்டும் வனத்தைக் காக்க வேண்டும் என்பது தவறான புரிதலாகும். காடுகளில் சிறு சிறு குட்டைகளில் வாழும் மீன்கள், பல கொசுக்களின் முட்டைகளை உண்டு ஒரு சமநிலையைப் பேணுகின்றன. பொதுக் குளங்கள் குறைந்து வரும் இவ்வேளையில் கொசுக்கள், இயற்கை எதிரிகள் எதுவும் இன்றி பல்கி நோய்களை ஏற்படுத்துகின்றன.

    ‘இந்தியத் தாவரவியல் ஆய்வு மையம்’ அந்தந்தப் பிராந்தியங்களுக்காகத் தாவரங்களை வகைப்படுத்தியுள்ளது. ‘செயற்கைப் பாலை வனம்’ அல்லது ‘பசுமைப் பாலை வனம்’ என அழைக்கப்படும் யூக்கலிப்டஸ் காடுகளை, இயற்கைக் காடுகளாக மாற்றத் தாவரவியல் ஆய்வு மையத்தின் பரிந்துரைத்துள்ள தாவரங்களை மறு நடவு செய்யத் தேவையான நிதியைச் சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தரவேண்டும்.

    வனத்தைப் புனரமைக்கும் போது வனத்துறையின் கண்காணிப்பு மிக மிகக் குறைவாக உள்ளது. சில இடங்களில் கண்காணிப்பின்மையால் நடவு செய்யும் நபர்கள் நாற்றுகளைக் காடுகளில் வீசிவிட்டுச் செல்லும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

    இதற்கு மாற்றாக வனத்தினுள் நட்டு உயிர்பிடித்து வளரும் செடிகளுக்கு ஏற்ப ஊக்கத் தொகை வழங்கினால், நாற்றுகளை நட்டு வளர்ப்போரின் தொடர் கண்காணிப்பு கிடைக்கும்.

    யானையின் பிடித்த உணவு மூங்கில், இயற்கையாக மூங்கில் பக்கவாட்டில் Shoots மூலமாக வேகமாகப் பரவக் கூடியது. அதன் அரிசி எனப்படும் விதைகளும் அதிகமாகப்  பரவி வன வளத்தைச் சீராகப் பராமரித்தன.

    ஆக அரசு, வனப்பகுதியில் மூங்கில் அரிசியை சேகரிக்கத் தடை செய்ய வேண்டும், அல்லது குறைக்க வேண்டும். இதனால் யானைகளுக்குத் தேவையான உணவு தொடர்ந்து கிடைக்கும்.

    கோவை – பாலக்காடு, ரயில்பாதையில் யானை பலியாவதைக் குறைக்க பாலக்காடு – பொள்ளாச்சி – கோவை மார்கத்தில் அதிகாலை ரயில்களைத் திருப்பி விடலாம் ( பெரும்பாலும் விபத்துக்கள் அதிகாலை 3 மணி முதல் 6 மணியளவில் நடைபெறுகின்றன ). இந்த விசயத்தில் ரயில்வே துறைக்குப் பின்வரும் பொறுப்பு உள்ளது.

    யானைகள் தொடர்ந்து பலியானால் யானை
இனம் வேகமாக அழிந்து விடும். ஏனெனில் பாலக்காடு – பொள்ளாச்சி வழித்தடத்தில் வனப்பகுதி இல்லை. மேலும் யானைகள் தண்டவாளத்தைக் கடக்க வேறு வசதிகள் செய்ய வேண்டும். இல்லையேல் அதிவேக ரயில்கள் விபத்துக்குள்ளாகவும் வாய்ப்புள்ளது.

இனி வேளாண்மை,

    நீரின்றி அமையாது உலகு – என்பது நீரின்றி முதலில் பாதிப்பது வேளாண்மை. பின்னர் மொத்த உலகமே பாதிக்கும் என்பது இதன் விளக்கமாகக் கொள்ளலாம்.

    நீர்க் கட்டுப்பாடு என்பது இன்று அனேகமாக எல்லா இடங்களிலும் ஒலிக்கும் குரலாகும். எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக நீரைப் பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வேளாண்மையில் வெற்றி பெறலாம், பயிருக்குத் தேவை ஈரமே அன்றி நீர் அல்ல.

தென்மேற்குப் பருவ மழை ஏறக்குறைய பொய்த்துப் போன இந்நிலையில் வரும் குறுகிய காலம் பெய்யும் வடகிழக்குப் பருவ மழையை எவ்வாறு நமது வேளாண்மைக் கிணறுகளில் சேமிக்கலாம் எனக் காண்போம்.

    மழை நீரைக் கிணற்றில் சேமித்தால் கிணறுகளின் உப்புத் தன்மை குறையும்,
    நீர்மட்டம் உயரும்,
    குடிக்க உதவாத நீரின் தரம் உயரும்,
    மாசுபட்ட நீர்நிலைகள் மேம்பாடு அடையும்…

    தூர்ந்து போன பழைய கிணறுகளில் மழைநீரைச் சேமிக்கலாம். கசிவுநீர்க் குட்டைகள் அப்பகுதிகளின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடியவை. சரிவுக்குக் குறுக்காக வரும் நீர்ப்பாதைகளில் தடுப்பணைகள் கட்டினால் நீரின் வேகம் குறைந்து அவை மண்ணினுள் உட்புகும் திறன் அதிகமாகும்.

    ஆழ்துளைக் கிணறுகள் இருக்கும் தோட்டங்கள், வீடுகளில் கூழாங்கல், செங்கல், மணல், அடுப்புக்கரி கொண்டு அமைக்கப்பட்ட மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பினால் தூசி மண் போன்றவை வடிகட்டப்பட்டு ஆழ்துளைக் கிணற்றினுள் செலுத்தலாம்.

     ஒருவருடம் நாம் எடுக்கும் நிலத்தடி நீரைப் போல சுமார் ஒன்றரை மடங்கு ஒருவருடத்தில் மழைநீரைச் செலுத்தலாம். இதனால் தண்ணீர் வற்றிப்போன கிணறுகளிலும் நீர் ஊற வாய்ப்புள்ளது.

    கிணற்றின் அருகே அருகு போன்ற புல்வகைகளை வளர்த்தால், நீர் ஆவியாதலைக் குறைப்பதோடு மழைநீரைக் கிரகிக்கும் தன்மையும் அதிகமாகும்.

    இவ்வேளையில் தன்னார்வ அமைப்புகள் பனம்பழக்கொட்டைகளைச் சேகரித்து, நீர்நிலைகளின் கரைகளில் இட்டுச் சென்றால் அவை இம்மழைக் காலத்தில் முளைத்து எதிர்காலத்தில் நீர் பஞ்சத்தைத் தடுக்கக் கூடியவை, ஆகையால் இதைச் செய்ய முன் வரவேண்டும்.

மேலும் தொடர்புக்கு,
திரு.மரியா ப்ரான்சிஸ்
94884 85892

 இன்னும் கொஞ்சம் உண்டு…   

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →