சட்டம் என்ன சொல்கிறது???

lawகேள்வி -1

புரோநோட் மூலம் கடன் வாங்கியவர் கடனை அடைக்காமலே போகும் பட்சத்தில் சாட்சி கையெழுத்திட்டவர் குற்றவாளியாகக் கருதப்பட்டு கடனை அடைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா?
P.வதூத் மேட்டுப்பாளையம்…

பதில் – 1

புரோநோட் மூலம் கடன் வாங்கியவர் கடனை அடைக்காத பட்சத்தில், சாட்சியாகக் கையெழுத்திட்டவர் அக்கடனை அடைக்க வேண்டுமென்று எந்தவொரு சட்டமும் கூறவில்லை.  யாரோ தவறுதலாகக் கூறியதைக் கேட்டு இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறீர்களென்று நினைக்கிறேன்.  கடன் வாங்கியவர் கடனை அடைக்காத பட்சத்தில் இக்கடனுக்கு உத்திரவாதம் (Guarantee) அளித்தவரும் பிணை (Surety) கொடுத்தவரும் அந்தக் கடனை அடைக்கக் கடமைப்பட்டுள்ளவர்கள் ஆவர்.  அவர்கள் அடைக்க மறுக்கும் பட்சத்தில் குற்றவாளிகளெனக் கருதப்பட்டு அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க இடமுண்டு.  எனவே அடுத்தவர் கடனுக்கு சாட்சியாக (Witness) கையெழுத்திட்டவர் குற்றவாளியயனக் கருதப்படமாட்டார்.  குற்றவாளியென எந்த சட்டமும் கூறவில்லை…

கேள்வி – 2

எனது பாட்டனார் காலம் முதல் ஒரு இடத்தில் சாளை வீடு கட்டி சுமார் 40 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம்.  யாரும் ஆட்சேபணை செய்யவில்லை; உரிமையும் கொண்டாடவில்லை.  தற்போது அந்த இடம் மாநகராட்சிக்குப் பாத்தியப்பட்டதென்றும், சாளை வீட்டை உடனே காலி செய்யாவிட்டால் இடித்து விடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள்.  நான் என்ன செய்ய வேண்டும்? B.கங்காதரன்,ஆவரம்பாளையம்…

பதில் – 2

நீங்களும் உங்கள் முன்னோர்களும், தங்கு தடையின்றியும் எவ்வித ஆட்சேபணையுமின்றி சம்பந்தப்பட்ட இடத்தில் சாளை வீடு அமைத்து 30 ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருந்து வந்ததால் அந்த இடம் உங்களுக்கு அனுபவ பாத்தியத்தின் மூலம் உரிமை ஏற்பட்டு விடுகிறது. அதை நிரூபணம் செய்ய வேண்டும்.  திடீரென்று அறிவிப்பு எழுத்து மூலம் இல்லாமல் வெளியேற்ற முடியாது…

கேள்வி -3

நான் ஒரு வீட்டை Power Agent  மூலம் கிரையம் பெற்றுள்ளேன்.  அந்த வீட்டில் Power கொடுத்த நபர்கள் குடியிருந்து வருகிறார்கள்.  அவர்களிடம் வீட்டைக் காலி செய்யச் சொன்னால் அவர்கள்  Power செல்லாது என்று கூறி வீட்டைக் காலி செய்து எனக்கு சுவாதீனம் செய்து தர மறுக்கிறார்கள்.  எனக்கு எதுவும் புரியவில்லை.  நான் என்ன செய்வது?
ஹி.வீராசாமி,மேட்டுப்பாளையம்…

பதில் – 3

தாங்கள் வீட்டைக் கிரையம் பெற்ற தேதியில் Power பத்திரம் ரத்து செய்யப்படாமல் இருந்தால் உங்களுக்கு Power Agent எழுதிக் கொடுத்த கிரையம் செல்லும் .  நீங்கள் அன்றிலிருந்து கிரையம் பெற்ற தேதியில் அவர்கள் கூறுவது ரத்து செய்திருந்தால் உங்கள் கிரையம் செல்லாது.  ஆவணங்கள்  அனைத்தும் சரியாக இருந்தால், நீங்கள் வீட்டில் குடியிருப்பவரைக் காலி செய்ய நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க இயலும்…

கேள்வி – 4

என்னுடைய நிலத்தைக் கடந்து எங்கள் கிராமத்திற்குப் போக அமைந்துள்ள நெடுஞ்சாலைக்குப் போக இடையே வேறு இருவருக்கும் நிலம் உள்ளது.  அவர்களுக்கும் நெடுஞ்சாலைக்குப் போக அவர்கள் நிலத்தை ஒட்டியே பாதை உள்ளது.  எங்கள் நிலத்தை ஒட்டியே நெடுஞ்சாலையை அடைய இருக்கும் பாதையைத் தவிர வேறு பாதை கிடையாது.  தற்போது நடுவில் மையத்தில் இருப்பவர் நான் அவர் நிலத்தை ஒட்டி இருக்கும் பாதையில் போய் நெடுஞ்சாலையை அடைய தடை செய்து வருகிறார்.  இது சரியா?
S.ஆறுசாமி,கோவை…

பதில் – 4

சரியல்ல.  சட்டப்படி உங்களுக்கு வேறு மாற்றுப் பாதையும் இல்லாத பட்சத்தில், நீங்கள் அவர் நிலத்தை ஒட்டிப் போகும் பாதையை உபயோகித்து நெடுஞ்சாலையை அடைய அவர் தடை செய்யக்கூடாது.  தடை செய்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உங்கள் புழக்க உரிமையை நிலை நிறுத்தலாம்…