உள்ளத்திலிருந்து…

ojz16cjb“வந்தே மாதரம் என்போம் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்”
– பாரதியார்.
ஆகஸ்டு மாதம் என்றாலே புரட்சி மாதம் என்று பெயர். 1942 – ல் ஆகஸ்டு மாதத்தில் தான் ‘வெள்ளையனே வெளியேறு’’என்ற இயக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதனால் அது புரட்சி மாதம் எனப்பட்டது. அன்று துவங்கிய இப்புரட்சி 1947ல் சுதந்திரம் பெறப்பட்ட பிறகும்  தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

விவசாயம் – பசுமைப் புரட்சி, பால் – வெண்மைப் புரட்சி, மீன்வளம் – நீலப்புரட்சி எனப் பல புரட்சிகள் செய்து மாநிலத்தாயை நாம் வணங்கிக் கொண்டிருக்கிறோம். இப்புரட்சிகளையயல்லாம் நமது‘‘கோவை வணிகம்’’செய்து கொண்டு நாட்டுக்குத் தன் பணியைச் செய்து கொண்டிருக்கிறது.

இன்று கோவை வணிகம் தொழில், விவசாயம், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றிற்காக இயற்கை வேளாண்மை, அவற்றைச் சார்ந்த தொழில்கள், அவற்றின் மூலம் சுற்றப்புறத் தூய்மை என எழுதும் கருத்துக்கள் அனைத்தும், இன்றைய இயந்திரவுலகு, அதனால் வரும் மாசு, மக்கட்கு வரும் நோய் முதலானவற்றை எதிர்த்துச் செய்யும் மிகப்பெரிய புரட்சி யாகும். இப்புரட்சியை ஒழுங்காகச் செய்தால் ஏழ்மை நிலையிலுள்ள ‘விவசாயியும்’ பிற தொழில் செய்பவர்களோடு போட்டி போட்டு முன்னேறலாம். அத்துடன்

“டைகட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
கைகட்டிப் பின்செல் பவர் ” என்ற இக்காலக் குறளை மாற்றி வள்ளுவர் கூறிய போல
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
என்ற நிலை உருவாக்கிப் புரட்சியை நிரூபிக்கலாம்…

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
உண்டு கழித்திருப்போரை நிந்தனை செய்வோம். ”          –    
என்ற பாரதி பாடலை இயற்கை வேளாண்மையின் மூலமும், சூழ் நிலை மாசுபடாத தொழில்கள் உண்டாக்கி நமது பாரதத் தாயை உலக அரங்கில் உயர்த்துவோமாக…

ஒலிம்பிக் போட்டிகளுக்குச் சென்றுள்ள நமது வீரர்கள் நல் வெற்றிகளை பெற்று நமது பாரதத்தாய்க்கு நல் அணிகலன்களைப் பூட்ட, வீரர்கள் நல் வெற்றிபெற இறைவனை வேண்டுவோமாக…
“எண்ணிய முடிதல் வேண்டும்.
நல்லவே எண்ணல் வேண்டும்”

இவ்விதழில் ஆதிவாசி மலைவாழ் பழங்குடி மக்கள் தாம் பெறும் பொருள்களை எப்படி மதிப்புக் கூட்டுவது என்பது விளக்கப்பட்டுள்ளது.  மேலும் புன்னை, மாமரச் சாகுபடிகள், விற்பனை ஆகியவற்றைத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதை அறிந்து, கடைப்பிடித்து நாம் முன்னேறலாம்…