சட்டம் என்ன சொல்கிறது?

l3x00mdcகேள்வி – 1:

எனது கணவரிடத்தில் ஒருவர் கடன் பெற்றிருந்தார்.  எனது கணவர் திடீரென்று காலமாகிவிட்டார்.  அவர் காலமானதற்குப் பின்னர் அவரிடம் பெற்ற ரூ.1,00,000/- ரூபாயில் ரூ.20,000 மட்டும் எனக்குக் கொடுத்துவிட்டு மீதி ரூ.80,000 க்கு அவர் எனக்கு மாதம் ரூ.4,000 வீதம் 20 மாதங்களில் திருப்பித் தருவதாக ஸ்டாம்ப் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதிக் கொடுத்ததார்.  அதன்படி 3 மாதங்கள் ரூ.2000 வீதம் ரூ.6000 மட்டும் கொடுத்தார்.  கடந்த ஐந்து மாதங்களாகப் பணம் எதுவும் தர மறுக்கிறார்.  நான் அவருக்கு நேரடியாகப் பணம் எதுவும் தராத பட்சத்தில் என் கணவர் கொடுத்த பணத்திற்கு நான் கேஸ் போட்டு வசூலிக்க முடியுமா?
J.ராணி, திருப்பூர்

பதில் – 1:

உங்கள் கணவர் காலமான பின்பு அவருக்குச் செலுத்த வேண்டிய தொகையை ஒப்புக் கொண்டு செலுத்த வேண்டிய ரூ.1,00,000 த்தில் ரூ.20,000, பின்பு ரூ.2000 வீதம் 3 மாதங்கள் உங்களிடம் ரூ.6000 செலுத்தப்பட்டிருந்தாலும், நீங்கள் உங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பாக்கி தொகையை செலுத்தும் படி அவருக்குப் பதிவுத் தபால் மூலம் அறிவிப்பு கொடுக்க வேண்டும்.  அப்படியும் அவர் தொகையை உங்களிடம் செலுத்தாவிடில், நீங்கள் வழக்கு தொடர்ந்து செலுத்தப்பட வேண்டிய தொகையும் வட்டியும் செலவுத் தொகையுடன் வசூல் செய்ய இயலும்.

கேள்வி – 2:

என் தகப்பனைப் பெற்ற பாட்டனாருக்கு பூர்வீக பாத்தியப்பட்ட சொத்துக்களை எனது தகப்பனாரும் அவரது சகோதரரும் ஆளுக்குப் பாதியாக பாகம் செய்து கொண்டார்கள்.  எனது தகப்பனாருக்கு வந்த பாகத்தில்
வந்த சொத்துக்களில் எனக்கும் எனது சகோதரர்களுக்கும், எனது இரண்டு சகோதரிகளுக்கும், எனது தாயாருக்கும் பாகம் உண்டா?  எனது தகப்பனாருக்கு பாகத்தில் கிடைத்த சொத்துக்கள் அவருடைய தனிப்பட்ட சுயமான சொத்துக்கள் எனக் கருதச்  சட்டத்தில் இடம் உண்டா?
மனோகரன், புளியம்பட்டி,

பதில் – 2:

பூர்வீகச் சொத்துக்களை உங்கள் பாட்டனார் காலமானபின் உங்கள் தகப்பனாரும் அவரது சகோதரரும் பாகம் செய்து கொண்டு தனித்தனியாக ஆளுக்குப் பாதி சொத்துக்களை அடைந்து கொண்டு அனுபவித்து வருகிறார்கள்.  உங்கள் தகப்பனாருக்குப் பாகத்தில் கிடைத்த சொத்துக்களை அவரது தனிப்பட்ட சுயமான சொத்துக்கள் என இந்து சட்டப்படி கருத இயலாது.  பூர்வீகச் சொத்துக்களிலிருந்து அவருக்குக் கிடைத்த சொத்து. ஆகவே அவர் பாகத்தில் வந்த சொத்து ஆறு ஏக்கர் நிலம் என உதாரணத்திற்கு வைத்துக் கொண்டால், நீங்களும் உங்கள் சகோதரரும் பிறப்பின் படி (by Birth) பாகம் பெறக்கூடிய நபர்கள் ஆவீர்கள்.  ஆக, உங்கள் தகப்பனாருக்கு இரண்டு ஏக்கர், உங்களுக்கு இரண்டு ஏக்கர், உங்கள் சகோதரருக்கு இரண்டு ஏக்கர் (ஆளுக்கு 1/3 பாகம்) உங்கள் தகப்பனாருடைய 1/3 பாகமாக இரண்டு ஏக்கர் சொத்திலிருந்து உங்கள் தாயாருக்கு ஜீவனாம்சமும், சகோதரிகளைப் பராமரித்துத் திருமணம் செய்யும் கடமையுள்ளது.  அவர்கள் அதைச் சட்டப்படி கேட்கும் உரிமை உள்ளது.  உங்களுக்குச் சேர வேண்டிய 1/3 பாகத்தை அதாவது இரண்டு ஏக்கர் நிலத்தைத் தனித்துப் பிரித்துக் கொடுக்க நீங்கள் பாகத் தீர்ப்புக்காக வழக்குப் போட இயலும்.

உங்களுக்குள் பாகம் எதுவும் ஏற்படாமல் உங்கள் தகப்பனாரும் அவரது பாகத்துக்குக் கிடைத்த இரண்டு ஏக்கர் நிலத்தைப் பொறுத்து எதுவும் எழுதி வைக்காமல் காலமாகிவிட்டார் என வைத்துக் கொண்டால் அவருடைய 1/3 பாகமான இரண்டு ஏக்கர் நிலத்தில் உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் உங்கள் இரண்டு சகோதரிகளுக்கும் உங்கள் தயாருக்கும் சம பாகம் உண்டு.

கேள்வி – 3:

எங்கள் குடும்பத்திற்குப் பாத்தியப்பட்ட பூர்வீகச் சொத்து உள்ளது.  நான் படித்து அரசு வேலையில் சேர்ந்த பிறகு தனியாக வீடு வாங்கியுள்ளேன்.  என்னுடைய தம்பி (நாங்கள் இருவர் மட்டுமே உள்ளோம்) நான் பொதுக் குடும்ப வருமானத்தில் படித்து வேலைக்குச் சென்று அந்த வருமானத்தில் வீடு வாங்கியதால், அந்த வீட்டிலும் தனக்கு பாகம் உள்ளது என்று கூறி வருகிறார்.  அது சரியா?
M.கனகராஜ், உடுமலைப்பேட்டை

பதில் -3:

பொதுக் குடும்ப வருமானத்தில் படித்தாலும் உங்களுடைய வருமானத்தைக் கொண்டு வீடு வாங்கியுள்ளதால் அது பூர்வீக சொத்தின் மூலம் வந்த சொத்தாகக் கருத முடியாது.  உங்கள் தம்பி கூறுவது போல், நீங்கள் உங்கள் பெயரில் வாங்கிய வீட்டில் பாகம் கேட்டு அவர் உரிமை கொண்டாட முடியாது.  நீங்களும் உங்கள் தம்பியும் பூர்வீகச் சொத்தை மட்டுமே பாகம் பிரிக்க இயலும்.

கேள்வி – 4:

நான் அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தேன்.  நான் என் உடல் நிலையைக் காரணமாக ஆறாண்டுகள் மருத்துவ விடுப்பில் இருந்தேன்.  ஒவ்வொரு ஆண்டாக விண்ணப்பம் கொடுத்து அதனடிப்படையில் எனக்கு விடுப்பு வழங்கப்பட்டது.  அதன்படி விடுப்பு முடிந்து பணியில் சேரச் சென்றபோது நான் ஐந்தாண்டுகளுக்கு மேலான மருத்துவ விடுப்பு எடுத்துள்ளதைக் காரணம் காட்டி
என்னைப் பணி நீக்கம் செய்து விட்டனர்.  பணி நீக்கம் செய்தது தவறு என நானும் கடந்த பத்தாண்டுகளாக கவர்னர், முதல்வர், கலெக்டர் மற்றும் என்னுடைய  துறைத் தலைவர்கள் எனப் பலருக்கும் மனுக்கள் அனுப்பியுள்ளேன்.  இதுவரை எந்த பதிலும் இல்லை.  எனக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ இயலுமா?

பதில் – 4:

தங்கள் பணி நீக்கம் குறித்து மாநில தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்து தங்கள் பக்கமுள்ள நியாயத்தை எடுத்துக் கூறி மீண்டும் பணியில் சேர்ந்திருக்கலாம். விடுப்புக்கோரி அனுப்பிய விண்ணப்பத்தைச் சரியாகப் பரிசீலிக்காமல் விடுப்பு அளித்தது தங்களுடைய மேலதிகாரியின் தவறு. அதற்குத் தங்கள் மீது குற்றம் சுமத்தி பணி நீக்கம் செய்தது எந்த வகையிலும் நியாயமற்ற செயல்.  தாங்கள் இப்போது கூடத் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்பாயத்தின் மூலம் நியாயம் தேட இயலும்.

About வழக்கறிஞர் A K ராஜேந்திரன்

View all posts by வழக்கறிஞர் A K ராஜேந்திரன் →