நீரின்றி அமையாது உலகு…….

4n820nt5காற்று இயல்பாகக் கிடைக்கின்ற ஒன்று.  ஆனால், நீரை நாம் தான் சேமித்துக் கொள்ள வேண்டும்.  உணவே இல்லாமலும் இருக்கலாம்.  ஆனால், நீர் இல்லாமல் இருக்க முடியாது.  அதனால் தான் நமது முன்னோர்கள் தண்ணீர்ப் பந்தல் வைத்தல், குளம் தோண்டுதல், ஏரி, அணை கட்டுதல் ஆகியவைகளைச் செய்தார்கள்.  அதனால் குழிவான இடங்களில் எல்லாம் நீரைத் தடுத்து நிறுத்தித் தம் பெயரை உலகில் நிலை நிறுத்தினார்கள் இதை “ நல நெளி மருங்கின் நீர் தட்டோர் அம்ம இவண் தட்டோரே” என்று சங்க நூல் கூறுகிறது.

சுமார் 1961 வாக்கில் தொடங்கிய அத்திக்கடவு – அவிநாசித் திட்டம் நாளது வரை நீட்டிக் கொண்டே செல்கிறது.  அன்னூர், அவிநாசி, சேவூர் முதலான இடங்களில் இருந்த உண்ணா விரதங்களின் பயனால் இத்திட்டம் அரசால் கையிலெடுக்கப் பட்டுள்ளது.

மழை குறைவான பகுதியான அவிநாசி, பெருந்துறை… ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் 1000 அடிக்குக் கீழாகச் சென்று விட்டது.  நன்கு உழைக்கும் வேளாண்குடி மக்கள் வேறு வழியறியாது உண்ணா நோன்பைக் கடைப் பிடித்துத் திட்டத்தை அரசு கையிலெடுக்குமாறு செய்துள்ளனர்.  இது எப்படியாவது நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  ஆகவே, வரும் அரசு அதன் காலத்தில் இதை முடித்து வைத்துத் தன்பெயரை நிலை நாட்டுமாக.  ஒரு சொட்டு ஆற்று நீரும் கடலுக்குச் செல்லாமல் தடுத்து நாட்டை வளமுடையதாக்க வேண்டும்.

இவ்விதழில் இயந்திரக் கருவிகள் யாவை?  அவற்றை வேளாண்மைத்துறைக்கு எவ்வாறு பயன்படுத்துவது? செலவில்லாமல் எப்படி இயற்கையை ஒட்டி வேளாண்மை செய்வது? முதலான பல செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.  ஜீவாமிர்தம் தயாரித்தல், பயன்படுத்துதல், நிலத்து நீரை நிலத்துக்கே பயன்படுத்தும் குட்டைகள் அமைத்தல், களை எடுக்கும் கருவிகள் முதற்கொண்டு, கரும்பு வெட்டல், விதைக் கரும்பு வெட்டல், தோகை உரித்தல் ஆகிய அனைத்தும் கருவிகளாலேயே செய்து செலவை மிச்சப் படுத்துதல் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.  தவிர, அஸ்வினி… போன்ற பூச்சிகளை விரட்ட பயன்படுத்தும் முறைகள் ஆகிய அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன.  யாவற்றையும் படித்தறிந்து, கடைப்பிடித்து வேளாண் “குடியுயரக் கோன் உயர” வாழ்ந்து நாட்டிற்கு நற்பலன் சேர்ப்போமாக.