சட்டம் என்ன சொல்லுகிறது….

l3x00mdcகேள்வி – 1

என் நண்பரின் மகள் அவளது பெற்றோருக்குத் தெரியாமல் ஒருவரைக் காதலித்துப் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள்.   அவளது பெற்றோர் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த பெண்ணும் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்துள்ளாள்.  இப்போது முதலில் செய்து கொண்ட பதிவுத் திருமணம் என்னவாகும்? அதனால் சட்டப்பிரச்சினை ஏதும் எழுமா?
M.வடிவேல், உடுமலை

பதில் – 1

திருமணம் நடந்தால் போதுமானது. அதனைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.  பதிவுத் திருமணம் என்பது திருமணம் நடைபெற்றதற்கான ஓர் ஆதாரம்.  அந்த ஆதாரம் திருமணத்தை நிரூபிக்கப் பயன்படும்.  உங்கள் நண்பரின் மகளின் பதிவுத் திருமணத்தை முறையாக நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து செய்ய இயலும். இல்லையென்றால் பல்வேறு வகையான சட்டச் சிக்கல்கள் எழும்.  எனவே விவாகரத்து மனுதாக்கல் செய்து முதல் கணவரிடமிருந்து விவாகரத்துப் பெறுதல் அவசியம் மட்டுமல்ல அது சட்டப்படி முறையானதும் ஆகும்.

கேள்வி – 2

என் மீதும் மற்றும் எனது நண்பர்கள் இரண்டு பேர் மீதும் அடிதடி வழக்கு நடந்து வருகிறது.  அதில் நான் மூன்றாவது எதிரி ஆவேன்.  என் நண்பர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் விட்டதால் அவர்களைக் கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து அது கடந்த ஆறு மாதங்களாக நிலுவையிலுள்ளது.  அவர்கள் ஊரைவிட்டே சென்று விட்டதாகத் தெரிகிறது.  அவர்களைப் பிடிக்கும் வரை நான் நீதிமன்றத்திற்குப் போய் வந்து கொண்டிருக்க வேண்டுமா?
S.பழனி, திருப்பூர்

பதில் – 2

தங்களுடைய நண்பர்கள் அதாவது 1 மற்றும் 2 வது எதிரிகள் மீதான வழக்கை அப்படியே வைத்துக் கொண்டு உங்கள் வழக்கை மட்டும் பிரித்து நடத்த முடியும்.  நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கைத் தனியாகப் பிரித்து, அதற்கு ஒரு வழக்கு எண் கொடுத்து விசாரித்து முடிக்கவும்.  உங்கள் வழக்கு என்பது தனி வழக்காக மாறிவிடுவதால் மற்ற எதிரிகள் மீது இருக்கும் வாரண்ட் பிரச்சினை உங்கள் வழக்கு விரைவில் முடிவதை எவ்விதத்திலும் பாதிக்காது.  நீங்கள் நீதி மன்றத்திற்கு அலையத் தேவையில்லை.

கேள்வி – 3

நான் ஒருவரிடம் கடன் வாங்கும் போது செக்கில் கையயழுத்து மட்டும் போட்டுக் கொடுத்திருந்தேன்.  அந்த செக் கொடுத்து பல வருடங்கள் ஆகியிருக்கும். இடையில் நான் அசலுக்கும் வட்டிக்கும் என பெரும் தொகையை அவருக்குக் கொடுத்து விட்டேன்.  தற்சமயம் அவர் அந்த செக்கைப் பூர்த்தி செய்து கலெக்சனுக்குப் போட்டு அது ரிட்டன் ஆகி என் மீது வழக்குப் போட்டுள்ளார்.  என் கையயழுத்தில் செக் எழுதப்படவில்லை என நான் வாதாட முடியுமா?
S.சுந்தரராஜன், காங்கேயம்

பதில் – 3

ஒரு காசோலையை யார் வேண்டுமானாலும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.  உங்களுடைய கையயாப்பம் (Signature) உங்களால் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் அவர் வெற்றுக் காசோலையைப் பூர்த்தி செய்து கொண்டார் என்ற உங்கள் வாதத்தை நீதிமன்றம் ஏற்காது.  எந்த வகையிலும் உங்களுக்கு சாதகமாக இருக்காது.

கேள்வி – 4

என் கணவர் என் மீது பல குற்றச்சாட்டுக்களைக் கூறி
நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தொடரப் போவதாகக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  நான் என் அம்மா வீட்டில் எனது மூன்று வயது குழந்தையுடன் கடந்த மூன்றாண்டுகளாக வசித்து வருகிறேன்.  எனது தந்தையாரும் மிகுந்த சிரமத்துடன் எங்களைப் பராமரித்து வருகிறார்.  நான் என் கணவரிடமிருந்து எனக்கும் என் குழந்தைக்கும் ஏதாவது உதவி பெற சட்டத்தில் வழி உள்ளதா?
மணிமேகலை, பல்லடம்

பதில் – 4

தங்களுடைய கணவர் தங்கள் மீது வழக்குத் தொடர்ந்து தங்களிடமிருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுகினால், நீங்களும் அதே நீதி மன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல்  செய்யலாம்.  உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அவர் கட்டாயம் ஜீவனாம்சம் கொடுத்தாக வேண்டும்.  அவரிடம் உதவி பெறுவது என்பதைவிட அவருடைய கடமையை நீதிமன்றத்தின் மூலம் ஆற்ற வைக்க வழிகள் உண்டு. சிவில் மற்றும் கிரிமினல் சட்டத்தின்படி ஜீவனாம்சம் பெற வழியுண்டு.