சாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும்

roadசாலையில் பயணம் செய்யும் போது “பார்த்து பத்திரமா சென்று வா!” என்று எச்சரிக்கும் தாய், தனது மகன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்ற அழுகுரலை நிறைய வேளைகளில் நாம் கேட்டுள்ளோம்; பார்த்தும் உள்ளோம். மகன் விபத்தில் உயிரை விட்டுவிட்டான் என்று தான் தெரியும் பலருக்கு, இன்னும் சிலருக்குப் போதிய பாதுகாப்புக் கவசங்கள் அணியவில்லை என்றும் தெரியும், இன்னும் ஒரு சிலருக்கு மட்டுமே தங்கள் மகனுக்குச் சாலை விதிகள் சரியாகத் தெரியாது என்பதும் தெரியும். இவையயல்லாம் மீறி அந்த விபத்திற்குக் காரணம் தன் மகன் சாலை விதிகளைச் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்றோ அல்லது எதிராளி சாலை விபத்தைத் தன் மகன் போன்று சாலை விதிகளைச் பற்றிச் சரிவர தெரியாதவரின் செயலால் விபத்து நடந்தது என்றோ, அல்லது சாலையைச் சரிவரப் பராமரிக்கத் தவறிய அரசோ, அல்லது வாகனத்தில் இயங்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்கவில்லை என்றோ சரிவர அறிய முடியாது. இந்த விபத்தின் விபரங்களை நீதி மன்றத்தில் அதற்குரிய வல்லுநர்கள் வைத்து ஆராய்ந்தால் மட்டுமே, காரணம் சரிவரத் தெரிய வரும். “அதெல்லாம் தெரிந்து என்ன பயன்? என் மகன் தான் போய்ச் சேர்ந்து விட்டானே!” என்பர் மகனை இழந்த பெற்றோர். இது சராசரி பெற்றோரின் நிலை. அவர்கள் அனுபவித்த துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணும் ஒரு சிலர் மட்டுமே, அதற்குறிய தீர்வை காண்பர். தமிழகம் தான் இந்தியாவில் சாலை
விபத்துகளில் முதலிடம் என்ற விபரத்தை வைத்துப் பெருமை கொள்ள முடியாது. வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணி, விபத்துக்களில் முதலிடத்தில் உள்ளோம் என்பது வேதனைக்குறியது.

நம் நாட்டில் இரு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவது மிகவும் எளிது. உரிமம் பெறுவதற்கு முதலில் LLR என்கிற ஓட்டிப் பழகும் அனுமதி பெற்று, 180 நாட்களுக்குள் (அனுமதி அளித்த 30 நாட்களுக்குப் பிறகு) நாம் வசிக்கும்RTO க்குச் சென்று வாகனத்தை ஓட்டிக் காட்டுவது வழக்கம். அந்தச் சோதனையின் போது சாலை விதிகள் பற்றிக் கேள்விகளும், வாகனத்தின் சீரான ஓட்டத்தைப் பற்றியும் ஒரு சில கேள்விகள் கேட்பது, வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும் என்பது வழக்கம். மோட்டார் வாகனத்திற்குரிய சட்டம் 1974 ம் ( தமிழ் நாடு ) ஆண்டு இயற்றப்பட்டு 1989 ல் அதற்குத் திருத்தங்கள் பலவற்றையும் கொண்டு வந்தனர். இது சுமார் 26 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஆனால் நிலப் பதிவுச் சட்டம் 1871 ல் இயற்றப்பட்டது. அதன் பின்னர் பல முக்கிய மாற்றங்கள் தாமதமாக இருந்தாலும் பல மாற்றங்களைச் இந்த சட்டத்தில் மத்திய அரசு செய்துள்ளது. அதே போல் 1989ல் இருந்த வாகன எண்ணிக்கையும் இன்றைய வாகன எண்ணிக்கையும் வைத்துப் பார்த்தால், மாற்றங்கள் குறைந்த பட்சமாக 10 வருடங்களுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும. 2015 ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் மட்டும் 5,00,000 கார்கள் விற்பனை என்ற புள்ளி விபரத்தைக் கருத்தில் கொண்டு வேகமாகச் சீர்த்திருத்தங்கள் தேவை என்பதை மறுக்க முடியாது.

1988ம் ஆண்டின் சட்டத்தின் கீழ், சாலையில் நில் (STOP) என்ற கோட்டைத் தாண்டினால் ரூ.100 அபராதம். இன்றைய சூழலில் இந்த அபராதம் போதியதில்லை. இனி வரவிருக்கும் சட்டத்தில் அதை முதல் முறை தவறுக்கு ரூ,500ம், இரண்டாம் முறை தவறுக்கு ரூ.1000/- ம், மூன்றாம் முறை தவறுக்கு ரூ.1500ம் அபராதம் விதிப்பதோடு மற்றும் ஒரு மாதத்திற்கு ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்யவும் கூறப்பட்டுள்ளது. இப்போது மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ள புதிய சட்டம் இவ்வகையில் அமைந்துள்ளது.

ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது உரிமை அல்ல. அது ஒரு சலுகை (PRIVILEGE) என்பதே. இதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் ஒரு முக்கிய நோக்கம். ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு சட்டத்திட்டங்களை வைத்து ஓட்டுநர் உரிமங்களை வழங்கி வருகின்றன . மத்திய அரசு இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து எல்லா மாநிலங்களின் ஒரே சட்டம் என்றே கொண்டு வர முயலுகிறது. இதனால் நாடு முழுவதும் ஒருவர் ஒரே ஒட்டுநர் உரிமம் வைத்து வாகனம் ஓட்டலாம். இதனால் ஒன்றுக்குமேற்பட்ட ஒட்டுநர் உரிமம் வைத்திருப்போர்கள் சரண்டர் செய்யவேண்டிய நிலை உருவாகும். அல்லது அவை அனைத்தும் செயலிழந்து போகும். மேலும், ஒட்டுநர் உரிமம் பெறுவதற்கு உண்டான சட்டங்கள் கூடுதலான சோதனைகள் கொண்டதாக அமைய உள்ளது, இதனால் சாலைவிதிகளின் விழிப்புணர்வு அதிகரிப்பதனால் விபத்துகள் குறையும் என நம்புகிறது அரசு.

உலகத்தில் உள்ள அனைத்து வாகனங்களில் இந்தியாவில் உள்ளது 1% மட்டுமே, ஆனால் உலகளவில் உள்ள விபத்துகளில் இந்தியாவில் 15% நடக்கின்றன. இதில் தமிழகம் முதலிடம் என்பதால், நாம் உடனே, தீர்வு காண்பது அவசியமாகிறது.

சாலைகளில் பயணம் செய்ய ஒட்டுநரின் உரிமம், வாகனத்தைச் சரியாகப் பதிவு செய்து, போதிய காப்பீடு செலுத்தி வாகனத்தைச் சீரான ஓடும் நிலையில் வைத்திருப்பது போன்றவை அடிப்படை. இந்தியாவில் உள்ள வாகனங்களில் சுமார் 20% மட்டுமே போதிய காப்பீடு வைத்துப் பயணம் மேற்கொள்ளப்படுகின்றன. இதனாலேயே விபத்துக்கள் நிகழும் போது பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு அவர்களால் பெற முடியாமல் தவிப்புக்கு ஆளாகின்றனர். விஞ்ஞானம் வளர்ந்துள்ள இக் காலகட்டத்தில் ஒவ்வொரு ஓட்டுநர் உரிமங்களையும் கணினிமயமாகவும், சிம் கார்ட்டு பதிவு மூலமாகவும் வைத்தால் நாடு முழுவதும் பிரச்னைக்குரிய ஓட்டுநர்களைக் களைந்து விடலாம். பல நேரம் சரியாக ஓட்டவில்லை என்பதனால் தான் சிறிய சாலைகளிலும் விபத்துக்கள் நடக்கின்றன. உதாரணத்திற்கு ரயில்வே ஜங்சன்களில் (RAILWAY GATE-LEVEL CROSSING) எல்லோரும் வரிசையில் நின்றால் எந்தவிதப் பிரச்சனையில்லாமல் மெதுவாக அனைவரும் சென்றுவிடலாம். ஆனால் அப்படி நடப்பது அபூர்வம். இதெல்லாம் போதிய சாலை விதி விழிப்புணர்வு இல்லை மற்றும் இன்னும் ஒரு சிலர் பிற உயிர்களைப் பற்றி மிக அலட்சியமாக இருப்பது தான். ஓட்டுநர் பயிற்சி மையங்கள் பல இருந்தும் அவ்வப்போது அந்த சாலை விதிகளை நினைவூட்டும் வண்ணம் பயிற்சிகள் இருக்கவேண்டும் என்பதும் இன்றைய சட்டத்தில் இல்லை.

நீண்ட நாட்களாக சாலையில் உள்ள வாகனங்கள் சோதனைக்கு நிறுத்தப்பட்டு, பல ஆவணங்கள் வரி இல்லாததாலும், என்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரியாமல் பயணம் செய்வது பலருக்கு வழக்கம். காவல் அதிகாரிகள், மற்றும் போக்குவரத்துத் துறை சோதனையாளர்கள், குறிப்பாகச் சரக்கு வாகனங்கள் நிறுத்தும் போது, ஒட்டுநர் உரிமம், ட்ரிப்பு சீட், பிரேக் லைட், ஹெட்  லைட், இண்டிகேட்டர், மற்றும் வாகனத்தில் உள்ள சரக்கு எடை, குறித்த எடைக்கு மேல் இருப்பது போன்ற குற்றங்கள் நடைமுறையாகிவிட்டன. இதற்குக் காரணம் அந்தச் சரக்கை அனுப்பும் நபர் குறைந்த வாடகைக்கு நீண்ட தூரம் சரக்கை அனுப்ப வேண்டும் என்று எண்ணும் எண்ணம் தான். மேலும், சரக்கு லாரி ஒரு பாதையில் செல்ல, குறைந்தது ஒரு டன்னுக்கு ரூ. 20,000/- தேவை என்றால் அதற்கும் குறைவாக பிழைப்புக்கு ஓட்டும் நிலையும் உள்ளது. இன்னும் ஒரு சிலருக்கு எந்த விலையில் நமக்கு நஷ்டம் ஏற்படும் என்பதும் சரிவரத் தெரியாது. மேலும், இதில் வாகனத்தின் வயது (அதாவது எஞ்சின் இழுவைத்திறன்), மற்றும் பாடி நிலைமை என்பதை எல்லாம் சரிவர கவனிக்கமால் தனது சூழ்நிலையை மட்டுமே கருதும் போது, சாலையில் ஏற்படவிருக்கும் விபத்தின் தீவிரம் பற்றிச் சற்றும் எண்ணிப் பார்ப்பதில்லை. இதனாலும் பேரிடர்கள் நடந்து சம்பந்தம் இல்லாத சாலைப் பயணிகள், சாலை ஓரக் கடைகள், மற்றும் பிற வாகனப் பிரவேசிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதைத் தவிர்க்கும் வண்ணம் தலைநகர் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஓடியுள்ள டீசல் வாகனங்கள் சுற்றுப்புறச்சூழலைக் கருதி கண்டம் செய்ய வேண்டும். என்ற உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது அமலுக்குத் தடைவிதித்து நிவவையில் உள்ளது. இது போன்ற சட்டங்கள் நாடு முழுவதும் வரும் நாள் விரைவில்வரும். அப்படி வருகையில் புதிய வாகனங்கள் வெளியில் வரும் போது, பழைய வாகனங்கள் கட்டாயமாக எடைக்கு வரும், அதே இரும்பை வைத்துப் புதிய வாகனங்கள் தயாரிக்கலாம், கூடுதல் எரிப்பொருள் சிக்கனமும் பெற்று இன்றைய விஞ்ஞானத்தின் பலனை உடனே அடையலாம். வாகனங்களுக்குப் போதிய காப்பீடு இருந்தால் விபத்தில் பாதிப்படையும் நபர்களுக்கு ஓரளவுக்காவது நஷ்டஈடு தர இயலும், அவர்களையும் வறுமையில் தள்ளாமல் பார்த்துக் கொள்ளலாம்.புதிய வாகனங்கள் வாங்க நிதி வசதியையும் வங்கிகள் அளிக்க முன் வரும்போது வாகனம் பழுதாவது குறைந்து மாதத்தில் அதிகப்படியான நாட்கள் சாலையில் பயணித்து வாகன உரிமையாளருக்கு கூடுதல் லாபமும் ஈட்டித் தர வாய்ப்புள்ளது. வாகனங்கள் விதி மீறும் போது அவற்றை அரசு கைப்பற்றிய சம்பவங்கள் பல, அதன் பின்னர் அவ்வாகனங்கள் மீட்கும் போது (அபராதம் கட்டிய பின்னர்) அதில் உள்ள பாகங்கள், பேட்டரி போன்றவை காணாமல் போவது ஒன்றும் புதிதல்ல. அதை அதிகாரியிடம் சரிவர முறையிடவும் முடிவதில்லை. தில்லி நகரில் அபராதம் என்ற பெயரில் ரூ.200/- தந்து விட்டு அதற்கு ரசீது கேட்ட பெண்மணியைச் செங்கல்லில் தாக்கிய சம்பவமும் நடந்தது. அதைச் செல்போனில் படம் பிடித்ததால் மட்டுமே, அவரைத் தற்காலிக பணி நீக்கம் செய்ய முடிந்தது. ஆகையினால், இனி வரும் காலங்களில் இன்றைய தொழில் நுட்பத்தில் உள்ள விஞ்ஞானத்தின் மூலம் சட்டத்தை நிலை நாட்ட உதவும் அரசே அந்த கருவிகளைத் தேவைப்படும் அளவுக்கு பொருத்த வேண்டும். அவற்றை ஆதாரமாக நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

கனரக வாகனங்கள் வருடத்திற்கு ஒரு முறை FC (FITNESS CERTIFICATE) என்ற ஒரு சோதனையைத் தாண்டிய பின்னரே சம்மந்தப்பட்ட அதிகாரி வரிவசூல் செய்து, ( சாலையில் சரியாக இயங்கதக்க நிலையில் வாகனம் உள்ளது) என்ற சான்று அளித்த பின்னரே, அவ்வாகனம் சரக்கு ஏற்றிச் செல்லும் தகுதியைப் பெறுகிறது. அந்தச் சோதனைக்குப் போதிய காப்பீடு மற்றும் பழைய அபராதத் தொகையில் எதுவும் இல்லாது இருத்தல் அவசியம். இதே போன்று மற்ற வாகனங்களையும் (கார், ஜீப், இரு சக்கரவாகனம்) இதுபோன்று ஆண்டு தோறும் சோதனைகள் இல்லை ( முதல் 15 ஆண்டுகளுக்கு). இப்படி இருக்கையில் முதல் வாகனங்கள் 15 ஆண்டுகளில் வாகன உரிமையாளர் வாகனத்தைச் சரியாக வைத்துள்ளார் என்ற ஓர் அனுமானம் கொள்கிறது அரசு. நம் அனைவருக்கும் தெரியும் இவ் வனுமானத்தில் எவ்வவளவு பெரிய ஓட்டை உள்ளது என்பது. மாநில அரசுகள் தங்களுக்கு சொந்தமான வாகனங்களையே சரிவர ஒருசில வேளைகளில் பராமரிப்பு செய்யாமல் இருப்பதனாலும் அவ்வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை சரிவர பின்பற்றாமல் இருப்பதனால் மாநில அரசுகள் சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போகிறது. இதனாலேயே சட்டம் சரிவர நிலைநாட்டப்பட முடிவதில்லை.

வருடந்தோறும் கார்,ஜீப்போன்ற வாகனங்கள் எளிய சோதனைக்கு உட்படுத்தினால் பல பிரச்சனைகள் குறையும். தற்போது ஒரு மாநிலத்தில் ஒரு வாகனத்தை வாங்கினால், அந்தமாநிலத்திற்கு வரி (ROAD TAX) செலுத்துகிறோம். இந்த சாலை வரி 15 ஆண்டு காலத்திற்கும் தகும். இதற்குப் பெயர்தான் LIFE TAX (ஆயுட் சாலைவரி). நாம் வேறு மாநிலத்திற்குக் குடியேறினால் அங்கு மீதியுள்ள சாலை வரியைச் செலுத்திப், புதிய வதிவு பெற வேண்டியுள்ளது. இதனால் வாகன உரிமையாளருக்கு இரட்டிப்புக் கட்டணம் தான். இனி வரும் சட்டத்தில் நாட்டில் உள்ள எந்தவொரு அலுவலகத்திற்குச் சென்றாலும் தங்களது ஓட்டுநர் உரிமத்தையும் முகவரி ஆதாரத்தையும் காட்டி புதிய முகவரியைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பழைய மாநிலத்தில் உள்ள சாலை வரி பாக்கியைப் புதிய மாநிலத்திற்கு மாற்றம் செய்யலாம்.

ஆகையினால் இனி வரும் காலத்தில் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமங்களை மத்திய மயமாக்கப்பட்டுப் பதிவேடுகள் (RECORDS) எளிமையாகக் கையாளப்பட உள்ளன. கனரக வாகனத்திற்கு உண்டான சரக்கு ஏற்றும் அனுமதிகள் கணினிமயமாக்கப்பட்டு ஓட்டுநர் உரிமங்களை POINT SYSTEM த்தில் நிர்வகிக்க (வெளிநாடுகளில் உள்ளது போல்) இச்சட்டம் முனைகிறது.ஓட்டுநர்கள் சாலையில் விதி மீறல் செய்யும் பொழுது அதற்கு அபராதம் மற்றும் POINTS குறைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றத்தின் தன்மையை வைத்து, மீண்டும் மீண்டும் தவறுகளைச் (அதே தவறோ அல்லது குறுகிய காலத்தில் வெவ்வேறு தவறுகள்) செய்தால் சிறைத் தண்டனையும் கூடக் கிடைக்கலாம்).

உதாரணமாக எந்த விதி மீறலும் செய்யாதவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இனி வரும் காலத்தில் தங்களது நன்னடத்தையை வைத்து செலுத்த வேண்டிய தொகையில் ஓர் சலுகையும் அளிக்கவுள்ளனர். இதனால் சாலை விதிகளை பின்பற்றும்போது நமக்கு சேமிப்புதான். மேலும் இதனால் விபத்துகள் குறைந்து வாகனம் சீராகவும் அதிக நாட்கள் நமக்கு பயன் தரும் என்பது அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் விண்ணப்பம் செய்வது எளிதாக இருக்க வேண்டும்; ஓட்டுநர் உரிமம் கிடைப்பது கடினமாக்கப்பட வேண்டும், என்பது இச்சட்டத்தின் நோக்கம் ஓட்டுநர் பயிற்சி மையங்களான (Driving School) கள் இனிவரும் காலங்களில் கடுமையான சட்டங்களுக்கு உட்படுத்தப்படும். நிறைய வாகன உற்பத்தியாளர்களே ஓட்டுநர் பயிற்சி மையங்களை (மாருதி உத்யோக்) உருவாக்கியுள்ளனர். மாருதி உத்தியோக்கின் ஓட்டுநர் பயிற்சி மையத்தை தலைமை தாங்கி உருவாக்கி மற்றும் நடத்தி வந்த திரு.P.அசோக்குமார் அவர்கள் கூறுகையில் ”ஓட்டுநர் ஒழுக்கம் என்பது நம் வாழ்வில் ஒரு மிக முக்கிய அம்சம். அதை பள்ளிகலிருந்தே வளர்க்க வேண்டும். அதற்கு பெரிய நிறுவனங்கள் கூட தங்களது CSR activitiesகளில் கொண்டு வந்தால் ஓட்டுநர்களும் , நிறுவனங்களும் பயனடையலாம்”. இதனால் நவீன தொழில்நுட்பங்களை ஓட்டுநர் பயிற்சிகளில் அறிமுகம் செய்து நல்ல தேர்ச்சி பெற வைக்கவும் செய்யலாம். கோவையில் மாருதி கார் நிறுவனம் சிறப்பாக இயக்கி வருவது இதற்குச் சான்று. ஒரு வாகன தயாரிப்பாளர் உற்பத்தி செய்த ஒரு வாகனத்தை (Model) பற்றி நூறுக்கு மேற்பட்டோர் புகார் செய்தால் அவர்கள் அந்த வாகனத்தை உடனே சந்தையில் உள்ள அனைத்து வாகனத்திலும் பிரச்சனைக்குரிய அந்த பாகத்தை மாற்றி தந்தாக வேண்டும். இல்லையயனில் அபராதத்திற்கு ஆளாவார் என்பதும் இப்புதிய திட்டத்தில் உள்ளது.

விபத்தைக் குறைக்க அரசு செய்ய வேண்டியவை

நடமாடும் நீதி மன்றங்களை அதிகப்படுத்துதல்
கண்காணிப்புக் கேமராக்கள் அதிகப்படுத்தி (கண்காணிப்பு அறையை சீரான முறையில் கண்காணித்தல்)
புதிய சாலைகள் (பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் போதிய பார்க்கிங் வசதி ஏற்பாடுகள்) அமைத்தல்.
ஒவ்வொரு வாகனத்திற்கும் ஓர் சிம் கார்டு பதிவு அட்டை அளித்தல்.
TAXI, BUS கள் போன்றவற்றிற்குத் தனிச் சாலை அமைத்தல்.
நிறுவனங்கள் சாலைப் பாதுகாப்புப் பயிற்சிகளை நடத்த ஊக்கம் அளித்தல்.
வாகனங்களை எளிய சோதனைகளைச் செய்ய அங்கீகரிக்கப்பட்ட தரமான பணிமனைகளுக்கு அனுமதி அளித்தல்.
கனரக வாகனங்களை (PEAK HOURS) வேளைகளில் நகரப் பகுதிகளில் நெரிசலான நேரத்தில் வரவிடாமல் இருத்தல். குப்பை அகற்றும் வாகனங்கள் இரவு நேரங்களில் சுத்தக்காப்புப் பணியை மேற்கொள்ளுதல்.
பள்ளி நேரங்களில் பள்ளி அருகில் வேகத்தை குறைத்தல்.
ஓட்டுநர் உரிமத்திற்கும், வாகன உரிமத்திற்கும் கைரேகைப் பதிவு செய்தல்.
பள்ளிகளில் சாலை பாதுகாப்பு பாடங்கள் மற்றும் பயிற்சிகள் நடத்தி அதன் மூலம் சாலையில் பெற்றோருடன் செல்லும் போது தவறுகளை சுட்டிக்காட்டி சரியான வழிமுறையை அவர்களுக்கு நினைவுட்டுதல்.

இந்தச் சட்டத்தில் என்ன புதுசு

ஒழுங்கில்லாத முறையில் ஓட்டுதலுக்கு Š ரூ.50,000/-
குடிபோதையில் ஓட்டுதல் Š ரூ .10,000/-
வேகமாக ஓட்டுதல்Š ரூ.1,000 Š ரூ.6,000/-
மத்திய அரசு புதிய விதிகளையும், அபராதங்களையும், தண்டனைகளையும் நிர்ணயிக்கும் அதிகாரம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

“தேசியச் சாலைப் பாதுகாப்பு ஆணையம்’ ஒன்றை அமைத்து மாநிலங்களுக்கு இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதைப் பற்றி, வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் அளித்தல். (இதற்கு டீசல், பெட்ரோல் விலையில் உள்ள சேலில் 1% இந்த ஆணையம் அமைப்பதற்கும் நிர்வாகம் செய்யவும் அளிக்கும்).

இந்தப் புதிய சட்டத்தில் உள்ள தண்டனைகளை எளிதாக்க பல மோட்டார் வாகன ஊழியர் சங்கத்தார் எதிர்த்து வருகின்றனர். அவர்களின் வாதம் என்வென்றால், சாலைகள் மிகக் குறுகியதாக உள்ளதாலும் பாத சாரிகள் சாலையில் ஒழுங்கில்லாமல் நடந்து கொள்வதாலும் வருகின்றது என்கின்றனர். மேலும் மற்ற வாகனங்கள் ஆகிய இரு சக்கர வாகனங்கள் சாலைகளில் பெருகியுள்ள காரணத்தினால் சாலை ஒழுங்கே இல்லை, ஆடு, மாடுகள் சாலைகளில் இருப்பது பல இடையூறுகளைத் தருகின்றது என்றும் கூறுகின்றார். இவையயல்லாம் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தாலும் பலர் பஸ், லாரி, ஆட்டோ போன்ற வாகனங்கள் ஓட்டுபவர்கள் சாலை விதைகளைச் சரியாகக் கடைபிடிக்காமல் இருப்பதினாலேயே அதிகமான விபத்துகள் நடக்கின்றன என்றும் ஓர் பார்வை உண்டு. பஸ்கள், லாரிகள் குறித்த நேரத்தில் ஓர் இடத்தை அடைய வேண்டும் என்ற ஒரு முடியாத கால அவசாகத்தை நிர்ணயம் செய்து, அதைச் சரிதான் என்று அவ்வப்போது சரிபார்ப்பது இல்லாததனால், அந்தப் பழைய கால அவகாசத்தையே கருத்தில் கொண்டு செயல்படும்போது விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க முடிவதில்லை. இதற்கு மக்கள் தொகை பெருக்கமும், அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் வளரவில்லை என்பதுதான் உண்மை. பஸ் மற்றும் சரக்கு ரக வாகன ஓட்டுநர்கள் இந்த புதிய சட்டத்தில் உள்ள அபராதங்கள் மிகவும் அதிகம், அதை செலுத்த வசதி இல்லை என்றும் இந்த அபராதத் தொகைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பல மாநிலங்களில் சமீபத்தில் போராட்டங்கள் நடத்தி உள்ளனர். இதற்கான தீர்வை விரைவில் மத்திய அரசு கண்டால் நன்மை. இது போன்று கனரக வாகனங்கள் அனுமதித்த எடைக்கு மேல் பாரம் தூக்கிப் பயணம் செய்யும் போது சாலைகள் பழுதாவதும், வாகனங்கள் சமநிலையை இழப்பதும் தவிர்க்க முடியாதது. இப்படி இருக்கையில் தற்போது உள்ள சட்டத்தையே சரிவர மதிக்காமல் உள்ள போது, புதிய சட்டத்தை எவ்வாறு மதிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதற்குத் தான் தேசிய சாலைப் பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முதற் கட்டமாக மத்திய அரசு இரயில் தண்டவாளங்களை (LEVEL CROSSING) கடக்க அதன் மேல் மேம்பாலம் அமைக்க கடந்த காலங்களில் இரயில்வே துறை அனுமதி அளிக்க அளவு கடந்த தாமதத்தை ஏற்படுத்தி இருந்த நிலையை மாற்றி விரைவில் அதற்குண்டான அனுமதியை அளிக்க முன்வந்துள்ளது.

சாலையில் விதிமீறல்களுக்கு அபராதம் அளிக்கும் போது அதை அந்த நாளின் வருமானத்தையும் கருத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும் என்பது ஒரு சிலரின் கருத்து. ரூ.50,000/- அபராதம் வைத்தால் அந்த அபராதத்தை செலுத்த வருமானம் அல்லது காப்பீடு இல்லாதவர்கள் இந்தத் தொகையைச் செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவிடுவார்கள். ஆகையினால் அபராதத்தொகையைக் குறைத்தால் நல்லது என்றும், சாலைவிதியை மதித்து நடக்க நிறைய பயிற்சிகள் அளித்தால் மட்டுமே இந்த சீரான சாலைப் பயணம் என்ற இலக்கை எட்ட முடியும் என்றும் கூறுகின்றனர் .

சாலையில் விபத்து நிகழ்ந்தால் ‘108’ யைப் போல ஒரு எண்ணைக் கட்டணமின்றி அறிமுகப்படுத்தவும் இந்தச் சட்டத்தில் திட்டமுள்ளது. சாலைகள் அமைக்கும் முன் அதை ஆராய புதிய வழிகாட்டுதல்கள் அமைக்கப்பட உள்ளன. ஏனென்றால் சாலை அமைப்பு விதிமுறைகள் பல வருடங்களுக்கு முன் வடிவமைக்கப்பட்டது. நிச்சயமாக அதில் உள்ள தகவல்கள் இன்றைய சாலைகளுக்கும், வாகனங்களுக்கும் பெருமளவு பொருந்தாது. கூடுதலாக, எல்லா வாகனங்களும் கண்டிப்பாக ‘ஏர் பாக்ஸ்’ (AIR BAGS) என்ற பாதுகாப்பு அமைப்பாகக் குறைந்த பட்சமாக அளிக்க வேண்டும் என்று ஓர் விதிமுறையைக் கொண்டு வருவது நன்று என்று ஓர் மோட்டார் துறை வல்லுநர் யோசனை வழங்கியுள்ளார். சர்வதேச அளவில் அந்த தரத்திற்கு சாலைகள் அமைப்பது பெரிதல்ல அதை சரிவர பராமரித்தும், அதை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே நமக்கு முன்னேற்றம் என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும். சாலை விபத்தினால் சாலையில் காத்து கிடக்கும் மக்களின் நேரம், உழைப்பு மற்றும் உற்பத்தி திறன் வீணாவது இனிமேலும் இந்தியா தாங்காது.

“”SAFE FOUNDATION” என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள 12 நகரங்களில் நடத்திய ஓர் ஆய்வில் 81 % மக்கள் இந்த புதிய சாலைப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவும் 91 % இந்தக் கூடுதலான தண்டனைகளும், அபராதமும் உடனடியாக விபத்துகைளக் குறைக்கும் என்று கருத்து தெரிய வந்துள்ளது .

சட்டங்கள் பல வந்தாலும் அதை அமல்படுத்துவதில் தான் அச்சட்டத்தின் வலிமையே உள்ளது. நமது தலைநகரில் உள்ள ஓர் முக்கிய பகுதியில் மாதம் ஒன்றுக்கு ஒரு கோடியே நாற்பது லட்சம் விதிமீறல்கள் நடக்கின்றன. ஆனால் அதில் சுமார் 5000 க்கு மட்டுமே சார்ஜ் சீட் அளிக்கப்படுகிறது. மேலும் போக்குவரத்துத் துறையை நடத்தும் அதிகாரிகளை நியமித்தல், கண்காணிப்பு போன்றவற்றில் நடக்கும் தவறுகளும் சாலைப் பாதுகாப்புக்கு மேலும் கெடுதல் வருகிறது. முக்கியமாக ஒட்டுநர் உரிமம், வாகனப்பதிவு ஆகியவற்றைத் தேசியமயமாக ஓர் டேட்டாபேசில் கொண்டு செயல்பட்டால் விபத்துகளும் குறையும், நாம் முடிந்தவரை நெரிசல் இல்லாமல், நாம் செல்ல வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாக சென்றடையலாம். குடும்பங்களும் தங்களது முக்கிய உயிர்ச் செல்வங்களைச் சாலைகளில் இழக்கமாட்டார்கள். ஆகவே, கடினமான தண்டனைகளும், அபராதமும் வேண்டும், அதே சமயம் சாலை விரிவாக்கம், கூடுதல் உயர்கட்டமைப்பு மற்றும் சாலை ஓட்டுநர் பயிற்சிகள், அறிவிப்பில்லாத வாகன மற்றும் ஓட்டுநர் உரிமம் சோதனைகள் ஆகியவைகளே நல்ல பலனை தரும். ஓட்டுநர் பயிற்சி மையங்கள் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அதற்கு இந்த ஓட்டுநர் பயிற்சி மையங்களை கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி அவை உண்மையிலே பாதுகாப்பான ஓட்டுநரை உருவாக்குகின்றனவா என்று மக்களும் அரசும் அறிய வேண்டும். நாடு வளர வேண்டும் என்றால் காலத்திற்கேற்ற சட்டங்கள் வேண்டும், முக்கியமாக அவை முழுமையாக நடைமுறை படுத்தவேண்டும். எனவே இப்புதிய சட்டம் சாலை பாதுகாப்பை கருதி நம்நாட்டின் வளர்ச்சியையும் மனத்தில் கொண்டு உடனே கொண்டு வர வேண்டும். பாதிப்படையும் ஒரு சிலருக்கு ஞாயமான ஒரு தீர்வை கண்டு விரைவில் அமல் படுத்துவது நல்லது. இந்த முயற்சிக்கு ஓட்டுநர் கல்வி மற்றும் பயிற்சி மிக அவசியம். இந்த ஓட்டுநர் பயிற்சி முயற்சிக்கு அரசு மானியம் அளித்தாலும் தகும்.