முகநூல் பக்கம்…

wewha4q7 விதைகளே பேராயுதம்… விவசாயம் செய்யலாம் என்று எண்ணி வெண்டை சாகுபடி செய்ய விதை தேட கால் கிலோ விதை ரூ.700 என்றார்கள். விவசாயிகள் தற்கொலை செய்வதன் காரணம் உரைத்தது. நாட்டு வெண்டை விதைகள் கிடைக்கவில்லை. என் ஆத்தாவிடமும் அம்மச்சியிடமும் கேட்க, எங்க காலத்துல வெண்டணா செவப்பு வெண்டைதான் அம்புட்டு ருசியாயிருக்கும்னாங்க. அப்புறம் நிறைய நண்பர்கள் நாட்டு விதைகள் எங்களுக்கும் தேவை என்றார்கள். அப்படி சேகரித்தவை தான் இந்த விதைகள். கர்நாடகம், கேரளம் சென்ற பொழுது அங்கு கிடைத்த விதைகளைச் சேகரித்தேன். சஹாஜா சம்ருதா, நவதானியா போன்ற அமைப்புகளைப் பற்றி கேள்விப்பட்டேன். தமிழ்நாட்டில் நிறைய விதை சேகரிப்பாளர்கள் இருந்தாலும் அவர்களுக்கிடையே ஒரு தொடர்பும் இல்லை. பாரம்பரிய விதைகளை வைத்திருக்கும் விவசாயிக்கும் அவர்களுக்கிடையேயும் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. விவசாயிகளை அவர்கள் விதை சேகரிப்பாளர்களாகக் கருதுவதில்லை. விதை கிடைப்பதற்குள் பட்டம் தவறிவிடுகிறது. ஆகவே தமிழ்நாடு முழுவதும் இருக்கும் விதைச் சேகரிப்பாளர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாகவோ, நிறுவனமாகவோ நிறுவி விவசாயிகளுடன் நேரடித் தொடர்பு ஏற்படுத்த நினைக்கிறேன்.

விதை சேகரிப்பாளர் 1 : ‘வானகம்’ ஐயா நம்மாழ்வார் பிறந்த தினத்தை மரபு விதைத் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. அங்கே மரபு விசயங்கள் எல்லாமே பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் களப்பணி நடக்கிறது. நீங்களும் கைகோர்க்கலாம்.

பெண் விவசாயியின் அனுபவம்

கட்டுத்தரையில் வெள்ளாடுகள் அனைத்தையும் கட்டி அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்ததில் தினமும் புழுக்கையை கூட்டி அள்ளிக்கொண்டிருந்தோம்! வேலைகள் அதிகமானதால், மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் என்று யோசித்ததில் பட்டி போட்டு அடைத்துவிட்டால் கூட்டி அள்ளும் வேலை குறையும்! ஆட்டுச்சிறுநீரும் நிலத்தில் இறங்கி நிலத்துக்கு வளம் சேர்க்கும்! என்று முடிவு செய்தவுடன்! மூங்கிலிலோ, நொச்சிக்கம்பையிலோ பட்டி சேர்த்தால் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கரையான் ஏறி சீக்கிரம் பயனில்லாமல் போகும். மறுபடி… மறுபடி வாங்க வேண்டியிருக்கும் என்று யோசித்து, இரும்பில் அடித்துவிடுவது என முடிவுசெய்து பட்டியைத் தயார் செய்தோம்!!!

அன்று இதன் விலை மூன்றுபவுனின் விலை 8000 X 3 இருபத்து நான்காயிரம் ரூபாய்!! வாரம் ஒருமுறை வேறு இடத்திற்கு நகர்த்தி வைப்போம்!! இதனால் நெல் நடும்போது அடியுரம், மேலுரம் எதுவும் போடமாட்டோம். நடுவதோடு சரி! செம்மறி ஆடாக இருந்தால் இவ்வளவு பெரிய பட்டி தேவையில்லை! வெள்ளாடுகள் ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு வீசுகுட்டி போடுமென்பதால் ஒருபக்கத்துக்கு மூன்றாக வைத்து பன்னிரெண்டு தரம்புகள் செய்து மாட்டியுள்ளோம்! ஆடுகளுக்கு மூன்றுமாதத்திற்கொருமுறை கட்டாயம் பூச்சிமருந்து ஊற்றிவிடுவோம் வருடமொருமுறை தடுப்பூசி போட்டுவிடுவோம்!!!
பூச்சி மருந்து ஒவ்வொரு முறையும் வேறு வேறு மருந்துகள் கொடுக்க வேண்டும்! ஆடுகளை அப்படியே வைத்துக்கொண்டு இனப்பெருக்கத்திற்காகக் கிடாய்களை மாற்றிவிடுவோம். முதலில் எங்கள் பட்டியிலிருக்கும் ஆரோக்கியமான கிடாக் குட்டிகளையே விட்டிருந்தோம்! நாலைந்து வருடம் கழித்து ஒருசமயம் போடும் குட்டிகளெல்லாம் வாயின் அடிப்பகுதி இல்லாமலேயே போட்டது! டாக்டரிடம் கேட்டதில் தொடர்ச்சியாக அந்த வம்சக்கூறுகளே வந்ததால் Inbred ஆகிவிட்டது என்றார்.

கிடாய்களை வேறுரகமாக வாங்கி இரண்டு வருடத்திற்கொருமுறை கிடாயை மாற்றிவிடும்படி சொன்னார். அதற்குப்பிறகு குட்டிகள் தரமாகப் போட்டன.
முதலில் வியாபாரிகளுக்கு விற்றுக்கொண்டிருந்தோம். பெரியலாபமில்லை! மெயின் ரோட்டிற்கு அருகிலேயே இருப்பதால் பொதுமக்களுக்கு ஆடு இருப்பது தெரிந்து நேரடியாக வர ஆரம்பித்தார்கள்! இதில் ஒருசிலர் குட்டி வயிறுதான் பெரிதாக உள்ளது, சதைப்பிடிப்பு இல்லை. கறி குறைவாகத்தான் இருக்கும்! இதற்கென்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தபோது மாடு வாங்கவந்த ஒருவர் எங்கள் ஊரில் ஒருவர் எடைபோட்டுக் கொடுக்கிறார். என்று சொல்ல அதைப்பயன்படுத்தி அன்றிலிருந்து உயிருடன் எடைபோட்டுக்கொடுத்து விடுவோம்! இரண்டு தரப்பினருக்குமே பிரச்சனை இல்லை! ஓரளவு எல்லா நெளிவு சுளிவுகளையும் கற்றுக்கொண்டு தரமாகக் குட்டிகள் வந்து சேர்ந்தன.
ஒரே சமயத்தில் ஒருமுறை பதினைந்து கிடாக்குட்டிகள் லட்டுமாதிரி வளர்ந்திருந்தன. அடுத்தவாரம் வரும் திருவிழாவிற்கு கிட்டதட்ட எல்லாம் விற்றுவிடும், இந்தமுறைதான் குட்டிகள் ஒன்று போல உள்ளன என்று நானும் என் கணவரும் எங்கள் உழைப்பை எண்ணி மகிழ்ந்திருந்தோம்!
ஏழைகளின் ஏ.டி.எம் ஐ எமன் கொண்டுபோனகதை : ஊரு கண்ணு, உறவு கண்ணு படறதவிட எங்க கண்ணுபட்டுவிட்டது போல! ரோட்டில் மேய்ந்து கொண்டிருக்கும்போது பக்கத்திலுள்ள ரைஸ்மில்லிலிருந்து வெளியே வந்த நபர் பின்பக்க மில்கதவைச் சரியாக சாத்தாமல்  போய்விட்டார் போலும் மேய்ந்து கொண்டிருக்கட்டும் என்று நான் மாடுதண்ணிகாட்ட வந்துவிட்டேன். அவர் பால்கறந்து கொண்டிருந்தார். பிறகு ஓட்டி வந்து பட்டியிலடைத்துவிட்டோம்.
மறுநாள் காலை நீக்கிவிட்ட பிறகு தண்ணீர் குடித்து விட்டு மேய்ந்து கொண்டிருந்தன. மதியம் ஒரு மணிக்கு மேல் ஒவ்வொரு குட்டியாக வயிறு உப்பி இறந்து கொண்டிருந்தது. என்ன ஆச்சுன்னே தெரியாததால் கடைக்காரனை வரச்சொல்லி ஒரு குட்டியை கொடுத்து அறுத்துப்பார்க்கச்சொன்னதில் நெல் ஊறிக்கிடந்ததால் அசைபோட முடியாமல் ஒவ்வொன்றாக பத்தும் முடிந்தன. மில்லில் மழைகாலமாக இருந்ததால் படுதாபோட்டு நெல்மூட்டைகளை மூடியிருக்கிறார்கள்.

ஆடுகள் எதேச்சையாக உள்ளேபோய் படுதா சந்தில் தலையைவிட்டு சாப்பிட்டுவிட்டது போலும். பின்புறமாக இருந்ததால் யாரும் கவனிக்கவில்லை போலும்! கவலையில் போய்ப்படுத்தவர் இரண்டு நாட்கள் சாப்பிடவுமில்லை. எழுந்திருக்கவுமில்லை!

ஆட்டைநினைத்து அழுவதா? நஷ்டமாகிவிட்டதேனு வருந்துவதா? இவர் இப்படி கிடக்கிறாரேன்னு வேதனைப்படுவதா? இரண்டுநாள் கழித்து மெதுவாக அட! போனாப்போகட்டும் விடுங்க! நம்ம வீட்டிலிருந்து பத்து உயிர்போகணும்னு இருக்கும்போல. நாம அஞ்சுபேர்தான் இருக்கோம். அதனால ஆட்டோட போயிடுச்சு! னு அவரைத்தேற்றி கொண்டுவருவதற்குள் பட்டபாடு இருக்குதே?
பிறகு வீட்டுக்கருகிலுள்ள தோட்டத்திற்கும் மெயின் ரோட்டிற்கு போகாதவாறு கம்பிவேலி போட்டோம்! மறுபடி ஒரு லட்சம் கடன்! புலம்பிக்கிட்டே இருக்கேன்னு நினைக்கவேண்டாம்! பிறகு விற்ற குட்டிகளின் பணத்தில் அதற்கு செலவு செய்தது போக நம்முடைய செலவைச் செய்கிறோம்! கம்பிவேலிக்கடன். அதற்குண்டான வட்டி. எல்லாம் தேங்கிவிடுவதால்தான் விவசாயிகளால் கடைனக்கட்ட முடிவதில்லை!! வேலைகளுக்கு ஆட்கள் ஒழுங்காக கிடைத்து, இயற்கையும் ஒத்துழைத்து விலை நிர்ணயமும் இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டோட கடனை க்கூட நாங்க கட்டிருவோம்.

விவசாயிகளைத் தவிர பேங்கில் பணம் டெபாசிட் செய்யும் ஒரு இனத்தைக் காண்பியுங்கள் பார்க்கலாம்!
என்னதான் மிதமிஞ்சிய பணமிருந்தாலும் மற்ற துறைகளில்தான் முதலீடு செய்வார்களே ஒழிய! குறைந்தவட்டிக்கு வங்கியில் முதலீடு செய்யமாட்டார்கள்!!
எங்களுக்கும் காலம் வரும்! காலம் வந்தால் வாழ்வு வரும்! வாழ்வு வந்தாலும் வராவிட்டாலும் புலம்பிகிட்டேவாவது அனைவரையும் வாழவைப்போமே!!

விட்டமின் ‘D’ யைக் கூட அதிகமாகச் சேர்த்து நாம் காக்கப்படுகிறோம் என்ற போலியான தகவலைக் கூறி தன் விற்பனையை துவங்கியுள்ளது ஒரு சமயல் எண்ணெய் நிறுவனம். அடேய் முட்டாள்களா விட்டமின் ‘D’ யும் ‘சி’ யும் இயற்கையாகவே மணத்தக்காளிக் கீரையில் உள்ளன. இயற்கையாகக் கிடைப்பதைப் பயன்படுத்துவது கேவலம் என்றும், செயற்கையானதைப் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் சமூகமே நாளை உன் சமூகம் வாழ்க்கை முழுவதும் மருத்துவமனையைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கும். இனியாவது திருந்துங்கள் செயற்கையாக சேர்க்கப்படும் விட்டமின்களால் பக்க விளைவே தரும் இயற்கையாகக் கிடைக்கும் உணவின் மூலம் கிடைக்கும் விட்டமினே உடலுக்கு நன்மை தரும், நாளை உன் தலைமுறை வாழ்வதும் சாவதும் உன் கையில் தான் உள்ளது.

வெங்காயம் விலை உயரத் தொடங்கிவிட்டது. வைகாசியில் விலை உச்சத்தில் இருக்கும். இந்த பட்டத்தில் 60 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். அளவாக பயிர் செய்யுங்கள். ஆவணி 15 க்கு மேல் புரட்டாசி பிறக்குமுன் முடிந்த அளவுக்கு பயிர் செய்யுங்கள். நல்ல வடிகால் வசதி அவசியம். இது அறுவடைக்கு வரும்போது நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பயிர்ப்பாதுகாப்பு :

சூடாமோனாஸ் + டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி நடவு செய்யுங்கள்.
நடவு வயலில் இந்த உயிர் உரங்களையும் மக்கிய தொழு உரத்துடன் கலந்துத் தூவிவிடுங்கள். நன்கு தழைத்தவுடன் வார இடைவெளியில் ஒரு டேங்கிற்கு 100 கிராம் சூடோமோனாஸ் + ஒரு லிட்டர் புளித்த மோர் கலந்து தெளியுங்கள்.
பஞ்சகவியம், மீன்பாகு இரண்டும் நல்ல விளைச்சலுக்கு உதவும். வெங்காயத்தின் வேர் மேலாக இருப்பதால் கைக்களையே சிறந்தது. ஜீவாமிர்தம் ஒவ்வொரு பாசனத்துடனும் கலந்து விடுங்கள்.

குழந்தைகளுக்கு மாசற்ற உணவுகொடு,
மரத்திற்கு மனதார உரமிடு.

பார்ப்பதற்கு ஏதும் செய்யாதது போல இருந்தாலும் வேர் முதல் உச்சி வரை பரவி மரப்பட்டைகளைத் தின்று நீரோட்டத்தையும் குறைத்துவிடும். கோடை காலத்தில் அதிகளவில் காணப்படும் இந்த கரையானை கட்டுப்படுத்த 1 சதம் சுண்ணாம்புக் கரைசல் அதாவது 1 லிட்டர் தண்ணீரில் 10 கிராம் சுண்ணாம்பை கரைக்க வேண்டும். அதனை மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து குறைந்தபட்சம் மூன்றடி உயரத்திற்கு பூசிவிட வேண்டும். பின்பு சுண்ணாம்புப் பகுதியை மீறி அதனால் எளிதில் சென்றுவிட முடியாது.

இந்த எலி இருக்கிறதே சுவையான உணவுகளைத் தேடித்தான் போகும். இன்று எந்த வழியில் போகிறதோ நாளையும் அதே வழியில் தான் போகும். பக்கத்தில் நிறையத் தென்னை மரங்கள் இருந்தாலும் தினமும் ஒரே மரத்திலேயே தினமும் ஒரு இளநீராகப் பறித்துக் கொறித்துக் குடித்துக் கொண்டிருக்கிறது எலி. இப்படியே விட்டா என் பாடு திண்டாட்டமாகிவிடும் என்று புலம்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் பக்கத்துக் தோட்டத்து மாமா வழியில் வந்தவராய் என்ன மாப்ள புலம்பல் என்றார், நான் காரணத்தைச் சொன்னேன். உடனே ‘எண்ணிச்செய்யறது செட்டு ( வியாபாரம்), எண்ணாமச் செய்யறது வெள்ளாமை’ என்ற பழமொழியைக் கூறிக் கொண்டே ஒரு தென்னை ஓலையை மரத்தில் கட்டி விட்டு, நாளை புது இளநி இருந்தா எங்கிட்ட வந்து சொல்லு என்று கூறிவிட்டுப் போனார்.

ஒரு வாரம் பார்த்தேன். கொறித்த இளநீர் விழவில்லை. பக்கத்துத் தோட்டத்து மாமனைப் போய் பார்த்து “ என்ன மாமா, என்ன மந்திரம் ஓதுனீக ஒரு இளநியும் விழலையே” என்றேன். அதற்கு அவர், “ஏடு படிச்ச மாப்ள, எலி தினமும் வந்த வழியாத்தான் வரும். பழக்கப்பட்ட வழியில குச்சி கோள் இருந்தா பொறி வச்சிருக்காங்கன்னு குச்சி கோள சுத்தி வரும். தென்ன மரம் வட்டமா இருக்கறதால சுத்திச்சுத்தி வரும் ஆனா ஓலையத் தாண்டாது பொறி வச்சிருக்காங்கனு ஓடிடும்” என்று விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து இளநீர் கொறித்துக் கீழே கிடந்தால் இந்த வைத்தியம் தான்.
குருமார்களை வெளியே தேடவேண்டாம் அருகிலேயே இருக்கிறார்கள்…

குளோரின் கலந்த உயிர்க் கொல்லிகள் பருந்து போன்ற பறவைகளின் முட்டை ஓட்டையும் மென்மையாக்கிவிடுவதால் அடைகாக்கும் பொழுதே உடைந்து சேதமாகிவிடுகின்றது.
விளக்கம் : பூச்சிக்கொல்லிகள் பருந்தின் உடலில் தங்குவதால் கல்லீரல் என்ஸைம் அதிகமாய்ச் சுரப்பதுதான். இவை பெண் பறவைகளின் இனப்பெருக்கத்திற்குத் துணைபுரியும் ஈஸ்ட்ரோஜென் என்னும் சேர்மம் சுரப்பதைக் கட்டுப்படுத்துகின்றன. ஈஸ்ட்ரோஜென்கள் பறவைகளின் எலும்பிலிருந்து முட்டை ஓட்டிற்குக் கால்ஸியம் செல்வதை ஊக்குவிக்கக் கூடியவை ஆகும். இவற்றின் அளவு குறைந்தால் மெல்லிய ஓடுகளை உடைய முட்டைகள் தோன்றும்.

மரமில்லா வாழ்க்கை மரண வாழ்க்கை.

இறவை மணிலாச் சாகுபடியில் புரோடீனியாப்புழுவிடம் இருந்து பாதுகாப்பு
வயலைச்சுற்றிலும் மாலை நேரத்தில் நீல நிறத் துணிகளைப் போட்டு வைத்தாலும், இந்தப் புழுக்கள் அந்தத் துணிகளில் கூட்டம் கூட்டமாய் வந்து அடையும். காலையில் அவற்றைக் சேகரித்து அழித்துவிடலாம்.
புழு மற்றும் பூச்சிகளை அழிப்பதற்கு ஊடுபயிர்ச் சாகுபடியும் பெருமளவுக்குப் பயன்படுகிறது.கம்புச் சாகுபடி செய்யும் போது மணிலாப்பயிரைச் சுருள் பூச்சியும், துரு நோயும் தாக்குவதில்லை.

குரல்

அதிக விளைச்சலுக்குச் சூரிய ஒளி முக்கியம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் தை, மாசி மாதங்களில் அறுவடைக்கு வருவது போல விதைப்புப் பருவத்தைத் தேர்வு செய்தார்கள். “ஆடிப் பட்டம் தேடி விதை” என்று சொல்லி வைத்தார்கள்.

பருவிதைப் பயிர்களை ( சோளம், கடலை, நெல் ) முன் மழையில் விதைத்தார்கள். பொடி விதைப் பயிர்களை ( கம்பு, எள் ) மழை முடியும் போது விதைத்தார்கள். பல்லுயிர் பெருக்கமே நமது வரலாறு.

கோ.நம்மாழ்வார்.
குரல் ஒலிக்கும்…

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →