தொழிற்ச்சாலை சார்ந்த வேளாண்காடுகள்

treeதொழிற்ச்சாலை சார்ந்த மரங்கள்

காகிதக்கூழ் மரங்கள்  : சவுக்கு மற்றும் தைல மரம்

தீக்குச்சி மரம்   :  அயிலை என்ற பெருமரம்

காகிதக்கூழ் மர தொழில் நுட்பங்கள்

தைலமரம்

யூகலிப்டஸ் மிர்டேசியே (ஙஹ்ழ்ற்ஹஸ்ரீங்ஹ) குடும்பவகை மரமாகும், ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா மாநிலத்தை தாயகமாகக் கொண்ட இம்மரம் ஆங்கிலேயர்களால் 1843ஆம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும் எரிபொருள் மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது,  பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிடப்பட்டது.   தைலமரங்களில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன,  இம்மரங்கள் 330 மி.மீ. லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை, வறண்ட மற்றும் சமவெளிப் பகுதிகளில் வளரும் யூக்கலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ், கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவை. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மேட்டுப்பாளையம் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தரமான தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக மகசூல் தரும் சிறந்த மரங்களை ஆராய்ந்து வீரிய ரக கூழ்மரக் கன்றுகளை குளோனல் முறையில் உற்பத்தி செய்து தொழிற்சாலைகள் உதவியுடன் ஒப்பந்த முறைசாகுபடி முறைகள் மூலம் வனத்தோட்டங்களை உருவாக்கி வருகிறது.

நிலத்தைத் தேர்ந்தெடுத்தல்

  • மண்ணின் ஆழம் 1மீ-க்கு குறைவாக உள்ள நிலத்தைத் தவிர்க்க வேண்டும்.
  • அதிக உவர் மற்றும் களர் நிலங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • மண்ணின் அமிலகாரத்தன்மை 6-லிருந்து 8 வரை இருக்க வேண்டும்.
  • அதிக மண் அரிப்பு மற்றும் நீர்த் தேக்க நிலங்களைத் தவிர்க்க வேண்டும்.

 

நாற்றங்கால் வளர்ப்பு முறைகள்

 

தைல மர நாற்றுக்களை விதைகள் மூலமாகவும், விதையில்லா இனப்பெருக்கம் (Vegetative propagation) வழிமுறையான குச்சிகள் (கன்றகப் பெருக்கம் – cloning) மூலமாகவும் உற்பத்தி செய்யலாம்,  ஒரு கிலோ விதையில் சராசரியாக 6,42,000 வீரிய விதைகள் இருக்கும்,  ஆனால் தற்போது கன்றகப் பெருக்க (cloning) முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகளே அதிக மகசூல் தருவதால் கன்றகப் பெருக்கக் கன்றுகளை மண்ணின் தன்மையறிந்து நடவு செய்வது நல்லது,

கன்றகப் பெருக்க (cloning) உற்பத்தி

ஒரே மரத்திலிருந்து பெறப்பட்ட ஒத்த மரபுப் பண்புகளைக் கொண்ட நாற்றுக்களை கன்றகப் பெருக்க (cloning) நாற்றுக்கள் என்று கூறுகிறோம்,  மிகச் சிறந்த அதிக உற்பத்தித் திறன் கொண்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டு, நிலத்திலிருந்து சுமார் 30 செ.மீ உயரத்தில் வெட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. அப்படி வெட்டப்பட்ட மரத்திலிருந்து மறுதாம்புகள்(coppice) வளர ஆரம்பிக்கும்.  இவை 45 முதல் 60 நாட்கள் ஆனபிறகு, அந்த மறுதாம்புகளை வெட்டியெடுத்து அதன் குச்சித்தண்டுகளை இண்டோல் பியூட்ரிக் அமிலம் (IBA) கலந்த பவுடரில் தடவிப் பின்னர் பசுமைக்குடிலில் (green house) வளர்க்கப்படுகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் நாற்றுக்கள் 15-20 நாட்களில் வேர்கள் விட்டு, 45ஆம் நாள்முதல் முழுமையான நாற்றுகளாக  தயராகிவிடுகின்றன.  பின்னர் 90 நாட்கள் வரை கன்றகப் பெருக்க (cloning) நாற்றுக்களை திறந்தவெளி நாற்றங்காலில் பராமரிக்கப்பட்டு நடவுக்கு பயன்படுத்தலாம்.

சாகுபடி முறைகள்

தைல மரங்கள் குறுகிய காலச் சுழற்ச்சி முறைகளான 4 முதல் 6 ஆண்டுகள் அறுவடைமுறை தொழிற்ச்சாலைத் தேவைகளுக்குக் குறிப்பாக மரக்கூழ் எரிபொருள் தயாரிப்புக்கு வளர்க்கப்படுகிறது. முதலில் நிலத்தினை நன்கு உழவு செய்ய வேண்டும், பருவ காலங்கலில் தைலமர நாற்றுக்களை 3மீ x 1.5 மீ அல்லது 3மீ x 2மீ இடைவெளியில் 45 செ.மீ x 45 செ.மீ ஷ்

45 செ.மீ அளவுள்ள குழிகளில் நட வேண்டும்.  மேலும் நாற்றுகளை நடும் போது கரையான் தாக்குதலைத் தடுக்க 5 – 10 கிராம் வரை போரேட் குழிகளில் இடவேண்டும், நாற்றுக்களை குழிகளில் நடும்போது 1-2 கிலோ இயற்கை எருவுடன் 25 கிராம் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கலந்த  உரம் இடவேண்டும்.  தவிர ஒவ்வொரு குழியிலும் குப்பை உரத்துடன் 25 கிராம் டிரைகோடெர்மா (அல்லது) சூடோமோனாஸ் கலந்து இடுவதால் வேரழுகல், வேர் வாடல் நோய்களிலிருந்து நடப்பட்ட கன்றுகளைப் பாதுகாக்கலாம், முதல் இரண்டு ஆண்டுகளில் பருவமழை இல்லாத காலத்தில் நீர்ப்பாசனம் அவசியம், மேலும் இரண்டு முதல் மூன்று முறைகளைகளை அகற்றவேண்டும்.

நடவு செய்ய ஏற்றகாலம்

1.    தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஜூன், ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை நடவு செய்ய மிகவும் சிறந்த காலமாகும், பருவகாலத் தொடக்கத்தில் நாற்றுகளை நடுவது தொடர்ந்து வரும் பருவகால மழையை நாற்றுகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு புதுவேர் விட்டு வளர்வதற்கு ஏதுவாகும்.

2.    கோடைக்காலத்தில் நாற்றுகளை நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும், நல்ல நீர்ப்பாசன வசதி உள்ள நிலையில் நாற்றுகளை எந்த காலத்திலும் நடலாம். குளிர்காலத்தில் நாற்றுகளின் வளர்ச்சி குறைவாக இருக்குமாதலால் அக்காலத்தில் நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

3.    மரக்கன்றுகள் பட்டுப்போன  இடங்களில் ஒரு மாத காலத்திற்குள் அல்லது உடனடியாக புதிய  கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

 

நோய்கள்

தைல மரங்களைத் தாக்கும் முக்கிய நோய்கள் வேரழுகல் தண்டு கொப்புள நோய் (stemcanker), இளஞ்சிவப்பு தண்டழுகல் நோய் (pink disease) மற்றும் நாற்றுக்களைத் தாக்கும் பழுப்பு நோய் (seedling blight) முதலியனவாகும்.

 

மகசூல்

நான்கு முதல் ஐந்து வருடங்களில் தைலமரம் அறுவடை செய்யப்படும்.  நல்ல  மண் வளம், நீர் வசதியுள்ள இடங்களில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் கிடைக்கும், இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு 4-5 ஆண்டுகள் இடைவெளியில் ரூ. 75,000/- வரை வருவாய் பெறலாம்.

(ii) சவுக்கு மரச் சாகுபடியும் நிர்வாகமும்

சவுக்கு அயல்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட மரப்பயிராகும். சவுக்கு மரங்கள் அதிகமாக தமிழ்நாடு, ஆந்திரா, ஓரிசா, பாண்டிச்சேரி, அந்தமான் தீவுகள், பங்களாதேஷ், பர்மா ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகிறது. சவுக்கு விரைவாக வளரும்  இயல்புடைய பசுமை மாறா அழகிய தோற்றம் கொண்ட ஊசியிலைகளைக் கொண்ட மரமாகும். சவுக்கு மணற்சாரி பகுதிகளிலும், கடற்கரை மண் உள்ள பகுதிகளிலும் நன்கு வளரும், கடற்கரை அல்லாத உள்நாட்டுப் பகுதிகளில் நல்ல வடிகால் அமைப்புள்ள மண் வகைகளிலும் நன்கு வளரும். இம் மரங்கள் சராசரியாக  ஆண்டுக்கு 500 மி.மீ. முதல் 1100 மி.மீ. மழை அளவுள்ள இடங்களில் செழித்து வளரும். மணல் கலந்த செம்மண், செம்மண், உப்பு மண், சுண்ணாம்பு மற்றும் அமில் மண் பகுதிகளில் வளரும், சவுக்கு மரங்கள் நைட்ரஜனைத் தக்க வைக்கும் பிராங்கியா வகை வேர்முண்டுகளைக் கொண்டுள்ளதால் அவை நைட்ரஜனைத் தக்க வைத்து மண் வளத்தின் அளவை உயர்த்துகிறது.

 

சவுக்கு வகைகள்:

 

1. நாட்டு சவுக்கு. (Casuarina equisetifolia)

2. ஜூங்கினியானா சவுக்கு. (Casuarina junghuhniana)

மேற்குறிப்பிட்ட இரண்டு சவுக்கு வகைகளும் விதை மற்றும் குளோனல் முறையில் உற்பத்தி செய்து விவசாய விளைநிலங்களுக்கே மானிய விலையில் ஒப்பந்தம் செய்யும் தொழிற்சாலைகளால்  வழங்குகப்படுகிறது.

ஒப்பந்த முறை வேளாண் காடுகள் பகுதி மூன்றில் சவுக்கு மர நடவு, நீர்பாசனம், பூச்சிக் கட்டுப்பாடு உரம் மற்றும் களை நிர்வாகம் பற்றிய செய்திகளை விரிவாகக் காணலாம்.

About Dr K T பார்த்திபன் TNAU - Forest College

View all posts by Dr K T பார்த்திபன் TNAU - Forest College →