புதிய தங்க கடன் முதலீட்டு பத்திரம்

GOLDமன்னர் காலத்திலிருந்து நம் நாட்டில் தங்கத்திற்கு நல்ல மவுசு தான்.  பல நூற்றாண்டுகளாக தங்கம் இருப்பு ஒருவரின் செல்வ நிலையும் அந்தஸ்தையும் குறித்து வருகிறது.  பல முதலீட்டு வாய்ப்புகள், பூமி, பங்குகள் என்று பல  புதிய வழிகள் இருந்தாலும் தங்கம் தன்னுடைய உரிய இடத்தை தக்க வைத்துக் கொண்டு தான்  உள்ளது.  வீட்டில் திருமணம் என்பது அடுத்த தலைமுறையை குறிக்கும்.  அதற்கு தங்க ஆபரணங்கள் எவ்வளவு என்பதும் ஒரு முக்கிய அடையாளச் சின்னம்.  நம் நாட்டில் இந்த கால கட்டத்தில் புதிதாக தங்கம் கண்டெடுப்பது குறைந்திருந்தாலும் அதற்கான ஈர்ப்பு குறையவில்லை.  நம் சொத்துகளில் தங்கம் ஒரு முக்கிய அங்கம் வகிப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.  இந்தியாவில் தனி நபர்களின் தங்க இருப்புத் தொகை உலகின் மொத்த தங்கத்தின் அளவில் 8%  ஆகும்.  மேலும் உலகத்தில் உள்ள மொத்த தங்கத்தின் தேவையை வைத்துப் பார்த்தால் சுமார் 25% இந்தியர்களால் தான் உருவாகிறது.  இந்த புள்ளிவிவரத்திற்கு சான்று கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் தங்க இறக்குமதியின் மதிப்பு $ 100 billion.  இந்த இறக்குமதியினால் இந்திய  பொருளாதாரம் பாதிப்பு தான் அடைந்துள்ளது.  இதற்கு நம் ரூபாயின் மதிப்பை கடந்த இரண்டு ஆண்டுகளில் சரிந்ததை பார்த்தாலே போதும்.  கடந்த சில வருடங்களில் இது போன்ற பொருளாதார நிகழ்வுகளை தவிர்க்க மத்திய அரசு பல முயற்சிகள் (வெளிநாடு வாழ் இந்தியர் மூதலீடு, மத்திய அரசின் பொது நிறுவனங்களின் மூலம் கடன்) எடுத்து வந்தாலும், புதிதாக எழும் தங்கத் தேவையினால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை மட்டுமே ஈடுகட்ட முடிந்தது.

தங்க இறக்குமதியைப் போல் தங்க ஏற்றமதி தங்க நகைகளாகத் தான் அனுப்ப முடிந்தது.  இந்த ஏற்றுமதி மிகவும் குறைவு (எதிர்பார்த்த அளவைவிட).  தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார கொள்கையினால் தங்கம் கூடுதலாகத்தான் இறக்குமதி ஆனது. இந்த தங்க முதலீட்டினால் நாட்டிற்கு பெரிதாக பயன் ஒன்றும் இல்லை.  கருப்புப் பணம் பதுக்கவும் உதவியாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது.  தங்க கொள்முதல் மேல் உள்ள கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கிய போதும் அது நம் பொருளாதார நிலை சீர்படுத்த பெரிதாக உதவவில்லை என்பதே உண்மை.  இந்த நிலையை சீர் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி தங்க கடன் பத்திரங்கள் (GOLD BONDS) என்ற ஓர் முதலீட்டை அறிமுகம் செய்யவுள்ளனர்.  இந்த திட்டம் நவம்பர் 5, 2015 முதல் 20 வரை முதலீட்டாளர்கள் தபால் நிலையங்களிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விண்ணப்பித்து முதலீடு செய்யலாம்.  இந்த முதலீடு 999 ரக சுத்த தங்கத்தின் பெயரில் கடன் பத்திரமாக இந்திய ரிசர்வ் வங்கியிடம்  செய்யலாம்.நம் ரிசர்வ் வங்கிக்கு இதனால் என்ன பயன் என்று கேட்டால், தங்கத்தில் சிக்கியுள்ள முதலீட்டை நாட்டின் உள்கட்டமைப்புக்காக ஒதுக்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே திட்டம். அதற்கு இந்த வங்கி சமாளிக்க வேண்டியது.

1. தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள்  – Hedging மூலம்.

2. இந்திய நாணயத்தின் மதிப்பீட்டை காத்தல் –
உலக பொருளாதார நிலையை அனுசரித்து தங்கத்தின் விலையை மனதில் கொண்டு தக்க முதலீடுகள் செய்வது.

10 முக்கிய குறிப்புகள்

1. இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும்  இந்த கடன் பத்திரம் 2 கிராம் முதல் 500 கிராம் வரை ஓர் விண்ணப்பதாரர் பெறலாம்.  இப்படி வழங்கப்படும் தங்கத்தின் விலையை தங்க சந்தையின் (Indian Billion and Jewellers Association Ltd. – IBJA) மூலம் நிர்ணயம் செய்யப்படும்.  அதாவது தங்கம் விலை  உயர்ந்தால் நம் முதலீடு உயரும்.

2. இரண்டு கிராம் முதல் ஐநூறு கிராம் வரை ஒருவர் வாங்கலாம்.  தற்போது நிர்ணயம் செய்துள்ள விலை ரூ.2684/- கிராம் ஆகையினால் குறைந்தபட்ச கடன் பத்திர முதலீடு ரூ.5400/-.

3. முதலீடு செய்தவர்களுக்கு ( முதலீடு முதலில் செய்த தொகைக்கு ) 6 மாதத்திற்கு ஒரு முறை 2.75% வட்டி வழங்கப்படும்.

4. கடன் பத்திரம் மட்டுமல்லாமல் டி-மாட் (De-mat) முறையிலும் கிடைக்கும்.

5. இந்த தங்க கடன் பத்திரங்கள் 8 ஆண்டுகளுக்கு பின் முதிர்ச்சி அடையும்.  முதலீடு செய்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமாக அன்றுள்ள விலையில் திரும்பப் பெறலாம்.

6.இந்த தங்க கடன் பத்திரங்கள் விற்பனை கூடங்களில் (Exchanges) விற்கவும் முடியும் (5 ஆண்டுகளுக்கு முன்பாகவும் – நல்ல நிலை இருந்தால் (Volumes).

7. இந்த தங்க கடன் பத்திரங்கள் தபால் நிலையங்களிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வழங்கப்படும். மேலும் குறித்த கடன் தொகையையும் (Loan to Value Ratio – LTV) வங்கிகளிலிருந்து இதை அடமானம் செய்து பெறலாம். LTV என்பது மொத்த மதிப்பில் ஓர் சதவீதம்.

8. இந்த வட்டி வருமானத்திற்கு TDS  பொருந்தாது.  ஆனால் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.  கடன் பத்திரங்கள் முதிர்ச்சி அடையும் போது அல்லது விற்கும் போது Capital Gain  வரிக்கு உண்டான சட்டங்கள் பொருந்தும்.  அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்தால் அவரவர் வரிக் கோட்டுக்கு உட்பட்டு வரி வசூலிக்கப்படும்.  3 ஆண்டுகளுக்கு மேல் விற்பனை செய்தால் Indexation செய்து 20% Capital Gain வரி செலுத்த வேண்டும்.  Indexation என்பது பணவீக்கத்தைக் கொண்டு உங்கள் முதலீட்டை இன்றைய  பண  மதிப்பிற்கு  ஈடு  செய்வது.

9. இந்த தங்க கடன் பத்திரங்கள் தங்க விலையில் உள்ள ஏற்றத்தை பெற்று தரும்.  2.75% வட்டியைப் பெற முடியும் என்ற இந்த வாய்ப்பு மற்ற தங்க முதலீட்டு திட்டங்களில் இல்லை.

10. தங்க விலை உலகின் பொருளாதார நிலையை கொண்டு இயங்கி வருகிறது என்பது மனதில் கொண்டு, விலை குறையவும் செய்யலாம் என்பதனால், அவரவர் வருமானம், சேமிப்புக்கு ஏற்ப அதற்கு தேவைப்படும் அளவுக்கு தங்களது முதலீட்டில் தங்க கடன் பத்திரத்திற்கு ஒதுக்குவது நல்லது.

தங்கம் வாங்க நினைப்பவர்கள் தங்களின் சேமிப்புகள் லாபங்கள், முதலீடுகளில் ஓர் குறித்த அளவை முதலீடு செய்தால் தங்கள் பிற்கால தேவைக்கும் பயன்படும், இடைப்பட்ட காலத்தில் நாட்டிற்கும் பயன்படும்.