கொஞ்சம் வேளாண்மை கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்

    hillsஒரு நாட்டின் வளமைக்கு அடித்தளமாக இருப்பது உயர்ந்த மலைகளே, இவற்றின் மூலமாகச் சமவெளிப் பிரதேசங்கள் வளமாக விளங்குகின்றன. நமது மேற்குத் தொடர்ச்சி மலைகள் தீபகற்ப இந்தியாவை வளமிக்க பகுதியாக ஆக்கியுள்ளன.

இம்மலைகள் கார்பன்-டை-ஆக்ஸைடை (Co2) எடுத்துக் கொண்டு பிராண வாயுவை அதிகமாக வெளியிட்டு நம்மைக் காத்து கொண்டிருக்கின்றன. இம்மலைக்குச் சுற்றுலாச் செல்வதால் மக்களுக்கு மகிழ்ச்சி; ஆனால், மலைகளுக்கோ சோகம்.

முதலில் சுற்றுலா செல்லும் பயணிகள் முதல் சூழல் கேட்டை குரங்குகளுக்குத் தின்பண்டம் கொடுப்பதிலிருந்து ஆரம்பிக்கின்றனர். குரங்குகள், சிங்கவால் குரங்குகள், போன்றவை இது போன்ற தவறான நடவடிக்கையால் சாலையில் பிச்சைக்காரர்கள் போல் வாகனங்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றன.

கவனிக்கவும், காடுகளில் வருடம் முழுவதும் குரங்குகளுக்குத் தேவையான உணவு அபரிமிதமாக உள்ளது. மேலும் குரங்குகள் எண்ணிக்கை தற்சமயம் அளவுக்கு அதிகமானதற்குக் காரணம், இந்த தவறான நடவடிக்கையே.

ஏனெனில், சிறுத்தைகள் குரங்குகளின் இயற்கை எதிரிகள், குரங்குகள் சாலை பகுதிகளுக்கு வந்து விடுவதால் அவைகளால் வேட்டையாட முடிவதில்லை அல்லது சிறுத்தைகள் சாலை பகுதிகளுக்கு வந்தால் மனிதனைத் தாக்கலாம்.

வனத்துறை எச்சரிக்கை வைத்தும் பெரிதாகப் பலனில்லை. இதைக் கட்டுப்படுத்தத் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் துண்டுப் பிரசுரங்கள் அடித்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஒட்ட வேண்டும்.

தனியார் மகிழுந்து (car)களுக்குச் சோதனைச் சாவடிகளில் துண்டுப் பிரசுரங்களைக் கண்டிப்பாகத் தர வேண்டும். தொடர்ந்து விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.5,000/- அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், வனப்பகுதியில் மது பாட்டில்களை வீசி எறிப்படுவதால், அவை யானை, காட்டு மாடு, மான்… போன்றவைகளின் கால்களில் காயத்தை உண்டுபண்ணும். யானைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இக்காயங்களின் வேதனை காரணமாக இவை மனிதனைத் தாக்குகின்றன.

எங்கோ இருந்து வரும் ஒரு சிலரால் இங்குள்ள உள்ளுர் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இக்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சிறைத் தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை விதிக்க வேண்டும்.

அரசுக்குச் சுற்றுலாத்துறை மூலம் வருமானம் வருவது நல்லது தான், ஆனால் ஒரு சில சுற்றுலாப் பயணிகளின் விதி மீறல்களைத் தண்டித்தால் தான் அழகிய இம்மலைத் தொடரைக் காப்பாற்ற இயலும்.

பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், தண்ணீர்… போன்றவற்றைப் பயன்படுத்திய பின் காடுகளில் வீசி எறியும் போக்கு அதிகரிப்பது கவலையளிப்பதாக உள்ளது. இவற்றைத் தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முற்காலத்தில் அடிக்கடி ஏற்பட்ட வனத்தீயால் பல இழப்புகள் ஏற்பட்டன. ஆனால், வனத்தீயிற்குப் பிறகு, புற்கள் மட்டும் செழித்து வளர்ந்தன. தற்போது வனத்தீ ஏறக்குறைய இல்லாமையால் புற்கள் வளர்வது சற்று குறைவாக உள்ளது.

