சட்டம் என்ன சொல்கிறது? – கேள்வியும் பதிலும்…

lawகேள்வி – 1

எனக்குப் பாத்தியப்பட்ட நிலத்தின் அருகில் வேறு ஒருவருடைய 1 ஏக்கர் நிலமுள்ளது. அதை எனக்கு முழு உரிமைகளுடன் சரியான பிரதிபரயோசனத்திற்கு கிரயம் செய்து தருவதாகவும், ஆனால் நான் அந்த 1 ஏக்கர் நிலத்தை வேறு யாருக்கும் கிரயம் செய்து தரக்கூடாது என்றும் நிபந்தனை போட்டுக் கிரயம் பதிந்து தருவதாகச் சொல்கிறார். அவ்வாறு நிபந்தனைப் போட்டு, கிரயப்பத்திரம் எழுதி வாங்கினால், அது எனது பாத்திய முழு உரிமையை பாதிக்குமா? அவ்வாறு எழுதி வாங்கலாமா?
M.லதா, கோவை – 8

பதில் – 1

உங்களுக்கு முழு உரிமையையும் கொடுத்தது 1 ஏக்கர் நிலத்தைப் பொறுத்து கிரையம் செய்யப்படுவதால் அந்த உரிமையைப் பாதிக்கும் எந்த நிபந்தனைகளும் சொத்துமாற்று சட்டப்படிச் செல்லாது. அவ்வாறு நிபந்தனைகள் இருந்தாலும் அதனை நிராகரிக்கலாம். உங்கள் உரிமையைத் தடை செய்ய முடியாது.

கேள்வி – 2.

என்னுடைய தாத்தா ஒரு சொத்தைச் சுயமாக சம்பாதித்து அவர் பெயரில் வாங்கியுள்ளார். அவருக்கு ஒரு பையன். இரண்டு பெண்கள். நான் மகள் வயிற்றுப் பேரன். என்னுடைய மாமா அந்தச் சொத்தை அவர் மட்டும் கையயழுத்துப் போட்டு விற்றுவிட்டார். நாங்கள் அதுபற்றிக் கேட்டால், சொத்தில் தனக்கு மட்டுமே பாகம் உள்ளது எனவும், உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள் எனவும் கூறுகிறார். என் அம்மாவிற்கு எங்கள் தாத்தா சொத்தில் பாகம் உள்ளதா? நாங்கள் அதைப் பெற என்ன செய்ய வேண்டும்?

பதில் – 2.

உங்கள் தாத்தா தான் சுயமாக சம்பாதித்த சொத்தைப் பொறுத்து எந்த ஆவணமும் எழுதி வைக்காமல் காலமாகியிருந்தால், உங்கள் தாயார் மற்றும் அவருடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் சொத்தில் உரிமை உண்டு. உங்கள் மாமா சொத்தைத் தனிப்பட்ட முறையில் விற்றது செல்லாது என்று உங்கள் தாயார் நீதிமன்றத்தில் பாகம் கேட்டு வழக்குத் தொடர முடியும்.

கேள்வி – 3

என்னுடைய நண்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்துவிட்டார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவருடைய வருமானத்தில்தான் அவருடைய தம்பிகள் படித்து வருகின்றனர். அவருடைய அம்மாவிற்கும் என்னுடைய நண்பர் உதவி வந்தார். அவருடைய இறப்பிற்குப் பின்னர்அவரது குடும்பம் மிகவும் சிரமத்திலுள்ளது. இந்நிலையில் அவருக்குக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகையை அனைவருக்கும் அளிக்க வேண்டுமா?
K.S.ரத்தினசாமி, காரமடை

பதில் – 3

தங்களுடைய நண்பரின் வாரிசுகளாக வருபவர்கள் மட்டுமே இழப்பீட்டுத் தொகையைப் பெற உரிமையுள்ளவர்கள். அந்த வகையில் தங்கள் நண்பரின் தாயார், மனைவி அவருடைய இரண்டு மகள்கள் மட்டுமே வாரிசுகள் என்ற வகையில் இழப்பீடு கோர முடியும். அவருடைய இரண்டு தம்பிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

கேள்வி – 4

நான் ஒரு செக் (CHEQUE) கேஸ் போட்டிருந்தேன். எல்லா வாய்தாதத் தேதிகளுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தேன் ஒரு வாய்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வர இயலவில்லை. வழக்கறிஞரையும்
தொடர்பு கொள்ள இயலவில்லை. நான் அந்த தேதியில் அஜராகாததால் எனது வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்
M.டேனியல், திருப்பூர்.,

பதில் – 4

காசோலை குறித்த வழக்கைப் பொறத்தவரையில் எதிரி வரவில்லையயன்றால் பிடிவாரண்டும், புகார்தாரர் வரவில்லையயன்றால் வழக்கைத் தள்ளுபடி செய்வதும் வாடிக்கையாக நடைபெறும் நிகழ்ச்சியாகிவிட்டது. இதில் வழக்குப் போட்டவருக்குத்தான் பாதிப்பு அதிகம். ஒரு எதிரிக்குப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டால், அந்த பிடிவாரண்ட் பிறப்பித்த நீதி மன்றத்திலேயே பிடி வாரண்டை ரத்து செய்யக் கோரி ஒரு மனு தாக்கல் செய்து பிடிவாரண்டை ரத்து செய்து விடலாம். ஆனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால் உயர்நீதிமன்றத்தில்தான் மேல் முறையீடு செய்ய வேண்டும். நீங்கள் உயர்நீதிமன்றத்தில் மனு செய்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரலாம்.

About வழக்கறிஞர் A K ராஜேந்திரன்

View all posts by வழக்கறிஞர் A K ராஜேந்திரன் →