தலையங்கம்……….

Untitled-1கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.    – திருக்குறள்.

    நான் சிறியவனாக இருந்தபோது துறவி ஒருவர் மாணவர்களாகிய எங்களிடம் ( 6, 7 படிக்கும் போது )   “” என்ன படிக்கிறீர்கள்?” என்று கேட்டார். நாம் இன்ன வகுப்பு என்று சொல்ல, “விவேக சிந்தாமணி’ படித்துள்ளீர்களா? என்று கேட்டு அதில் ஒன்றிரண்டு பாடல்களைச் சொல்லி “”இது கற்காத படிப்பு என்ன படிப்பு?” என்று கூறினார்.

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் கற்பது தமிழ் அதுவும் நீதி நூல். ஆகவே, அறத்தையும் தெய்வத்தையும் அறிந்து கொள்ளாத கல்வி என்ன கல்வி? இதைத்தான் கல்வி என்று கருதினார்கள். இன்று  அக்கல்விகளை நாம் கற்காத காரணத்தினால்  ஒழுக்கம் என்பது அறியாது, கலகக்காரர்களாக, திருடர்களாக, குடிகார்களாக மாறி உள்ளோம். இன்று கற்காமல் இருக்கிறோமா? கற்கிறோம். தொழில்கல்வி மட்டும் கற்கிறோம் அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறோம்; நம் விருப்பப்படி செலவலித்து வாழ்கிறோம். அன்று அவரவர் தந்தையின் தொழிலைச் செய்தல் மூலம் கற்றுக்கொண்டு, பள்ளியில் அறவழிக்கல்வியை கற்றோம். இன்று அவ்வாறு இல்லாததால் ஒருபவுன் நகைக்காகக் கொல்வது, காதலிக்காவிட்டால் கொல்வது போன்ற இழி செயல்கள் ஏற்படுகின்றன.

ஆதலால்தான் வள்ளுவர் கற்க வேண்டும், கசடறக் கற்க வேண்டும், கற்க வேண்டியவைகளைக் கற்க வேண்டும். அதன்படி நிற்க ( நடக்க ) வேண்டும் என்று கூறினார். அவரே கற்பதின் பயனென்ன? என்று கூறும் போது “”கற்றதனால் ஆய பயனென் கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்று கற்பதன் பயனை இறைவனை அறிவதே என்றார்.

இறைவனை அறிவதை விட வாழ்வாங்கு வாழவேண்டும், இவ்வுலகம் புகழும் படி வாழவேண்டும் என்று தம் குறள் முழுவதும் கூறிச் செல்கிறார். அப்படி வாழ்பவன் “”வானுறையும் தெய்வமாகலாம்” என்று கல்வியின் முடிபு கூறுகின்றார்.

இன்று பள்ளிக் கல்வியிலும் சரி;  கல்லூரிக் கல்வியிலும் சரி நாம் அனைவரும் தொழில் கல்வியைத்தான் கற்கிறோம்; கற்பிக்கிறோம். கல்வித் துறையும், அரசும் ஒழுக்கக் கல்வியை, வாழ்க்கைக் கல்வியை நீக்கி விடுகின்றனர். அதனால் இன்று மாணவர்களுக்கு அக்கல்வியை கற்றுத்தருவது பெற்றோர் கடமையாகிறது. நமது மக்கட்கு இன்றைய நாகரிக வாழ்க்கை தேவையில்லை. “”இவன் தந்தை என்நோற்றான் கொல்” என்று வாழ்வாங்கு வாழ்க்கையை கற்றுத்தந்தால் விவாகரத்து வராது; முதியோர் இல்லமும் இருக்காது.

ஆகவே, எக்கல்வியைக் கற்றாலும், யாது தொழில் செய்தாலும் வருங்கால மக்கள் வாழ்வு சிறக்க, ஒழுக்கம் தரும் கல்வியை உடன் புகட்ட வேண்டும். இதற்கு இன்று அடிப்படையாக அமைந்த கல்வி “யோகாக் கல்வி’ யாகும். அதனை, பள்ளி முதல் கல்லூரி வரை கடைப்பிடித்து வல்லவர்களாக மட்டுமல்ல; நல்லவர்களாகவும் வாழ்வோமாக!

    “”எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவே எண்ணல் வேண்டும் – பாரதியார்

இவ்விதழில் நெல்றை மரம் பற்றி விரிவாக உரைக்கப்பட்டுள்ளது. மூங்கில் காடுகளும் கூட. அத்துடன் வருவாய் தரும் தொழில்களான பால்பண்ணை, தேனீ வளர்த்தல் ஆகிய தொழில்கள் விவரிக்கப்பட்டுள்ளன. “மீன் அமிலம்’ தயாரிப்பு, இவற்றுடன் மரவள்ளி, சின்ன வெங்காயம் விளக்கப்பட்டுள்ளன. “உழவன் ஒரு கணக்கு’ படித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இவற்றை அறிவோம்; வாழ்வில் பயன்படுத்துவோம்!