கொஞ்சம் வேளாண்மை கொஞ்சம் சுற்றுப்புறச் சூழல்

    ougs50vqமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நிறைய அரிய வகைப் பறவைகள் இருந்தன. தற்போது அதன் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

இதற்குச் சுற்றுப்புறச்சூழல் சீர்கேடும் ஓர் முக்கியக் காரணம்.

பறவைகள் தாவரம் பரவுவதற்கும், புழுப் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும் மிகவும் அவசியம். பறவைகளின் எச்சங்களில் நிறைய சத்துக்கள் உள்ளன. இந்த எச்சங்கள் மூலமாக மண்ணிற்குத் தேவையான இன்றியமையாத சத்துக்கள் கிடைக்கப்பெற்று நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகமாகி வந்தது.

கழுகுகள் போன்ற மாமிச உண்ணிகள், காடுகளில் இறக்கும் விலங்குகளை உண்டு சூழல் சீர்கேடு ஏற்படாமல் பார்த்துக் கொண்டன.

தற்சமயம் கழுகுகள் எண்ணிக்கை அபாய அளவை விடக் குறைந்து விட்டது. இதற்குக் காரணம் காடுகளை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் இரசாயன பூச்சிக் கொல்லி ஆகும்.

கழுகுகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், காடுகளில் சூழல் சீர்கேடு ஏற்பட்டு, காடுகளில் வசிக்கும் ஊன் உண்ணி, தாவர உண்ணி விலங்குகளுக்கு நோய்கள் ஏற்பட்டு, அவைகள் பாதிக்கப்படுகின்றன.

இதற்குத் தீர்வாக மேற்கண்ட பறவைகள் வாழும் காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்.

சில வகைத் தாவரங்கள் தங்களுடைய இனத்தைப் பரப்புவதற்குப் பறவைகளை மட்டும் சார்ந்துள்ளன.

அத்தகைய பழங்களைச் சாப்பிடும் பறவைகளின் வயிற்றில் விதைகள் நன்றாக அமிலங்களால் செரிவூட்டப்பட்டு வேறொரு இடத்தில் விரைவாக முளைக்கின்றன. இதனால் காட்டின் சமநிலை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சில வகை பறவைகள் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கின்றன. உதாரணமாக: மைனா, ஆந்தை… போன்றவைகளைக் கூறலாம் (மைனா கூட்டுப் புழுக்களை அழிக்கும், ஆந்தை எலிகளைப் பிடிக்கும்).

விவசாய நிலங்களுக்கு வரும் சில வகைப் பறவைகள் அந்துப்பூச்சிகளையும், நத்தைகள்… போன்ற பயிர்களைப் பாதிக்கும் உயிரினங்களை கட்டுக்குள் வைக்கும். சில வகைப் பறவைகள் பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கும்.

யானைகள், காட்டெருமைகள்… போன்ற பெரிய விலங்குகளின் இரத்தங்களை உறிஞ்சி வாழும் உண்ணிகளைப் பறவைகள் கட்டுப்படுத்துகின்றன. இதனால், உண்ணிகள் மூலம் பரவும் சில வகை நோய்களை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பரவுவது தடுக்கப்படுகிறது.

மீன்களை உண்ணும் பறவைகளின் எச்சங்களால் காடுகளில் உள்ள மண்ணிற்கு கேல்சியம் (சுண்ணாம்புச் சத்து)சத்து கிடைப்பதால் காடுகள் மட்டுமின்றி அதைச் சார்ந்துள்ள விளை நிலங்களுக்கும் இச்சத்து கிடைக்கின்றன.

காட்டில் உள்ள பாறைகளின் மீது (Algae) ஆல்கா (மிகச் சிறிய தாவரம்) வளரும். இந்த ஆல்கா வளர்ந்து மடிந்து அதன் மீது நுண்ணுயிர்கள் வளரும். நுண்ணுயிர்கள் செரிவூட்டப்பட்ட மக்கிய ஆல்காவில் மீது சிறு செடிகள் வளரும்.

மீண்டும் சிறு செடிகள் மடிந்து இலை மக்கு கூடுதலாகும். மீண்டும் நுண்ணுயிர்களால் செரிவூட்டப்பட்டு இலை மக்கு சற்றுக் கூடுதலாகவே இருக்கும்.

இந்த இலை மக்கு மீது பறவைகளால் இடப்படும் எச்சங்களில் உள்ள விதைகள் முளைத்து அந்தப் பாறை இடுக்கின் மீது மரங்கள் வளரத் தொடங்கும்.

இந்த மரங்கள், பெரிய மரங்களாக வளரும் போது மீண்டும் மரங்கள் இலைகளை உதிர்ப்பதால் இலை மக்குதல் மீண்டும் அதிகமாகின்றது.

ஆகவே இது ஒரு சங்கிலித் தொடர், இந்தத் தொடரில் பறவைகளின் இடம் மிக முக்கியமானது. பறவைகள் இல்லை என்றால் மேற் கொண்டு காடுகள் வளர்வதும், தக்க வைத்துக் கொள்வதும் நடைபெறாது.

ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமான தாவரங்கள் பரவுவதற்கு உதவி செய்கின்றன.

சில வகை பெரிய பூக்களைக் கொண்ட சில வகை தாவரங்கள் மகரந்தச் சேர்க்கைக்கு வெளவ்வால் மற்றும் பறவைகளை நம்பி உள்ளன (சிறிய பூக்களில் மகரந்தச் சேர்க்கைக்குத் தேனீக்கள் உதவி செய்கின்றன)

துரதிஷ்ட வசமாக நமது நாட்டில் வன விலங்குகள் சரணாலயத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் பறவைகள் சரணாலயங்களுக்குக் கொடுப்பதில்லை.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சரணாலயப் பகுதியில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் ஏரி நீரால் விவசாய நிலங்களில் நல்ல விளைச்சல் பெறப்பட்டு வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை.

இனி வேளாண்மை,

வேளாண்மை என்பது உலகில் தோன்றிய தொன்மையான முதன்மையான தொழிலாகும். வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் வந்த பிறகு இத்தொழிலில் அனுபவ வேளாண்மை, படிப்பு வேளாண்மை என இருபெரும் பிரிவுகள் தோன்றின.

இரண்டுமே சம பங்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. படிப்பு வேளாண்மைப் பிரிவை சேர்ந்தவர்கள், அனுபவத்தைப் பெறும் போது மிகச்சிறந்த பலன் அவர்க்கு அவரோடு தொடர்பு கொண்டவர்களுக்கும் நாட்டிற்கும் கிடைக்கும்.

ஆக சுமார் 51% மக்கள் ஈடுபட்டுள்ள வேளாண்மைத் தொழிலில், வேளாண் பட்டதாரிகள் முதலில் அனுபவத்தைப் பெற அரசு உதவ வேண்டும். இல்லையயன்றால் இவர்கள் தங்கள் முழுத் திறனை வெளிக்காட்ட இயலாது போய்விடும்.

கலப்புப் பண்ணை

கலப்புப் பண்ணை என்பது பல தரப்பட்ட பயிர்களையும், கால்நடைகளையும் கொண்டதாகும். தற்சமயம் நகர்ப் புற மக்கள் நாட்டுக் கோழிகளை விரும்புவதால் நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம். இதற்குத் தேவையான தகவல்களுக்குச் சென்னை – நந்தனம் கோழி ஆராய்ச்சி நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்தக் கோழி எச்சத்தைப் பண்ணையின் உரத்தேவைக்குப் பயன்படுத்தலாம். ஒரு வேளை பாம்புத் தொந்தரவு இருந்தால் சிறியா நங்கைச் செடியை வளர்க்கலாம்.

கால்நடைகளுக்குத் தீவனக் கம்பு, தீவனச் சோளம் போன்றவற்றோடு, அகத்தி, சூபாபுல் போன்ற மரவகைத் தீவனங்களை வளர்ப்பதால், பண்ணையின் வளம் கூடுவதோடு, வெப்பம் தணியும்.

மேலும், அதிக வருமானம் வருவதாக இருந்தாலும் ஒரே வகைப் பயிரைப் பயிர் செய்வது நலம் தராது – Risk Factor அதிகம். நன்கு மக்கிய கோழி எருக்களை மரப்பயிர்களுக்கு அளிக்கலாம். சில விவசாயிகள் கோழி எருவைச் சிறிது, சிறிதாகப் பாசனநீரில் கரைத்துக் கொடுத்து வருகிறார்கள். ஆனால் எச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும்.

பண்ணையில் 33% நீண்ட கால பயிர்கள், 33% மத்திய கால பயிர்கள், 33% குறுகிய கால பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.

இன்று உலகமயமாக்கலால் வெளிநாடுகளில் ஏற்படும் விளைவுகள் நமது நாட்டின் விளைபொருட்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இன்று விவசாயத்தை விஞ்ஞான ரீதியாகக் கணித்து பயிர் செய்ய வேண்டிய காலம் இது.

உதாரணமாக: அண்டை நாடுகளில் உருளைக் கிழங்கு அதிகமாக விளையும் போது, நமது நாட்டிலும் விலை குறையும். மேலும் சில நாடுகள் நமது நாட்டிற்காகவே, பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் போன்றவற்றைப் பயிர் செய்கின்றன.

ஏனெனில், நம் நாடு உலகின் இரண்டாவது மாபெரும் நுகர்வுச் சந்தையாகும். தற்சமயம் சிறுநகரங்களில் கூட வெளிநாட்டுப் பழவகைகள் தாறுமாறாகக் கிடைப்பது ஒரு சான்று. ஆக பன்னாட்டுப் போட்டியை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சந்திக்க வேண்டிய காலம் இது.

பஞ்சாபிலிருந்து சென்னைக்குக் கோதுமையைக் கொண்டு வருவதை விட ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்குக் கொண்டு வருவது செலவு குறைவு என்ற கணக்கு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது (சிறு சிறு நில அமைப்பு, இடைத்தரகர்கள்… விலையேற்றத்திற்குக் காரணம்).

விவசாயிகள் அரசிடம் தாங்கள் பயிரிடப்போகும் பயிரின் தகவல்களைத் தகவல் தொடர்பு சாதனங்கள் (whatsapp, email…) மூலம் ஒரு மையத்திற்கு அனுப்பினால், அம்மையம் அளவுக்கு அதிகமான ஒரேவகை பயிர் நடவை எச்சரிக்கை செய்வதால், விவசாயிகள் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம்.

மேலும், விவசாயிகள் பங்குச் சந்தை நிபுணர்கள் போன்று வேளாண் நிபுணர்கள் / வேளாண் பல்கலைக்கழகத்தின் முன் அறிவிப்பை நாடலாம். ஆக சர்வதேச போட்டியைச் சமாளிக்கக் கலப்புப் பண்ணையம் காலத்தின் கட்டாயம்.

இதனால் இலாபம் சற்று குறைந்தாலும், இழப்பு ஏற்படாது.
கலப்புப் பண்ணையில் மாடுகள், ஆடுகள், கோழி, வாத்து… போன்ற கால்நடைகளும் (யிஷ்ஸe விமிலிஉவ) நிரந்தர மரப்பயிர்களும், நீண்ட காலப் பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள், மலர்கள் எனப் பலவகை தாவர, விலங்கு வகைகளைத் தன்னகத்தே கொண்டதாகும்.

இதனால் பண்ணையின் தற்சார்பு அதிகரிக்கும். மேலும் ஒன்றின் கழிவு / உற்பத்தி பொருள் மற்றொன்றிற்கு உணவாக அமைவதால் உணவு, சங்கிலித் தொடர் பண்ணையில் பராமரிக்கப்படுகிறது.

மேலும் தொடர்புக்கு,
திரு. மரியா ப்ரான்சிஸ்
94884 85892
இன்னும் கொஞ்சம் உண்டு…

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →