தொலைத்தது அஞ்சல் துறை ; கிடைத்தது ரூ.11 ஆயிரம்

postவிசா பெறுவதற்காக, லண்டனுக்கு அனுப்பிய கடவுச்சீட்டை (Passport) தொலைத்த அஞ்சல் துறை, பாதிக்கப்பட்ட நபருக்கு 11 ஆயிரம் ரூபாய், இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

போத்தனூர் கோவைச் சாலையைச் சேர்ந்தவர் மாவ்ஜி (54 வயது) 2008ல், லண்டனில் வசிக்கும் சகோதரி மகள் திருமணம் நிச்சயத்தில் பங்கேற்பதற்காக, செல்ல முடிவு செய்தவர், அதற்காக விசா பெற முயற்சித்தார். இதற்கான ஆதாரத்தைத் தரும்படி அதிகாரிகள் கேட்டதால், லண்டனில் இருந்து தனது கடவுச் சீட்டை சகோதரிக்கு அனுப்பி வைத்தார்.  இருவரது கடவுச்சீட்டையும் அதிகாரிகளிடம் காட்டியபோது, சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது.

தகவல் அறிந்த சகோதரி இரண்டு கடவுச்சீட்டுக்களையும் லண்டனுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்.  2008, ஜுன் 12ம் தேதி, 781 ரூபாய் கட்டணம் செலுத்தி, கோவை அஞ்சல் அலுவலகம் மூலமாக இரண்டு கடவுச்சீட்டுகளையும் லண்டனுக்கு அனுப்பினார்.

ஆனால், குறிப்பிட்ட நாட்களாகியும் கடவுச்சீட்டுகள் போய்ச் சேரவில்லை.  அதிருப்தி அடைந்த மாவ்ஜி, இதுகுறித்து அஞ்சல் அலுவலகத்திற்குப் பலமுறை சென்று கேட்டும் முறையான பதில் இல்லை.  அஞ்சல் துறையின் சேவைக்குறைபாட்டால் மன உளைச்சல் ஏற்பட்டதற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை நீதிபதி ஸ்ரீராமுலு, உறுப்பினர் ரத்தினம் ஆகியோர் விசாரித்துத் தீர்ப்பு கூறினர்.  பாதிக்கப்பட்ட மாவ்ஜிக்கு, 11 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என, கோவை மற்றும் சென்னை அஞ்சல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

About வழக்கறிஞர் A K ராஜேந்திரன்

View all posts by வழக்கறிஞர் A K ராஜேந்திரன் →