சட்டம் என்ன சொல்கிறது?

l0trai5cகேள்வி 1

எங்களுடைய நிலத்தை நில அளவைத் துறையினர் நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தில் அளந்தனர்.  ஆனால் அதற்கான ஆவணங்களைத் தராமலும் முட்டுக்கற்கள் போடாமலும் காலதாமதம் செய்கின்றனர்.  பலமுறை கேட்டும் சரியான பதிலில்லை. எத்தனை நாட்களுக்குள் நிலத்தை அளந்து (Sub – Division)  செய்து தர  வேண்டும்?  என்னுடைய பிரச்சினைக்கு நான் யாரை  அணுக வேண்டும்.?
=S.மாரியப்பன், பொள்ளாச்சி=
 
பதில் – 1

நிலத்தை அளந்து உட்பிரிவு (Sub – Division) செய்து உடனே பதிவு செய்தல் வேண்டும்.  நில அளவை உட்பிரிவு இறுதி செய்யப்பட்டபின் நில அளவைப் பதிவேட்டின் நகலின்படி நில அளவை முடிந்தவுடன் எல்லைக் கற்கள் உடனே நடவேண்டும். அதற்கெனக் காலக்கெடு எதுவுமில்லை.  நிலச் சொந்தக்காரருக்கு அவர் மனுவின்மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகல் கொடுக்கப்படும்.  அதில் அனைத்து விபரங்களும் அடங்கியிருக்கும்.  தங்களுடைய பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலரிடமும், மாவட்ட நில அளவைக் கண்காணிப்பாளரிடமும், எழுத்து மூலமாகப் புகார் செய்யலாம்.  மக்கள் குறை தீர்க்கும் நாளன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும், புகார் செய்யலாம். எதுவும் பலனிக்கவில்லையயனில் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணலாம்.

கேள்வி – 2.

நான் பழைய தங்க நகைகளை வாங்கி விற்பேன்.  சில சமயங்களில் நகையை அடகும் பிடிப்பேன்.  கடந்த மாதம் என்னிடம் நகையை விற்ற ஒரு நபரை போலீசார் என்னிடம் அழைத்து வந்தனர்.  அந்த நபர் என்னை அடையாளம் காட்டி என்னிடம் நகையை விற்ற விவரத்தைக் கூறினார்.  காவல் துறையினர் நான் திருட்டு நகை வாங்கியிருப்பதாகக் கூறி என் மீது வழக்குப் போட வேண்டும் என்றனர்.  எனக்கு அது திருட்டு நகை என்று தெரியாது.  நான் நகை அடமானம் பிடிக்க எந்த லைசென்சும் பெற்றிருக்கவில்லை. பல சிரமங்களுக்கிடையில் அந்தப் பிரச்சனையைச் சமாளித்தேன்.  எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சிக்கல்கள் வராமல் நான் தடுப்பது எப்படி?
=பாக்கியநாதன், திருப்பூர்=

பதில் – 2

தாங்கள் நகையை அடகு பிடிப்பதற்கெனத் தனியாக உரிமம் ஒன்றினை அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டும். அந்த வேலையை உடனடியாகச் செய்யுங்கள். சில நேரங்களில் திருட்டு நகையும் அடகுக்கு வந்துவிடும்.  அடகு வைக்க வருபவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.  நகையை அடகு பிடித்தவர் அல்லது வாங்கியவர் அது திருட்டு நகை எனத் தெரியாமல் பெற்றிருந்தால் அது குற்றமாகக் கருதப்பட மாட்டாது. இதனை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.  முடிந்தவரை விழிப்புடன் இருப்பது நல்லது.

கேள்வி – 3

எனது நண்பருக்குப் பாத்தியப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை பிளாட் பிரித்து மனையிடங்களாக விற்பதற்கு விலை பேசி அட்வான்ஸாகக் கிரையத் தொகையில் ¾ பாகத்தை ரொக்கமாகக் கொடுத்தேன்.  எனது நண்பர் எனக்கு ஒரு பவர் பத்திரத்தைப் பதிவு செய்து கொடுத்தார்.  அந்த பவர் பத்திரத்தை ஆதரவாகக் கொண்டு நான் 10 நபர்களிடம் கிரய ஒப்பந்தங்கள் செய்து கொண்டு முன் பணம் ரொக்கமாகப் பெற்றுக் கொண்டேன். மேலும் பவர் பத்திரத்தின் மூலம் பெற்ற நிலத்தைப் பண்படுத்தி சீர் செய்து பிளாட்களாகப் பிரித்து லே அவுட் வரைபடமும் நான் செலவு செய்து பெற்றேன்.  இந்நிலையில் எனக்கும் எனது நண்பருக்கும் இடையே ஏற்பட்ட மன வருத்தத்தால் அவர் பதிவு செய்து கொடுத்த பவர் பத்திரத்தை ரத்து செய்து விட்டார்.  தற்போது நான் ஏற்கெனவே பவர் ரத்து ஆவதற்கு முன் செய்து கொடுத்த கிரய ஒப்பந்தத்தின்படி 10 நபர்களுக்கு பிளாட்களை கிரயம் செய்து கொடுக்கலாமா?

பதில் – 3

உங்கள் நண்பரால் எழுதிக் கொடுக்கப்பட்ட பவர் பத்திரம் நடைமுறையில் இருந்தபோது உங்களால் எழுதிக் கொடுக்கப்பட்ட கிரய ஒப்பந்தங்கள் சட்டப்படி நிலை நிற்கும்.  அதை உங்கள் நண்பர் ஆட்சேபணை செய்ய இயலாது.  வீண் விவகாரம் மட்டும் செய்ய முடியும் வழக்கு
என்று வந்தால் உங்கள் நண்பரையும் சேர்த்து வழக்குத் தொடர்ந்தால் உங்கள் தரப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பு அமையும்.

கேள்வி – 4

நான் ஒரு மோட்டார் பைனான்ஸ் கம்பெனியின் பைனான்ஸ் உதவியுடன் ஒரு அம்பாசிடர் காரை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தேன்.  சுமார் பத்து தவணைகள் கட்டியிருப்பேன் திடீரென்று எனக்கு உடல நலக் குறைவு ஏற்பட்டுக் காரை ஓட்ட முடியாத நிலை வந்தது.  அப்போது பைனான்ஸ் கம்பெனிக்காரர்கள் அந்த காரை விற்று மீதித் தொகைக்கு அட்ஜஸ்ட் செய்து விடலாம் என்று என்னிடம் கூறி சில பேப்பரில் கையயழுத்து வாங்கிக் கொண்டு காரையும் எடுத்துச் சென்றனர்.  நானும் பிரச்சினை முடிந்தது என்றிருந்தேன்.  சுமார் ஒரு வருடம் கழித்து கடந்த மாதம் கார் விற்று வந்த பணத்தை வரவு வைத்தது போக இன்னும் ரூ.90,000 செலுத்த வேண்டும் என்று எனக்கும் எனக்கு ஜாமீன் போட்ட இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  நான் என்ன செய்வது.?
=A.ஜாலுதீன் , மேட்டுப்பாளையம்.=

பதில் – 4

நீங்கள் காரை பைனான்ஸ்காரர்களிடம் ஒப்படைக்கும்போதே இனிமேற் கொண்டு பணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை (Full and Final Settlement) என்று கடிதம் வாங்கியிருக்க வேண்டும்.  நீங்கள் அவ்வாறு கடிதம் வாங்கத் தவறிவிட்டது தெரிகிறது.  இந்நிலையில் கார் விற்று வந்த பணத்தை வரவு வைத்தது போக, மீதமுள்ள தொகையை செலுத்தும்படிக் கூற பைனான்ஸ்காரர்களுக்கு உரிமையுள்ளது உங்களுக்கு ஜாமீன் கையயழுத்துப் போட்டவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலும்.  எனவே தாங்கள் தங்களுடைய நிலைமையை எடுத்துக் கூறி பிரச்சினையைச் சுமூகமாக முடிக்கப் பாருங்கள்.

About வழக்கறிஞர் A K ராஜேந்திரன்

View all posts by வழக்கறிஞர் A K ராஜேந்திரன் →