சட்டம் என்ன சொல்கிறது?

w3கேள்வி – 1

மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு மோட்டாரை வீட்டுத் தொட்டியிலிருந்து மேல் தொட்டிக்குத் தண்ணீர் ஏற்ற வாங்கினேன்.  அதோடு தொட்டியில் தண்ணீர் இல்லையயன்றாலும், நீர் நிறைந்தாலும் “ஆன்” ஆகி பின் “ஆப்” ஆகும் WATER LEVEL CONTROLLER ஒன்றையும் வாங்கினேன்.  இவற்றை வாங்கிய நாள் முதல் WATER LEVEL CONTROLLER DEVICE ல் பிரச்சினை.  அவ்வப்போது அவற்றை விற்ற நபர் அதனைச் சரி செய்து தருவார்.  ஆனால் இந்த முறை அது சரியாக வேலை செய்யாத போது அதனைச் சரி செய்ய மறுத்துவிட்டார்.  நான் அதை வாங்கிய நாளிலிருந்து நிறைய மன உளைச்சலை அடைந்து விட்டேன்.  அந்த WATER LEVEL CONTROLLER DEVICE ஐத் தயாரித்த நிறுவனத்தின் மீதும், விற்ற நபர் மீதும் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர இயலுமா?
பரமசிவம், கோவை.

பதில் – 1

விலையைக் கொடுத்து ஒரு பொருளையோ, கட்டணம் செலுத்தி சேவையையோ வாங்குகிறபோதோ, பெறுகிறபோதோ,  அதில் குறைபாடு இருப்பின் அதனால் ஏற்படும் இழப்பீட்டிற்கும் மன உளைச்சலுக்கும் நுகர்வோர் நீதி மன்றத்தின் மூலம் பரிகாரம் தேட முடியும்.  தங்களுடைய வழக்கில் சேவைக் குறைபாடு அல்லது பொருளின் தரத்தில் குறைபாடு ஏற்பட்டு சுமார் மூன்றாண்டுகள் ஆகிவிட்டபடியால் நுகர்வோர் நீதிமன்றம் மூலம் இழப்பீடு கோருவது சிரமம்.  குறைபாடு தெரியவந்த நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகியிருந்திருக்க வேண்டும்.

கேள்வி – 2

நான் ஒரு கல்லூரியில் டிகிரி முடித்துவிட்டேன்.  அந்தக்
கல்லூரியிலிருந்து என்னுடைய அனைத்துச் சர்டிபிகேட்களையும் பெற்றுவிட்டேன்.  நான் கல்லூரியில் சேரும்போது கொடுத்த 10வது மற்றும் +2 மார்க் சீட் ஆகியவற்றைத்தராமல் இழுத்தடிக்கின்றனர்.  பல முறை கேட்ட போது யுனிவர்சிட்டியிலிருந்து வரவில்லை என்று கூறினர்.   யுனிவர்சிட்டியில் விசாரித்த போது கல்லூரிக்கு அனுப்பிவிட்டதாகக் கூறினர்.  எனது எதிர்காலம் பாதித்து விடுமோ என்கிற பயம். நீதிமன்றத்தை இப்பிரச்சினை தீர நாடலாமா?
R. அமுதா, திருப்பூர்

பதில் – 2

தற்போது உங்களுடைய 10வது மற்றும் +2 மதிப்பெண் பட்டியல்கள் எங்கு உள்ளன, அவை என்னவாயிற்று என்பதற்குக் கல்லூரி நிர்வாகம் சரியான விளக்கம் தரவேண்டும்.  ஒரு வேளை உங்களுடைய மதிப்பெண் பட்டியல் காணாமல் போயிருந்தால் அவற்றின் நகல் (DUPLICATE) மதிப்பெண் பட்டியல்களைக் கல்லூரி நிர்வாகமோ பல்கலைக்கழகமோ நடவடிக்கை எடுத்து உங்களுக்குப் பெற்றுத் தர வேண்டும்.  இதனால் உங்களுடைய எதிர்காலம் பாதித்து விடுமோ என்ற அச்சம் தேவையற்றது.  இப்பிரச்சினைக்கு நுகர்வோர் நீதிமன்றத்தையும் அணுகலாம்.  உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு கோரலாம்.  கல்லூரி நிர்வாகத்திடம் அமைதியாகப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காண முயலுங்கள்.

கேள்வி – 3

நான் ஒரு வீட்டை ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கினேன்.  சொத்துக் குறித்த ஆவணங்கள், வில்லங்கச் சான்றிதழ் ஆகியவற்றைச் சரிபார்த்தபோது எந்த வில்லங்கமும் இல்லை.  வக்கீலிடம் ஒப்பீனியன் பெற்றுக் கிரையம் செய்தேன்.  சுமார் ஒரு வருடம் கழித்து எனக்கு அவர் சொத்தைக் கிரையம் பெற்றதை ரத்து செய்யக் கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து சம்மன் வந்துள்ளது.  அதில் எனக்கு சொத்தை விற்கும் போது விற்றவர் IP (திவாலானவர்) நீதிமன்றம் அறிவித்திருந்த விபரம் தற்போது தெரிய வந்துள்ளது.  இப்போது நான் கிரையம் பெற்றது செல்லுமா?
S.R..மல்லிகா, மேட்டுப்பளையம்    

பதில் -3

ஒருவர் நீதிமன்றத்தால் திவாலானவர் என்று அறிவிக்கப்பட்ட பிறகு அவர் எந்த வகையான ஒப்பந்தமும் போடத் தகுதியற்றவர்.  இந்நிலையில் ஒரு சொத்தைக் கிரையம் செய்து கொடுப்பது சட்டப்படி செல்லத் தக்கதல்ல.  அவர் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தான் திவாலானார் என்பதை மறைத்து உங்களுக்கு அந்த சொத்தைக் கிரையம் செய்து கொடுத்ததால் அதைத் தெரிந்த ஒருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  தாங்கள் பெற்றக் கிரையம் நீதிமன்றத்தில் ரத்து செய்ய வாய்ப்புக்கள் அதிகமுண்டு.

கேள்வி – 4

எனக்கு ஒருவர் காசோலை ஒன்றினை அவர் என்னிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பி செலுத்தும் பொருட்டுக் கொடுத்தார். அவர், காசோலையை வங்கியில், அவர் சொல்லியிருந்த தேதியில் கலெக்­னுக்குப் போட்டேன்.  ஆனால் அவருடைய கணக்கில் போதிய பணமில்லை என்று அந்தக் காசோலை திரும்பி வந்துவிட்டது.  அவருக்கு நோட்டீஸ் கொடுத்தேன்.  அதனைப் பெற்றுக் கொண்டார்.  ஆனால் பணம் தரவில்லை.  அவர் மீது வழக்கு போட்டேன்.  ஆனால் அவர் அந்த முகவரியில் இல்லை.  கைது வாரண்ட பெற்றும் அவரைக் கைது செய்ய இயலவில்லை. நீதிமன்றத்தில் WARRANT PENDING CASES என வாய்தா போட்டு வருகின்றனர்.  என் வழக்கின் நிலை என்னவாகும்?
S.கணேஷ்மூர்த்தி, ஈரோடு.

பதில் – 4

நீதிமன்றம் பிறபித்த கைது வாரண்டை காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக நிறைவேற்ற வேண்டும்.  அவர் அந்த முகவரியில் இல்லை என்றும் காணாமல் போய்விட்டார் என்றும் காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்தில் தேடும் குற்றவாளி பட்டியலில் அவரைச் சேர்க்க இயலும்.  மொத்தத்தில் உங்கள் வழக்கு முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருக்கும்.

About வழக்கறிஞர் A K ராஜேந்திரன்

View all posts by வழக்கறிஞர் A K ராஜேந்திரன் →