தீக்குச்சி தொழிற்சாலை தொடர்ச் சங்கிலி திட்டம்

forest colleageதமிழ்நாடு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக மேட்டுப்பாளையத்தில் தீக்குச்சி மர ஒப்பந்த பண்ணையம் துவக்க விழா மற்றும் தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள் பற்றிய இலவசப் பயிற்சி முகாம் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் வனக்கல்லூரிKT-Parthibansir மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மற்றும் வாசன் நிறுவனம், குடியாத்தம், இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுதல், தீக்குச்சி மர ஒப்பந்த சாகுபடியை அறிமுகம் செய்தல், மற்றும் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர்  திரு.கு.இராமசாமி அவர்கள், மரப்பயன்பாட்டுத் துறை தலைவர் முனைவர் திரு.ஐ.சேகர் அவர்கள், வனவியல் முதன்மையர் முனைவர் திரு.பெ.துரைராசு அவர்கள், இந்த பயிற்சி முகாமில் கலந்துக் கொண்டனர். மேலும் 300க்கு மேற்பட்ட விவசாயிகளும், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொண்டனர். இதனைப் பற்றிய செய்தித் தொகுப்பு.

தமிழகத்தில் ஒப்பந்த முறைத் தீக்குச்சி மரச்சாகுபடி அறிமுகம் காகிதத் தொழிற்சாலை, தீக்குச்சித் தொழிற்சாலை மற்றும் உயிரி எரிசக்தி நிறுவனங்களின் மரம் சார்ந்த இடுபொருள் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இத்தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரம்சார்ந்த இடுபொருள்களைக் கருத்தில் கொண்டு, மேட்டுப்பாளையத்திலுள்ள,வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் “தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகளுக்கான உற்பத்தி மற்றும் விற்பனைத் தொடர்ச் சங்கிலி” எனும் புதுமையான திட்டத்தினைச் செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தீக்குச்சிக்கான மரங்களை விவசாய நிலங்களில் ஒப்பந்த முறையில் சாகுபடி செய்வதற்கான திட்டத்தினை, 2013 ஜனவரி 7 ஆம் நாள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.கு.இராமசாமி அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது அவர், “தற்போது தமிழகத்தில் தீக்குச்சி மர உற்பத்தி 100 லிருந்து 250 டன்னாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் மொத்த தேவையையும் பூர்த்தி செய்ய ஆண்டு தோறும் 6000 ஹெக்டேரில் தகுதியான மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும் அவர், “ஒப்பந்த அடிப்படையில் மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் தமிழக விவசாயிகளும் பயன்பெறுவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் வனக்கல்லூரி முதல்வர் முனைவர்.பெ.துரைராசு அவர்கள்,”ஒப்பந்த அடிப்படையில் காகிதத் தொழிற்சாலைகளுக்கான மரங்களை வளர்த்தல் மூலமாக ஏற்கெனவே 70,000 ஏக்கரில் மரங்களைப் பயிரிட்டு, சுமார் 25,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று கூறினார். மேலும் இத்திட்டத்தின் மூலம் 2 இலட்சம் டன் காகித இடுபொருள் மரங்களை விவசாயிகள் உற்பத்தி செய்ததாகவும், அனைத்து விவசாயிகளுக்கும் வெட்டிய 15 ஆவது நாளில் உரிய விலை வங்கியின் மூலம் கொடுக்கப்பட்டுவிட்டது” என்றும் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்த முறைச்சாகுபடி தற்போது தீக்குச்சி மரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டள்ளதால் வேளாண் மற்றும் பண்ணைக் காடுகள் மூலம் விவசாயிகள் தீக்குச்சி மரங்களை நட்டு பயன்பெறலாம் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், “தென்னிந்திய தீக்குச்சி உற்பத்தியாளர்கள் சம்மேளத்தின் செயலாளர் திரு.தேசதாஸ் அவர்கள் பேசும் பொழுது,” மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியின் புதுமையான முயற்சிகள் மூலமாகத் தீக்குச்சி தொழிற்சாலைகள் நல்ல முறையில் பயனடைந்து உற்பத்தியையும், இலாபத்தையும் பெருக்க இயலும்” என்று பாராட்டுத் தெரிவித்தார். பின்னர் பேசிய குடியாத்தத்தில் உள்ள வாசன் தீக்குச்சி தொழிற்சாலை உரிமையாளர் திரு.வி.வி. வெங்கடேஷ்,”ஒப்பந்த விவசாயிகள் அனைவருக்கும் டன் ஒன்றிற்கு ரூபாய் 6,000 விலை கொடுக்கப்படும்” என்றார். மேலும், சந்தை விலைகேற்ப மரங்களுக்கு விலை நிர்ணையம் செய்யப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படும் என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவின் துவக்கத்தில் வனக்கல்லூரிப் பேராசிரியரும் இத்திட்டத்தின் தலைவருமான முனைவர்.கா.த.பார்த்திபன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியில், பேராசிரியர் முனைவர்.ஐ.சேகர் அவர்கள் நன்றியுரை தெரிவித்தார். இவ்விழாவினைத் தொடர்ந்து 300க்கு மேற்பட்ட விவசாயிகள், வனத்துறை அலுவலர்கள், மரம் வளர்ப்போர் சங்கம், வேளாண் அறிவியல் நிலையங்கள்,வனத்துறை விரிவாக்க அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மரம் சார்ந்த தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் மற்றும் நாற்றங்கால் உற்பத்தியாளர்களுக்கான “தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள்” என்ற தலைப்பில் வனக்கல்லூரியின் விஞ்ஞானிகளின் மூலம் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

தீக்குச்சி மரத்தைப் பற்றிய விளக்கம்

காடுகளில் அதிகம் காணப்படும் மரமாகையால், மற்ற வகை மரங்களைப்போல் அறிமுகம் இதற்குத் தேவை இல்லை.  இதன் தாவரவியல் பெயர் “அய்லாந்தஸ் எக்செல்சா (ailanthussee) என்றும் “ஹெலாகாதர் என்ற பொதுப்பெயரும் தமிழில்”பீதணக்கன்” என்றும் ஹிந்தியில் (gugaldhup) என்றும் மலையாளத்தில் (mattipal) என்றும் தெலுங்கில் (peepeddamanu) என்றும் மராத்தியில் (gugaldhup) என்றும் அழைக்கப்படுகின்றது.

முதன்முதலில் ஆஸ்திரேலியாவில் வளர்ந்து தற்போது எல்லாப்பகுதிகளிலும் இம்மரம் காணப்படுகிறது. இது மிருதுவான மர வகையைச் சார்ந்தது. மிருதுத்தன்மை கொண்டதால் இதனை அறுப்பது, சீர் செய்வது மிகவும் எளிது. பக்கக்கிளைகள் குறைவாகவும் உயரமாகவும் வளரக்கூடியது. இதன் வயது 20 முதல் 75 ஆண்டுகள். மழை குறைவான பகுதிகளிலும் வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளிலும், நீர் குறைவான பகுதிகளிலும் வளமற்ற மண்ணிலும் வளரக்கூடியது. அதிகமாகப் பராமரிப்புத் தேவையில்லை. தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த மரத்தின் தேவை மற்றும் வியாபார வருவாயை விவசாயிகளுக்குச் சொல்லி வளர்க்கவில்லை. மற்ற மாநிலங்களில், இந்த மரம் பயிரிட்டால் வரும் வியாபார வருவாயையும், பணமதிப்பையும் சொல்லி வளர்க்கப்படுகிறது.

மரம் வளரும் சூழ்நிலை

எந்த வறட்சியிலும் வளரும் தன்மையுடையது. அதிக வெப்பம், மித வெப்பம் ஆகியவைகளைத் தாங்கக்கூடியது. நீர் வளம் குறைந்த பகுதிகளிலும் மிகக்குறைந்த மழைபெய்யும் பகுதிகளிலும் நன்கு வளரக் கூடியது. வளம் அற்ற மண்ணிலும் வளரும் தன்மையுடையது.

தீக்குச்சி மரத்தின் சிறப்புகள்

1. வளர்க்கப்படும்போது அதிகமான பராமரிப்புத் தேவையில்லை.

2. இதன் இலைகளை ஆடு, மாடுகள் தீண்டாது.

3.இலைகள் கடும் வெப்பத்திலும் பசுமையாக இருக்கும்.

4. பயிர்செய்வதற்கு இயலாத நிலங்களிலும் இவை செழித்து வளரும்.

5. குறைந்த அளவு நீரே போதுமானது.

சாகுபடி முறை

1.    நிலத்தை நன்கு உழுது களைகளை நீக்கிவிடவேண்டும்.

2.    ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் 12 அடி இடைவெளி விட்டு 2X2X2 குழிகள் போடவேண்டும். ஒவ்வொரு வரிசைக்கும் மற்றொரு வரிசைக்கும் இடைவெளி அவரவர் வசதிப்படி 12 அடிக்குமேல் செய்து கொள்ளலாம்.

3. தோண்டிய குழியில் செம்மண், மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவை கொண்ட கலவையால் நிரப்பவேண்டும். வசதி உள்ளோர் விவசாய உரங்களைச் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

4.    ஆனால் வனக்கல்லூரி ஆனது  ஜெசிபி யைப் பயன்படுத்தி 1X1 X1 மீட்டர் ஆழத்திற்கு குழிதோண்டி நட்டால் நன்றாக வளரும் என்று சொல்கிறார்கள். மேலும் தோண்டிய குழியில் FYM 10கிலோ, வெர்மி கம்போஸ்ட் 2.5கிலோ, DAP 50 கிராம், MOP 25கிராம், பாஸ்போபேக்டீரியா 50 கிராம் மற்றும் VAM 50கிராம் போன்றவற்றை குழியில் இட்டு வளர்த்தால் செடி நன்றாக வளரும் என்று மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கின்றது.

வேலை வாய்ப்பைப் பெருக்கிட

விவசாயத்தில் அதிக முதலீடு செய்து மழையின்மை, நோய்தாக்கம், சூழ்நிலைத் தாக்கம் ஆகியவற்றால் எதிர்பார்த்த அளவிற்குப் பயிர்களில் விளைச்சல் கிடைக்காமல் நஷ்டம் அடையும் விவசாயிகளுக்குக் குறைந்த செலவில் அதிக பராமரிப்புச்செலவு இல்லாமல் காலப்போக்கில் அதிக வருமானம் தரக்கூடியதாகத் தீக்குச்சி மரம் வளர்ப்பு அமைகிறது.

தீப்பெட்டித் தயாரிப்புத் தொழில் பல ஆயிரம் பேருக்கு வேலை தருகிறது. இத்தொழிலில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் தான் அதிக அளவு வேலை செய்கிறார்கள். தீப்பெட்டித் தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதற்குத் தீக்குச்சி மரங்கள் இன்றியமையாதவை ஆகும். பலருடைய குடும்ப வருவாய்க்குத் தீக்குச்சி மரங்கள் துணையாக உள்ளன.

குறைந்த செலவில் அதிக லாபம் தருவதோடு தீப்பெட்டித் தொழிற்சாலையின் தேவையைப் பூர்த்தி செய்கின்றது. இதன் மூலம் நம் நாட்டின் இன்றைய கடும் பிரச்சனையாக விளங்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவு போக்கவும் தீக்குச்சி மரம் வளர்ப்பு, துணை புரிகின்றது.

வேளாண்மைத் துறையினரால் ஊக்கவிக்கப்படுகின்ற (Integrated Farming Method) ஒருங்கிணைப்புப் பயிரிடும் முறையில் தீக்குச்சி மரம் வளர்ப்பு முறையையும் ஒன்றாக இணைத்து விவசாயிகள் நன்மை பெறலாம்.

About Dr K T பார்த்திபன் TNAU - Forest College

View all posts by Dr K T பார்த்திபன் TNAU - Forest College →