புன்னை மரம் – பொக்கிஷம்…

jxmd7hhtபுன்னை மரமானது பண்டைய காலத்தொட்டே தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் இணைந்து காணப்படக் கூடிய பழமையான மரமாகும். இம்மரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த முன்னோர்கள் கோயில்களின் முற்றத்தில் இம்மரத்தை வளர்ப்பதை பாரம்பரியமாகக் கொண்டிருந்தனர்.

இம்மரத்தின் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவது மட்டுமல்லாமல் குறைந்த அளவில் புகையை வெளியிடுவதால் கோயில்களில் தீபம் ஏற்றப்படும் எண்ணெய்யாகவும் பயன்படுத்தி இருக்கின்றனர். இம்மரம் ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மையுடையது. கடலோரப் பகுதிகளில் நன்கு வளருவதால் பல விவசாயிகள் இம்மரப் பயிரை வளர்த்துப் பயனடைகின்றனர்.

    தமிழ் பெயர் : புன்னை
    அறிவியல் பெயர் : கேலோஃபில்லம்     
    கன்னோபில்லம்
    ஆங்கில பெயர் : Ball Tree, Beauty Leaf.

உகந்த சூழ்நிலைகள்

ஈரப்பதம் அல்லது மிதமான ஈரப்பதம் மிக்க பகுதிகளில் வளரும் இவ்வகை மரங்களானது மலைப் பகுதிகளுக்கும் அதிக வறட்சியான பகுதிகளிலும் குறைந்த வளர்ச்சியைக் கொண்டு காணப்படுகின்றது. சராசரியாக 750 முதல் 5000 மி.மீட்டர் மழையளவைப் பெறும் பகுதிகளுக்கும், சராசரி வெப்பநிலை 18 – 33° செல்சியஸ் வரை உள்ள பகுதிகளுக்கும் உகந்த மரமாகும்.

அனைத்து வகையான மண்ணிற்கும் ஏற்றமரமாகக் காணப்படுகின்றது. புன்னை மரமானது ஒளி விரும்பும். நன்கு வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான பகுதிகளுக்கும், சுண்ணாம்பு மண் பகுதிகளுக்கும் ஏற்ற மரமாகக் காணப்படுகின்றது. பனி மற்றும் நெருப்பிற்கு இம்மர நாற்றுகள் பாதிக்கப்படுகின்றன.

விதைச் சேகரிப்பு மற்றும் நாற்றுகள் வளர்ப்பு

தமிழ்நாட்டில் புன்னை மரம் கடலோர மாவட்டங்களான கடலூர், சென்னை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றது. மேலும் இம்மாவட்டங்களில் ஜூலை முதல் செப்டம்பர் வரை காய்கள் சேகரிப்பிற்கு உகந்த மாதமாகவும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை காய்கள் சேகரிக்க உகந்த மாதங்களாகவும் இருக்கின்றன.

 காய்களானது நன்கு மஞ்சள் கலந்த பச்சை நிறமாக மாறும் பொழுது சேகரித்தல் வேண்டும். பின் விதையுறைகளை நீக்கி விதைகள் சேகரிக்கப்பட்டு நாற்றுகள் உற்பத்திக்கு பயன்படுகின்றது. இவ்வாறு சேகரிக்கப்படும் விதைகளின் முளைப்புத்திறன் 45 முதல் 60 நாட்களில் 95 சதவீதமாகக் காணப்படுகின்றது.

சராசரியாக 30 முதல் 45 நாட்களுக்குப்பின் நாற்றுக்கள் 10 X 25 செ.மீ என்ற அளவில் உள்ள பைகளுக்கு மாற்றப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பின் நாற்றுகள் தோப்புகளில் நடவு செய்யப்படுகின்றன.

மர மேலாண்மை

புன்னை மரத் தோப்புகளைப் பொருத்த வரையில் 4 மீ X 4 மீ என்ற இடைவெளியில் நடப்படுகின்றது. சுமார் 3 ஆண்டுகள் வரை, ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் களையெடுத்தல் அவசியமாகின்றது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் 500 கிராம் தொழுஎரு அல்லது 250 கிராம் வேப்பம்புண்ணாக்கு இடுவது சிறந்தது. 3 வருடங்களுக்கு மேல் 6 மாதத்திற்கு ஒருமுறை உரமிட வேண்டும்.

கரையான்களினால் பாதிப்பு ஏற்படுமானால் சுண்ணாம்பு கொண்டு கட்டுப்படுத்தலாம். இரண்டு வருடங்கள் முடிவில் பக்கக் கிளைகளை நீக்குவது வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றது.

மகசூல் / விளைச்சல்

புன்னை மரமானது மிக முக்கியமான எண்ணெய் வித்து மரங்களில் ஒன்றாகும். சராசரியாக 5 வருட மரமானது 12 கி.கிராம் ( காய்கள் ஒரு மரத்திலிருந்து ) / மரம், சுமார் 2.5 லிட்டர் எண்ணெய் கிடைக்கின்றது.  100 கி.கிராம் / 20 வருட மரங்களிலிருந்து கிடைக்கின்றது.

பயன்கள்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட புன்னை மரம் ‘குளுசியேசியே’ என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. கடலோர மாவட்டங்களில் சவுக்கு மரத்திற்கு மாற்றாக சிறந்த காற்றுத் தடுப்பானாகவும் பயன்படுகின்றது.
மண் பாதுகாப்பு மற்றும் மண் அரிப்பைத் தடுப்பதற்கு உதவுகின்றது.
சராசரியாக 50 முதல் 70 விழுக்காடு வரை எண்ணெய் சதவீதம், இதன் விதைகளில் இருந்து பெறப்படுகின்றது. இதன் விதையுறைகள் எரிபொருளாகவும் பயன்படுகின்றன.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயானது பயோ – டீசலாகப் பயன்படுகின்றது.
புன்னை மர எண்ணெய் ‘டமுனு எண்ணெய்’ (TAMUNU OIL) என்றும் அழைக்கப்படுகின்றது. இது ஒரு சிறந்த மருத்துவகுணமுள்ள எண்ணெய்யாகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வகையான தோல் நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாக உள்ளது.
சமீபத்திய ஆராய்ச்சியின்படி HIV மற்றும் புற்றுநோய்க்கான எதிர்ப்புத் திறன் கொண்ட எண்ணெயாகக் கருதப்படுகின்றது.

புன்னை மரக் கட்டைகளும் சிறந்த அடர்த்தி ( 560 – 900 கி.கி / மீ³ ) வரை காணப்படுவதால் கதவு, ஜன்னல் மற்றும் மரவேலைப்பாடுகளுக்குச் சிறந்த மரமாக உள்ளது. சுமார் 10 வருட வயதுடைய மரங்களே தடிமர வேலைபாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

புன்னை தெற்காசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட போதிலும், வெப்பமண்டல நாடுகளான மலேசியன் தீவுகளில் பூத்துக் குலுங்குகிறது. மேலும் தெற்காசிய நாடுகளான மலேசியா, இலங்கை, வியட்நாம் மற்றும் தெற்கிந்தியப் பகுதிகளில் இதன் எண்ணெய்த் தன்மையும் இடங்களைப் பொறுத்து வேறுபடுகிறது.

மருத்துவப் பயன்கள்

1928 களில் மரிய சுசுன்னா என்ற கன்னியாஸ்திரி தொழுநோய்களின் வலி தீர புன்னை எண்ணெய் பயன்படுத்தியுள்ளார். அதற்குச் சில வருடங்களுக்குப்பின் பிரெஞ்சு அறிவியலாளர்கள் புன்னை எண்ணெய் பலவிதமான தோல் நோய்களைக் குணப்படுத்தும் என்று கண்டறிந்துள்ளனர்.

இதற்குச் சான்றாக பாரீஸில் ஒரு பெண் தீவிரமான புண்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் அந்த புண்கள் தீர வழியில்லை எனவே காலை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். எனினும் தொடர்ந்து புன்னை எண்ணெய் பயன்படுத்திய பின் அவரது அந்த நோய் தீர்ந்துள்ளது.

புன்னை எண்ணெயில் தனித்துவமான கொழுப்பு அமிலம், கேலோபிலிக் அமிலம் இருப்பது ஆய்வுக் கட்டுரைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது புதிய தோல் செல்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம். மேலும் லேக்டோன், வீக்கம் தவிர்க்கும் கேலோபில்லோலைடு மற்றும் கார்மான்ஸ் ஆகியன என்று பல்வேறு விதிமான கொழுப்புகள் உள்ளன.

முதுமை தவிர்க்கும் பண்புகள்

முதுமை என்பது நாம் விரும்பாவிட்டாலும் இயற்கையில் நடக்கும் ஒன்று. எனவே தோல் வயது சுருக்கங்களைக் கொள்வது இயற்கை. முதுமைக்குப் பலவிதமான காரணங்கள் இருப்பினும் சூரியவெப்பத்தால் தோலில் ஏற்படும் பாதிப்புகள் மிக முக்கியமானது.

சந்தையில் பலவிதமான அழகுசாதன பொருட்கள் முதுமையைத் தவிர்பதற்கென்றே  விற்பனை செய்யப்படுகின்றன. அவை பொதுவாக வேதிப்பொருட்களின் செயற்கைப் பாதுகாப்புகளையும் மற்றும் செயற்கை நிறமிகளையும் கொண்டுள்ளது. இவை நன்மைக்கு பதில் தீமையை மட்டும் தருகின்றன. இவற்றில் இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் புன்னை எண்ணெய்.

இவ்வெண்ணெய் மேற்கூறியது போல் புதிய செல்களை உருவாக்கி, ஆரோக்கியமான தோல் செல்களைப் புதுபிப்பதால் முதுமையை தவிர்க்கும் / தள்ளிப்போடும் அருட்கொடையாகத் திகழ்கிறது.

தோல் பாதுகாப்பில் புன்னை எண்ணெய்

தற்போதைய உலகில் உடல் மற்றும் அழகு மீதான மோகம் அதிகரித்து வரும் வேளையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எனப் பலரும் தோல் அலர்ஜி, தோல் பாதிப்புகள் மற்றும் பல தோல் வியாதிகளுக்கு உள்ளாகின்றனர். இவற்றிற்கெல்லாம் அருமருந்தாகப் புன்னை எண்ணெய் திகழ்கிறது. இந்த எண்ணெயின் மந்திர மற்றும் ரகசிய சக்தி தோல் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த தீர்வாக விளங்குகின்றது. மேலும் இதன் இயற்கைப் பண்புகள் தோலை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

சில முக்கியப் பயன்கள்

வடுக்கள்

தொடர்ச்சியான பயன்பாடு, முகத்தில் பருக்களால் ஏற்படும் வடுக்களை நீக்கப் பயன்படுகிறது. பாக்டீரியா, வீக்கம் ஆகியவற்றிற்கு எதிராகச் சிறந்து செயலாற்றுகிறது.

முடி பராமரிப்பு

புன்னை எண்ணெய்யின் ரகசிய சக்தி தலைமுடி பாதுகாப்பில் ஒரு நீங்காத இடம் கொண்டுள்ளதால் சந்தையில் உள்ள அனைத்து முடிப் பராமரிப்பு எண்ணெய்களிலும் புன்னை எண்ணெய் சேர்க்கப்படுவதில் ஆச்சரியமில்லை. உங்கள் முடி எந்த வகையாக இருப்பினும் புன்னை எண்ணெய் ஆச்சரியத்தக்க முடிவுகளைத் தரும் என்பதில் ஐயமில்லை. முடி வளர்ச்சி – புன்னை எண்ணெய் முடிஇழப்பைச் சரிசெய்யவும். புதிய முடிவளர்ச்சிக்கும் சிறந்த பயன் ஆற்றுகிறது. முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர இவ்வெண்ணெய் பயன் அளிக்கிறது.

தோல் பராமரிப்பு

புன்னை எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகவும், மேலும் பலவிதமான தோல் வகைகளுக்கு ஏதுவானதாகவும் உள்ளது. மேலும் இது இயற்கையிலே சிறந்த UV மற்றும் சூரிய ஒளி தடுப்பானாகவும் செயல்படுகிறது.
தீக்காயங்கள் : புன்னை எண்ணெய் தீக்காயங்கள் மற்றும் அவற்றை ஆற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.

முகச்சுருக்கம் : முகச்சுருக்கங்களை நீக்குவதிலும் வரவிடாமல் தடுப்பதிலும் புன்னை எண்ணெய் சிறந்த பலன் தரும்.

நகப்பூஞ்சை : நகச்சுற்று ஏற்படுத்தும் பூஞ்சைகளுக்கு எதிராக புன்னை எண்ணெய் சிறந்த பலன் தருகிறது.

சொரியாஸிஸ் :  சொரியாஸிஸை குணப்படுத்துவதில் புன்னை எண்ணெய் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

விலங்குகள் பராமரிப்பு : நாய்களுக்கு ஏற்படும் அரிச்சல் மற்றும் புண்களுக்கு புன்னை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மேலும் விலங்குகளுக்குப் பளபளப்பையும் ரோமத்தை அழகாக்கவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

பந்தய வீரர்களின் கால் பராமரிப்பு : இயற்கையாகவே புன்னை எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பானாகச் செயல்படுவதால் பந்தய வீரர்களின் கால் நோய்களுக்கு மருந்தாக உபயோகபடுத்தப்படுகிறது.

படர்தாமரை : படர்தாமரையைக் குணப்படுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது.

கீல்வாதம் : வீக்கம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட எண்ணெய் ஆதலால் கீல்வாதம் குணப்படுத்தப் பயன்படுகிறது.

நடுக்கம் : குளிர்நடுக்கத்தினால் வரும் காயங்களை ஆற்றப் புன்னை எண்ணெய் பயன்படுகிறது.

அரிப்பு : உடல் அரிப்பை, வறண்ட சருமத்தை மாற்றவும், நீக்கவும், சொறி, சிரங்கு வியாதிகளைக் குணப்படுத்தவும் புன்னை எண்ணெய் பயன்படுகிறது.

உதட்டு வெடிப்பு : புன்னை எண்ணெய் உதட்டு வெடிப்புகளைத் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

எல்லாவகையான சருமப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகவும் சர்வ லோக நிவாரணியாகவும் புன்னை எண்ணெய் திகழ்கிறது. ஆனாலும் இதன் அற்புத பலன் குடத்தில் இட்ட விளக்காகவே இருக்கிறது.

கட்டுரையாளர்கள் : பா.பழனிகுமரன், கா.த.பார்த்திபன் மற்றும் மு.சங்கரேஸ்வரி.

கட்டுரையாளர்கள் தொடர்புக்கு : வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →