திடக் கழிவு மேலாண்மை. – என் குப்பை, என் பொறுப்பு.

derk06jvநம் நாட்டின் சுகாதார நிலை என்ன? இதற்கு யார் பொறுப்பு? பதில் பொது மக்களாகிய நம்மிடம் தான் உள்ளது என்கிறது கோவையில் ஓர் இளைஞர் படை. இளைஞர்கள் நம் நாட்டின் பலம் மட்டுமல்ல, முன்னுதாரணமாகச் செயல்படக் கூடியவர்கள் என்றும் நிரூபித்து வருகின்றனர். கோவை மாநகராட்சிப் பகுதியில் திடக் கழிவு மேலாண்மையைச் செயல்படுத்தும் இளம்தலைமுறை பொறியியல் பட்டதாரி இளைஞர்கள்.

இளைஞர் படை

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழியிருக்கு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத்தான் ஆர்வலர்கள் தேவை. அதனால்த் தான் இத்துறையைத் தேர்ந்தெடுத்தோம் என்கிறார் 23 வயதே ஆன இளம் பொறியியல் பட்டதாரி சரண் ராஜ் அவர்கள். நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த நான், அவினாசியில் தனியார் பொறியியல் கல்லூரியில் 2014ம் வருடம் பட்டம் பெற்றேன். சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திரு. பிரசாந்த் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் 2014ம் வருடம் பட்டம் பெற்ற பொறியாளர் ஆவார். நாங்கள் இருவரும் பள்ளி கால நண்பர்கள், சமீபத்தில் எங்களுடன் இணைந்த திரு. கணேஷ் கார்த்திக் மற்றும் திரு. பரத் அவர்களும் கோவை தனியார் கல்லூரியில் பி.டெக் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களே. மேலும், திரு. நவீன் குமார் மற்றும் திரு. சதீஸ் குமார் என எனது பொறியியல் கல்லூரி இருநண்பர்களும் எங்களுடன் இணைந்து உள்ளனர். குடோனில் சுமார் 15 இளம்தலைமுறைப் பட்டதாரிகள் இத்துறையில் ஈடுபட்டுள்ளோம் என்று குழுவின் அறிமுகம் தந்தார்.

எனக்கும் (சரண் ராஜ்) பிரசாந்துக்கும், சிறுவயது முதலே இயற்கையைப் பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. இயற்கைக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் திடக் கழிவு மேலாண்மையில் ஈடுபடத் தொடங்கினோம். திடக் கழிவு மேலாண்மைப் பயிற்சியினை எங்கள் குருவான திரு. சுரேஷ் பண்டாரி அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டோம்.

திரு. சுரேஷ் பண்டாரி அவர்கள் ‘கீளின் சிட்டி பவுண்டே­னின்’ (ஆந்திர மாநிலம்) தலைமைப் பொறுப்பாளர். தற்போது கோவை மாநகராட்சியின் திடக் கழிவு மேலாண்மைத் திட்ட ஆலோசகர் மற்றும் Push Cart ஐ அறிமுகம் செய்தவரும் ஆவார். Push Cart என்பது குப்பைகள் சேகரிக்கும் தள்ளு வாகனம், இதில் 14 வகையான குப்பைகள் பிரிப்பதற்கு வழிவகை செய்யப்படும். முன்பக்கம் 4 பின் (தொட்டி), பின்பக்கம் 6 பைகள் + கூடுதலாக சில பைகளும் வைத்துக் கொள்வது போல் வாகனத்தில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். இதனால் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் குப்பைகள் சேகரிக்கும் பொழுதே குப்பைகள் தரம் பிரித்துக் கொட்டப்படும்.

கோவை மாநகராட்சியின் கமி­னர் திரு. விஜய கார்த்திகேயன் அவர்களும் எங்களுக்கு ஆதரவு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. உரிய பயிற்சிகள் முடித்த பின்பு சுமார் 1 1/2 வருடங்களாகக் கோவை மாநகராட்சின் பல பகுதிகளில் திடக் கழிவுகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.

என் குப்பை, என் பொறுப்பு

தற்போது கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 5 அப்பார்ட்மெண்ட்களிலும், விமான நிலையத்திலும், சில வார்டுகளிலும் குப்பைகளைச் சேகரிக்கும் பணியைச் செய்து வருகிறோம்.

பீளமேடு பகுதியில் இருக்கும் பன் மாலிற்குப் பின் புறம் சன்னி சைடு என்கிற அப்பார்ட்மெண்டில் சுமார் 248 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு கழிவுகளைச் சேகரிக்க ஒரு கியாஸ்க் (Kiosk) மேனேஜர், காலை 9 மணி முதல் 11 மணி வரை தரம் வாரியாக பிரித்து கொடுக்கப்படுவதை ஒன்றாகச் சேர்த்து எங்கள் வாகனத்தில் ஏற்றிவிடுவார். இங்கு இருப்பவர்களுக்கு நாங்கள் வலியுறுத்துவது குப்பைகளை மூன்று தரமாகப் பிரித்து வழங்கவேண்டும் என்பதே.

ஆர்கானிக் குப்பைகள் (மக்கும் குப்பை)
இன் ஆர்கானிக் குப்பைகள் (மக்காத குப்பை – பிளாஸ்டிக் பொருட்கள்), மற்றும் அபாயகரமான கழிவுகள் (சானிடரி நாப்கின்…)

இதைத்தான் என் குப்பை, என் பொறுப்பு என்று சொல்கிறோம் என்றார்.

இதற்காக ஒவ்வொரு குடியிருப்பிலும் 2 குப்பைத் தொட்டிகள் (சொந்தச் செலவில்) வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் 1 பாலித்தீன் பையை நாங்கள் கொடுத்துவிடுவோம். 2 குப்பைத் தொட்டியிலும் தனித்தனியாக ஆர்கானிக் மற்றும் இன் ஆர்கானிக் சேகரிப்பதற்கும், பாலித்தீன் பையை அபாயகரமான கழிவுகளைச் சேகரிப்பதற்கும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தை மீறும் குடியிருப்பில் இருந்து நாங்கள் குப்பைகளைச் சேகரிக்க மாட்டோம். இந்த கருத்துப்படிவம் பெங்களுரில் ஒருவரால் தொடங்கப்பட்டது. குப்பைகள் சேகரிப்பதில் பணப்பரிவர்த்தனை எதுவும் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திடக் கழிவுகள்
கழிவுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் நச்சுக் கழிவு என்று மூன்று வகையாகத் தரம் பிரிக்கலாம். மக்காத குப்பை மற்றும் நச்சுச் கழிவு இரண்டையும் அழிப்பதே சவாலான காரியம் என்கிறார். மக்காத குப்பை என்பது ஞெகிழி (Plastic).

ஆர்கானிக் கழிவுகள்
ஆர்கானிக் கழிவுகளை விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாய நிலங்களுக்கு இலவசமாகக் கொண்டு சேர்த்து வருகிறோம். இக்கழிவுகளைக் கொட்டிப் பரப்பி விட்டால் மூடாக்காக செயல்படுவதோடின்றி மண்ணோடு மண்ணாக மக்கி, சிறந்த உரமாகிவிடுகிறது. காலை 9 மணிக்குக் கழிவுகளைச் சேகரிக்கத் தொடங்கி 11 மணிக்கு பணி முடிந்தவுடன் மாலை சுமார் 4 மணிக்குள் பண்ணை நிலங்களுக்குக் கொண்டு சேர்த்து விடுவோம். ஆர்கானிக் கழிவுகள் சேகரிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் விவசாய நிலங்களுக்குக் கொண்டு செல்வது மட்டுமே சாத்தியப்படுகிறது. இந்தக் குப்பைகளைக் கொட்டியதும் சிறு உயிரினங்கள் மற்றும் பறவைகள் வந்து குவிவதைக் கண்டு இயற்கைக்கு உணவு கொடுப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

தொலைவில் உள்ள விவசாயிகள் இது போன்ற ஆர்கானிக் கழிவுகள் தேவைப்படுபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இலவசமாகவே வந்து எடுத்துச் செல்லலாம் என்கிறார். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு நாளைக்கு சுமார் 250 கிலோ வரை சேகரிக்கப்படும் ஆர்கானிக் கழிவுகளை விவசாய நிலங்களுக்குக் கொண்டு சேர்த்து வருகிறோம். மேலும், வார்டுகளில் சேகரிக்கப்படும் ஆர்கானிக் கழிவுகள் கோவை மாநகராட்சியின் வெள்ளலூர் கிடங்கிற்கு மண்புழு உரம் தயாரிப்பதற்குச் செல்கிறது என்கிறார். அதிகமாக சேகாரமாகும் தினங்களன்று ஆர்கானிக் கழிவுகளை நஞ்சுண்டாபுர எரியூட்டு மையத்திற்கு (மின்சாரத்திலும் பயோ கேஸ் மூலமாகவும் எரிவூட்டு மையம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது) பயோ கேஸ் பயன்பாட்டிற்குக் கொடுத்து வருகிறோம்.

மறுசுழற்சி ஞெகிழி
மறுசுழற்சி செய்யக் கூடிய ஞெகிழிகளைத் தனியாகப் பிரித்து சிறு வியாபாரிகளுக்கு விற்று வருகிறோம். தரம், தனியாகப் பிரித்துக் கொடுத்தல்… போன்றவைகளின் மூலமே இதில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 5 அடுக்குமாடிக் அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளிலிருந்தும் சுமார் 100 கிலோ வரையும், வார்டுகளில் இருந்து மாதம் தோறும் சுமார் 4 முதல் 5 டன் வரையும் கழிவுகள் சேகாரிக்கப்படுகின்றன. இதில் தரம் பிரித்து மறுசுழற்சி ஞெகிழி என்று பார்த்தால் குறைவாகவே இருக்கும். ஆகவே, தற்போதுள்ள சூழ்நிலையில் வருமானம் என்று ஒன்றுமில்லை, இத்துறையில் நிலைக்கவே தற்போதுள்ள பொருளாதாரச் சூழல்நிலை இருந்து வருவதாகக் கூறுகிறார்.

மறுசுழற்சி ஞெகிழியிலிருந்து பல பொருட்களைத் தயாரிக்க முடியும். உதாரணமாக: பால் கவர்களை, ஞெகிழி – நாற்காலிகள், நீர் தேக்கத் தொட்டி போன்றவைகளையும், பெட் பாட்டில்களை மீண்டும் பெட் பாட்டில்களாகவும், பாலிஸ்டர்களாகவும், ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கவும் பயன்படுகிறது. பாலிஸ்டர் என்பது ஞெகிழியே, ஜீன்ஸ் பேண்ட் பருத்தியில் இருந்து உருவாக்கப்படுவதில்லை என்றும் அது பாலிஸ்டர் என்றும் கூறினார்.

ஆரம்ப காலங்களில் மறுசுழற்சி ஞெகிழிகளை விற்பதில் சிரமம் இருந்தது. சரிவர வியாபாரிகளைப் படிக்க முடியாமல் திணறினோம். உக்கடம் பழைய மார்க்கெட்டில் சுற்றித்திரிந்தோம், பின்பு படிப்படியாக கற்றுத்தெரிந்து கொண்டோம்.

மறுசுழற்சி செய்ய முடியாத ஞெகிழிகள்
இதற்கு உதாரணமாகப் பிஸ்கட் கவர், சிப்ஸ் கவர்…பற்பசை அடைப்பான்… போன்றவைகளில் இரண்டு முதல் மூன்று வகையான பூச்சுகளுடைய ஞெகிழிகள் இணைக்கப்பட்டிருக்கும். டூத் பிரஷ்களிலும் இரண்டு முதல் முன்று பூச்சுகளுடைய ஞெகிழிகளைக் காணமுடியும், இவை பிவிசி மெட்டீரியல் இவைகளில் இருந்து மறுசுழற்சி செய்ய இயலாது காரணம் அதிக செலவு. புதிய ஞெகிழியிலிருந்து தயாரிப்பதை விட மறுசுழற்சி முறையில் இருந்து புதிய பொருட்களைத் தயாரிப்பதில் செலவு அதிகம் என்கிறார்.

இந்த ஞெகிழிகளை இரண்டு வகையாகப் பயன்படுத்தலாம்.
1. சாலை அமைக்கும் பணியில் பயன்படுத்தலாம் – தாருடன் ஞெகிழியைச் சேர்த்து சாலை அமைப்பது. மதுரை தியாகராஜர் கல்லூரியின் பேராசிரியர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் இது. பல இடங்களில் சோதனை முயற்சியில் வெற்றியடைந்து நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2. ஞெகிழியை மீண்டும் கச்சா எண்ணெயாக மாற்றுவது. Closed furnace மூலம் பிராணவாயு இல்லாமல் டயர், ரப்பர் மற்றும் ஞெகிழியை வெப்பத்தில் உருக்கும் போது கச்சா எண்ணெயாக மாற்ற முடியும். இந்தச் செயல் நடைபெறும் போது மீத்தேன் உருவாகும், இந்த மீத்தேனையே எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த கச்சா எண்ணையை வாகனங்களுக்குப் பயன்படுத்த இயலாது. ஆனால், பாய்லர், ஜெனரேட்டர்… போன்றவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
இலக்கு
நாளொன்றுக்கு 15 டன் மறுசுழற்சி ஞெகிழிகளை கிடங்கிற்கு செல்வதைத் தடுக்க வேண்டும். தற்போது 5,000 வீடுகளில் குப்பைகளைச் சேகரிக்கிறோம், இதை 25,000 வீடுகளாக மாற்றத் திட்டமிட்டு வருகிறோம். மாதம் 30 டன் மறுசுழற்சி செய்ய முடியாத ஞெகிழிகளை ACC நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். இதனால் வெள்ளலூர் கிடங்கிற்குக் குப்பைகள் போவது குறையும். வெள்ளலூர் கிடங்கிற்குக் குப்பைகள் செல்லாமல் இருப்பதற்கு இது போன்ற பணிகளை நாங்கள் தொடங்கி உள்ளோம் என்றார்.

எங்கள் குழுவில் 22 பட்டதாரிகள் உள்ளோம். 3 பேர் நிர்வாகம் கவனித்துக் கொள்வோம். 2 நபர்கள் போக்குவரத்துக்கு, விமான நிலையத்தில் 3 நபர்கள், குடோனில் தரம் பிரிப்பதற்கு 10 நபர்கள் மீதம் உள்ளவர்கள் சுழற்சிமுறையில் பணிகளைத் தொய்வில்லாமல் செய்து வருவதைக் கவனிப்பார்கள் என்றார். இன்னும், எங்களுடன் இணைய பட்டதாரிகள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நிதி உதவி
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ACC (The Associated Cement Company) நிறுவனம் எங்களுக்குப் பக்கபலமாக நிதி உதவி செய்து வருகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கழிவுகளை எடுத்துச் செல்வதற்கு எலக்ட்ரானிக் (பேட்டரி) வாகனம் ரூபாய் 1,30,000/- செலவில் வாங்கிக் கொடுத்துள்ளனர். கியாஸ்க், அபாயகரமான கழிவுகளைச் சேகரிப்பதற்காகக் குடியிருப்புகளுக்குக் கொடுக்கக் கூடிய பாலித்தீன் பைகள் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத ஞெகிழிகளை கிலிங்கரிங்கில் (Clinkering) பஸ்பமாக்கப்படுகின்றது. ளீயிஷ்ஐவerஷ்ஐஆ என்பது சுமார் 1800 டிகிரி வெப்பமூட்டி (Clinkering) அதில் சிமெண்ட் உற்பத்தி செய்யும் பணி நடைபெறும். இதன் மூலம் மறுசுழற்சி செய்ய முடியாத ஞெகிழிகளை அழிப்பதால் டயாக்ஸின் என்னும் நச்சுப் புகை குறைவாகவே வெளியேறுகிறது. சானிடரி கழிவுகளை இம்முறையில் தான் அகற்றுகிறோம். cement furnace யை விட இது பாதுகாப்பான முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குடோனில் பணிபுரிவோருக்குப் பொருளாதார உதவியினையும் வழங்கி வருகின்றனர்.

மேலும், Prophel Manufacturing Engineering மற்றும் RAAC (தன்னார்வ அமைப்பு) ஆகியவை இணைந்து மற்றொரு எலக்ட்ரானிக் வானகம் ரூபாய் 1,00,000/- செலவில் வாங்கிக் கொடுத்துள்ளனர். எலக்ட்ரானிக் வாகனங்கள் 6 மணி நேரம் சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்லலாம். அதிகபட்சமாக 30 கிலோ மீட்டர் வேகத்திலும், சுமார் 750 கிலோ எடை வரையும் எடுத்துச் செல்லக் கூடியது. வரதராஜபுரத்தில் குப்பைகள் பிரிக்கும் குடோனைக் கோவை மாநகராட்சி வழங்கியுள்ளது.

ஆரம்ப காலங்களில் எங்களுக்கு ஆதரவு தர பெற்றோர்கள் தயங்கினார்கள், தற்போது இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, எங்கள் சேவைக்கு ஆதரவு தருகின்றனர்.

திருமதி ரூபா பிரசாந்த் அவர்கள் சன்னி சைடு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். எங்களுக்கு இங்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதும் அவர் தான், மேலும் no dumping திட்டத்திற்காக பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். ஜி.வி ரெசிடென்சியில் திரு. ரவீந்திரன் அவர்கள் (RAAC – President) முயற்சியில் அங்கு சேகரிக்கப்படும் ஆர்கானிக் கழிவுகள் கம்போஸ்ட்டாக மாற்றிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சி.ஆர்.ஐ பம்ப் மற்றும் no dumping இருவரும் இணைந்து கோவையில் 20வது வார்டை (சரவணம்பட்டி பகுதி) தத்தெடுக்கப் போகிறோம். இப்படிப் பல கரங்கள் எங்கள் முயற்சிக்கு வலுசேர்க்கின்றன, என்றார் நெகிழ்ச்சியுடன்.

வாகை சூடும் இளைஞர் படையை வாழ்த்துவோம்.

மேலும் தொடர்புக்கு,

திரு. கணேஷ் கார்த்திக்
98428 01762

www.nodumping.in
www.facebook.com/nodumpingmywastemyresponsibility

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →