வங்கிச் சேவையில் குறைபாடு – இழப்பீடு தர கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

vah5tzepவங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் எனக்கூறி, வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பிடித்தம் செய்த வங்கி, வாடிக்கையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்  என, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.  இவர் கடந்த 2004 ல் நகை அடமானக்கடன் பெற, அதே பகுதி எஸ்.என்.ஆர். சாலையில் செயல்படும் தனியார் வங்கிக்குச் சென்றுள்ளார்.  நகைக்கடன் பெற, வங்கிக்கணக்குத் துவங்க வேண்டும் என, வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியதுடன், 500 ரூபாய் இருப்பில் சேமிப்புக் கணக்கு ஒன்றையும் ஜெயராமன் பெயரில் துவங்கித் தந்தது. ஐந்து மாதங்கள் கழித்து, 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையைத் தன் கணக்கில் செலுத்தினார்.  ஆனால் இருப்பில் 500 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது.  “கணக்கில் பணம் இல்லை 40 ஆயிரம் ரூபாய் மட்டும் உள்ளது.  குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாததால், பணம் பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாக ”வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெயராமன் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், விளக்கம் கோரி கடிதம் அனுப்பினார்.  அதற்குப் பிந்தைய காலத்திலும் வங்கி சார்பில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டிருந்தது.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குறைகேட்புக் கூட்டத்தில் ஜெயராமன் முறையிட்டார்.வங்கி சார்பில் அனுப்பப்பட்டவிளக்கத்தில், குறைந்தபட்ச இருப்பாக 1000 ரூபாய் இருக்க வேண்டும் இல்லாவிட்டால், இருப்புக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், இவ்விதிமுறை குறித்து வங்கி நிர்வாகம் முன்னரே தெரிவிக்கவில்லை என்றும், மேலும் சில காரணங்களை உள்ளடக்கியும் ஜெயராமன் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் முறையிட்டார்.  மன உளைச்சலுக்கு இழப்பீடாக ஐந்து லட்சம் ரூபாய் கோரி இருந்தார்.

மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர்மன்றம், “நகைக்கடனுக்காக வங்கிக் கணக்கு துவக்க வேண்டும் என்ற விதி இல்லாதபோதும் வற்புறுத்தியது.  குறைந்தபட்ச இருப்புத்தொகை பற்றியும், தவறும் பட்சத்தில் கட்டணம் பற்றியும் ரிசர்வ் வங்கி விதிமுறைகள் எதுவும்கூறாத நிலையில், வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பிடித்தம் செய்தது சேவைக்குறைபாடு” எனத் தீர்ப்பளித்தது.இதையடுத்து , வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு ஈடாக, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்குச் செலவுக்காக 1,000 ரூபாயும் வாடிக்கையாளருக்கு இரண்டு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

About வழக்கறிஞர் A K ராஜேந்திரன்

View all posts by வழக்கறிஞர் A K ராஜேந்திரன் →