வெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்

a50vl20cஇந்தியாவில் பல்வேறு வகையான காய்கறிப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.  அவற்றுள் வெண்டைப் பயிர் முக்கியமான பயிராகக் கருதப்படுகின்றது.  ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட பூச்சிகளால் வெண்டை தாக்கப்படுகின்றது.  வெண்டையைத் தாக்கும் முக்கிய பூச்சிகளில் காய்த் துளைப்பான், சாறுஉறுஞ்சும் பூச்சிகளும் அடங்கும்.  இவற்றுள் துளைப்பான்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.  ஏனெனில், இவ்வகைப் பூச்சிகள் அதிகப்படியான, விளைச்சல் இழப்பை ஏற்படுத்துகின்றன.

துளைப்பான்கள், தண்டு மற்றும் காய்ப்புழு

இரியாஸ் விட்டெல்லா, இரியாஸ் இன்சுலானா

சேதத்தின் அறிகுறிகள்

இப்புழுக்கள் இளம் குருத்துப் பகுதியில் துளையிட்டு உண்ணும், பின்பு இளங்குருத்து வாடித் தொங்கும்.  இதனால் மொக்கு மற்றும் பூக்கள் உதிர ஆரம்பிக்கும். புழுக்கள் காய்களுக்கு உள்ளே துளைத்திட்டு விதைகளை சாப்பிடும்.  இப்பூச்சிகள் தாக்குதல் தீவிரமாகும் போது காய்கள் உருக்குலைந்து காணப்படும்.

பூச்சிகள் விபரம்

இரியாஸ் விட்டெல்லா

பூச்சியின் முட்டை நீல நிறமாகவும், மேற்புறம் வரிக்கோடுகளுடன் காணப்படும்.  புழுக்களின் மீது பழுப்பு நிற உடலின் மேற்பரப்பில் நீண்ட, வெள்ளைக் கோடுகள் காணப்படும்.  இந்தப் பூச்சியின் முன்னிரண்டு இறக்கைகளும் பச்சை வண்ணத்தின் இடையே வெண்மை நிற பட்டைக் கோடுகள் காணப்படும்.

இரியாஸ் இன்சுலானா

இதன் புழுக்கள் பழுப்பு நிறமாகவும், உடலின் மேற்புறத்தில் பெரும் பகுதி வெண் மஞ்சளாகவும் காணப்படும்.  விரல்கள் போன்று சிறிய நீண்ட குழல் போல் உறுப்புகளையும் மற்றும் ஆரஞ்சு நிறப்புள்ளிகளையும் பெற்றிருக்கும்.  இது கூட்டுப் புழுப் பருவத்தில் படகு வடிவில் இருக்கும்.  முதிர்ந்த அந்துப் பூச்சியின் முன் இறக்கை முழுவதும் பச்சை நிறமாக இருக்கும்.

அமெரிக்கன் காய்ப்புழு – யஹலிகோவெற்பா ஆர்மிஜிரா

சேதாரத்தின் அறிகுறிகள்

தாய் அந்துப்பூச்சி முட்டைகளை இளம் இலையின் மேற்பரப்பில் தனித்தனியே இடுகின்றன.  இளம் புழுக்கள் இளந்துளிர்களை உண்ணும்.  புழுக்கள் பச்சை அல்லது மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் முதுகில் கோடுகளுடன் காணப்படும்.  முதிர்ந்த புழுக்கள் வட்ட வடிவில் காயினைத் துளைத்து தலைப்பகுதியை உட்செலுத்தி உடலின் பாதிப் பின்பகுதியை வெளியே வைத்துக் கொண்டு சாப்பிடும்.  தாய் அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இறக்கையில் கரும் புள்ளிகளுடன் காணப்படும்.  இப்புழுக்கள் காயினைத் தாக்கிப் பெரும் சேதத்தை உருவாக்குகின்றன.

இலைச்சுருட்டுப் புழு

சேதத்தின் அறிகுறிகள்

இப்புழுக்களின் உடல் பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும்.  தலை பாகம் மற்றும் நெஞ்சறை முன்பாகம் கருப்பாக இருக்கும்.  இலைகள் புழுவின் உமிழ் நீரினாலான நூலினால் சுருட்டி அதற்குள் புழு இருந்து
கொண்டு பச்சையத்தைச் சுரண்டித் தின்னும்.  இப்பூச்சியின் தாக்குதல் தீவிரமாகும் போது செடியிலுள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்தது போல் தோற்றமளிக்கும்.

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகள்

இலைகளின் மேற்பரப்பில் உள்ள முட்டைத் தொகுதிகளையும், கூட்டுப்புழுக்களையும் கண்டெடுத்து அழிக்க வேண்டும்.  மண்ணைக் கிளறி விடுவதன் மூலம் கூட்டுப் புழுக்களை வெளிக் கொணர்ந்து அழிக்க வேண்டும்.

ஒரு எக்டருக்கு 12 யஹலிக்கோ வெர்பா இனக் கவர்ச்சிப் பொறிகள் அமைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அழிக்கலாம்.

மாலை வேளைகளில் 7 மணி முதல் 11 மணி வரையில் ஒரு எக்டருக்கு 5 விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அழிக்கலாம்.

எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் (வீ வடிவ குச்சி) அமைத்து இறை விழுங்கிகளை ஊக்குவித்தல்.

ஐந்து சத வேப்பங்கொட்டைக் கரைசல் அல்லது மூன்று சத வேப்பெண்ணையை ஒட்டு திரவத்துடன் கலந்து பூ, காய் பிடிக்கும் தருணத்தில் தெளித்து காய்ப்புழுவால் ஏற்படும் சேதத்தினைக் குறைக்க வேண்டும்.

முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா கைலோனிஸ் எக்டருக்கு 50,000 எனும் அளவில் வாரம் ஒரு முறையாக 6 முறை விட வேண்டும்.

சாறு உறுஞ்சும் பூச்சிகள், வெள்ளை ஈ

சேதத்தின் அறிகுறிகள்

சாறு உறிஞ்சப்பட்ட இலைகள் மீது முதலில் வெண் புள்ளிகள் தோன்றிய பிறகு அவை ஒன்றாக இணைந்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்.  கடுமையாகத் தாக்கப்பட்ட செடிகளில் முதிரா நிலையில் இலைகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.  பூச்சிகளால் சுரக்கப்படும் தேன் போன்ற திரவத்தால் கரும்புகைப் பூசணத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.  நரம்பு வெளிர்த்தல் மஞ்சள் நரம்பு தேமல் நோயை வெள்ளை ஈ பரப்புகின்றது.

தத்துப் பூச்சி

சேதத்தின் அறிகுறிகள்

பூச்சி தாக்கப்பட்ட இளம் இலைகள் மஞ்சளாக மாறிவிடும்.  இலைகளின் ஓரங்களில் கீழ் நோக்கிச் சுருங்கி காணப்படும்.  அதன் உட்புறம் சிவப்பு நிறமாகத் தோன்றும்.  இவ்வாறு தாக்கப்பட்ட இலையைக் கசக்கும் பொழுது அதன் ஓரங்கள் பொடிப்பொடியாக நொறுங்கிவிடும்.  இதன் தாக்குதல் தீவிரமாகும் போது செடிகளின் வளர்ச்சி குன்றிக் காணப்படும்.

சிவப்புச் சிலந்தி

சேதத்தின் அறிகுறிகள்

இவ்வகை சிலந்தி இலைகளில் வெண்புள்ளிகள் தோன்றிய பின்பு தாக்கப்பட்ட இலைகள் செம்பழுப்பு மற்றும் வெண்கலர் நிறமாக மாறும்.  மிக மோசமாகத் தாக்கப்பட்ட செடிகளில் உமிழ்நீரால் இலைகள் பின்னப்பட்டு தவிடு தெளித்தது போன்றும் காணப்படுவதால் இலைகள் உதிர்ந்துவிடுகின்றன.  இதனால் பூக்கள் மற்றும் காய்கள் உருவாவது பாதிக்கப்படுகின்றது.

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகள்

மஞ்சள்த் தேமல் நோய் தாக்கப்பட்ட செடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

எக்டருக்கு 12 மஞ்சள் ஒட்டும் பொறி வைத்து முதிர்ந்த பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

மாலை நேரங்களில் 7 மணி முதல் 11 மணி வரை எக்டருக்கு ஐந்து விளக்குப் பொறிகள் வைத்து பூச்சிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து அழிக்கலாம்.

இதனை கட்டுப்படுத்த வேப்பெண்ணைய் 3மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

வெண்டையைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி விளைச்சலைப் பெருக்கி உயர் வருமானம் பெறலாம்.

கட்டுரையாளர்கள் தொடர்புக்கு :
ஆர்.வி.எஸ் வேளாண் அறிவியல் மையம்,
ஊர்மேலழகியான் கிராமம், ஆய்குடி அஞ்சல்,
தென்காசி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
 தொலைபேசி எண்.04633 – 292500.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →