தமிழகத்தில் அம்மா அழைப்பு மையம் துவக்கம்……

4x5pkcj8தமிழகம் தொழில் வளர்ச்சியில் மூன்றாம் இடத்தில் தற்சமயம் உள்ளது. தமிழகத்தை முதல் இடத்திற்கு கொண்டு வர பல முயற்சிகள் எடுத்துள்ள அரசின் மிக முக்கியமான ஒன்று கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு. இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முயற்சியால் தமிழகத்திற்கு ரூ.2,42,160 கோடிக்கான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையயழுத்தாயின. தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் உற்பத்தித் திறன் ஆகியவை வரும் ஆண்டுகளில் கூடுதல் முதலீட்டையும் ஈர்க்கச் செய்யும் என்று தெரிகிறது.

அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா மினரல் வாட்டர், அம்மா உப்பு, அம்மா உணவகம்… போன்ற மக்கள் நல திட்டங்களை அறிவித்து அதன் வாயிலாக ஏழை எளிய மக்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வண்ணம் செயல் பட்டு வருவதை நாம் அறிவோம். மேலும், பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா பேபி கிட் என்ற திட்டத்தை மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தமிழகத்தின் அனைத்து பேருந்து நிலையங்களிலும் குழந்தைகளுக்கு பாலூட்ட தனியறை அமைத்துத் தந்தது தாய்மார்கள் அனைவருக்கும் பேரூதவியாக உள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாலையோர குறுந் தொழில் செய்வோருக்கு தலா ரூ.5,000/- கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கியது தமிழக அரசு. இந்தக் கடனுக்கான 11% வட்டியை மாநில அரசே செலுத்தும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்.  இந்த கடன் திட்டம் தமிழத்தில் உள்ள அனைத்து சாலையோர குறுந் தொழில் செய்பவருக்கும் அளிக்கப்பட்டது.

சுமார் 7 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலமான தமிழகத்தை சிறப்பாக வழி நடத்திச் செல்ல இன்னும் ஓர் மக்கள் நல திட்டமான அம்மா அழைப்பு மையத்தை 19.01.2016 அன்று அறிமுகம்  செய்துள்ளார் நமது தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள். இந்த மக்கள் சேவை மையம் 24 மணி நேரமும், வாரம் 7 நாட்களும் செயல்படும். குறை மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்ய எண் 1100யை கட்டணமில்லாமல் அழைத்து தங்களது குறையோ கோரிக்கையோ பதிவு செய்யலாம். பதிவு செய்த குறையோ அல்லது கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி அதன் படி எடுத்துள்ள நடவடிக்கைகளை பதிவு செய்தவரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பபடும். ஏற்கனவே முதல்வரின் அலுவலகத்தில் பலப் புகார்கள், குறைகள் மற்றும் விண்ணப்பங்கள் வருபவைகளை கவனிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்தில் மக்கள் குறைகளை தீர்க்க கூடுதலான தீவிரம் காட்டவே இந்த மக்கள் அழைப்பு மையம் துவங்கப்பட்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் தங்களது குறைகளை நேரடியாக பதிவு செய்யும் போது அவை கணிணியில் பதிவு செய்யப்படுகின்றன. ஆகவே, முதல்வரின் நேரடி கவனத்திற்கு வருவதாக மக்கள் கருதுவதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் தகுந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து அப்புகாருக்குத் தீர்வு காணவேண்டியதின் அவசியம் ஏற்படுகிறது. ஆகையினால் தற்சமயம் நாள் ஒன்றுக்கு 15,000 அழைப்புகளை கையாள 138 பணியாளர்களைக் கொண்டு துவங்கியுள்ளது அம்மா அழைப்பு மையம். இனி வரும் சில மாதங்களில் மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பணியாளர்களும், மற்ற இயந்திரங்கள், புதிய மையங்கள் துவங்குவதைப் பற்றி அரசு பரிசீலனை செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.