இதனால் யானை, காட்டு மாடுகள் விளை நிலங்குளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. வனத்துறை காடுகளுக்குள் புதிய புல்வெளிகளை உருவாக்க வேண்டும்.

புலிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மேற்கண்ட தாவர உண்ணிகள் அதிகமாகி விட்டன. ஆகவே, இயற்கைக் காடுகளை இயற்கையாகவே விட்டு விட்டால் அவை தம்மைப் பராமரித்து, நம்மையும் பராமரிக்கும்.

இனி வேளாண்மை,
இயற்கை வேளாண்மை என்பது தற்சமயம் அறிவியலோடு இணைந்து செய்தால் வெற்றி நிச்சயம். உதாரணமாக;  சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா, பேசில்லோ மைசிஸ்… போன்ற எதிர் நுண்ணுயிர்களை அறிவியல் துணை கொண்டு அடையாளம் கண்டு உற்பத்தி செய்து பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம்.

அதே போல மண் பரிசோதனை செய்து மண்ணின் நயம், கார அமில நிலை, அங்ககக் கரிமம், கார்பன், நைட்ரஜன் அயனிகளின் விகிதம், பாசன நீரின் மின் கடத்தும் திறன் (EC) பாசன நீரில் கலந்துள்ள உப்புகளின் விகிதம், பயிர் எடுத்துக் கொள்ளும் நிலையில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ், பயிர் எடுத்து கொள்ள இயலாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ், நுண்ணுட்டச் சத்துகளின் அளவு போன்றவற்றைக் கொண்டு நிலத்தின் தன்மை, எந்த பயிர் எப்போது செய்தால் அதிக மகசூல் கிடைக்கும் என முடிவு செய்யலாம்.
VAM என்று சொல்லக் கூடியVASUCULAR ARBASICULAR MYCORRHIZA என்ற நுண்ணுயிர் ஒவ்வொரு பயிருக்கும் மிகப் பயனுள்ளதாகும்.

இந்த வேம் (VAM) ஒரு வலைப் பின்னலை மண்ணில் உருவாக்கிக் கொள்ளும். இந்த வலைப் பின்னல் பயிரின் வேரைத் துளைத்து வேருக்கு எட்டாத பகுதியில் உள்ள சத்துக்களை உறிஞ்சிப் பயிருக்குத் தரவல்லது.

மேலும், இயற்கை எதிர் நுண்ணுயிர்கள் இந்த வலைப் பின்னல் வழியாக பல்கிப் பெருகக் கூடியது (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் VAM எளிதாக கிடைக்கிறது). அனைத்துத் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் வேம் மிகவும் ஏற்றது.

ஆக அங்கக வேளாண்மையை இனி அறிவியல் துணை கொண்டு வெற்றிகரமாகச் செய்யலாம் என்பது நிதர்சனமான உண்மை.

ஆரோக்கியமான மனிதனை நோய் தாக்காது என்பது உண்மை என்றால், ஆரோக்கியமான பயிரை நோய், பூச்சிகள் தாக்காது என்பதும் உண்மையே. ஆரோக்கியமான பயிர், ஆரோக்கியமான மண்ணைப் பொருத்தே அமையும்.

ஆரோக்கியமான மண் என்பது மண்ணிலுள்ள Microbial Activity என்று சொல்லக் கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிர் செயல்பாடுகளைப் பொருத்தே அமையும்.

வெளிநாடுகளில் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் குறைந்தால், பயிர் செய்வதை ஒரு சில மாதங்கள் தள்ளி வைக்கின்றனர். நாம் அவ்வாறு செய்யா விட்டாலும் கூட நிலத்தில் குறையும் நுண்ணுயிர்களைச் செயற்கையாக நிலத்தில் இட்டு ஈடு செய்யலாம்.

தொழு உரம் இடும் போது, கூடுமான வரை மண் கொண்டு மூட வேண்டும். இல்லையயனில், இவை சூரிய வெப்பத்தால், தொழு உரத்திலுள்ள அமோனியா வாயு வெளியேறி பயிருக்குக் கிடைக்காமல் போகக் கூடும்.

மேலும் தொடர்புக்கு,
திரு. மரியா ப்ரான்சிஸ்
94884 85892.

இன்னும் கொஞ்சம் உண்டு…

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →