வனம் காப்போம்

lanwhz91வனம் காப்போம்

‘Keystone’ என்கிற தன்னார்வத் தொண்டமைப்பானது நீலகிரி பயோஸ்பியர் ரிசர்வுக்கு உட்பட்ட  மலைப்பகுதியில் அழிந்து வரும் இயற்கைத் தாவரங்களைக் கண்டறிந்து, பாதுகாத்து அதனைப் பெருக்கமடையச் செய்வதிலும் முயற்சிகள் பல எடுத்து வருகின்றது. அப்படி அழியும் ஒரு தாவரத்தைப் பற்றி ‘Keystone’ ன் ‘திட்ட ஒருங்கிணைப்பாளர்’ திருமதி.ஷைனி மரியம் ரீகல் அவர்கள் இப்பகுதியில் விளக்குகிறார்.

   Cycas Circinalis 25 அடி வரை செல்லக் கூடிய மரம் போன்ற ஒரு சிறிய பசுமையான பனையாகும். இவ்வகைத் தாவரங்கள் 500 மீ முதல் 1200 மீ உயரமுள்ள அடர்ந்த இலையுதிர் காடுகளில் வளர்ந்து காணப்படும். இத்தாவரங்களுக்குக் கிளைகள் இல்லை, இலையில் நிரந்தர வடுக்களை உடைய இப்பனையின் அடிப்பகுதித் தண்டு ஒரு பளபளப்பான பச்சை நிறத்தில் காணப்படுகின்றது. ஆண் மற்றும் பெண் மலர்கள் கூம்புகள் வடிவில் தனித் தாவரங்களாகக் காணப்படுகின்றன.

செழுமையான இலைகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான ஆண் வித்துக்களையுடைய ஆண் கூம்புகளை Microsporophylls என்றும், பெண் கூம்புகளை Megasporophylls என்கின்றனர். 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இத்தாவரம் இன்றும் அதன் தன்மை மாறாது தகவமைத்து வருகின்றது. அதனால் தான் இதனை ‘வாழும் படிமங்கள்’ என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகின்றன.

பழங்குடியின மக்கள் இவ்விதைகளைச் சேகரித்து, மாவாக ஆட்டி வாழை இலையின் மேல் வைத்து வேகவைத்து உண்கின்றனர். தற்சமயம், வர்த்தகர்களால் வர்த்தக நோக்கோடு இவ்விதைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. மேலும், இத்தாவரத்தின் இளம் தளிர்களைச் சேகரிப்பதால், விஷேச காலங்களில் பந்தல்களை அலங்கரிக்கவும், இத்தாவரம் பெருமளவில் வெட்டி அழிக்கப்படுகின்றது. இவ்விதைகள் கேரள மாநிலத்தில் ‘Entha kai’ என்றும் தமிழகத்தில் இளம் தளிர்களை ‘Pei eechai’ என்றும் சந்தைப்படுத்தப்படுகிறது.

இளந்தளிர்கள் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் சமைத்து உண்ணப் பயன்படுத்தப்படுகிறது. நெல் பயிரிடப்படும் விவசாய நிலங்களில் ( பால் பிடிக்கும் காலங்களில் ) இத்தாவரத்தின் ஆண் வித்துக்களை வயலின் நடுவில் வைத்துப் பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

நேரடிக் கண்காணிப்புகளின் மூலம் கண்டறியாத போதும், வெளவால்கள் இவ்விதைகளை உண்டு ஆற்றங்கரையோரங்களில் கழிக்கப்பட்டது என்று, பழங்குடியினர் சேகரித்த விதைகளைக் கொண்டு வருவார்கள். வெளவால்களின் காலனிகளை அங்கு காணமுடிகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘பறக்கும் நரி’ என்றழைக்கப்டும் வெளவால்கள் பழக்கூழை உண்டு கொட்டைகளைத் துப்பும் குணாதிசையமுடையன.  
    
வர்த்தகக் காரணங்களுக்காக வெட்டப்படும் இத்தாவரங்கள் வெளவால்களுக்கு உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில், மானினங்களில் பெரியவையான சாம்பார் வகை மான்கள் இவ்விதைகளை விரும்பி உண்ணுகின்றன. சாம்பார் வகை மானினங்களைக் கேரள மாநிலம் நீலாம்பூர் வனப்பகுதியில் காணலாம்.    

பாதுகாப்பு நிலை :

வர்த்தக நோக்கில் இத்தாவரம் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தாவரம் குறைந்த எண்ணிக்கையிலும் மிகக் குறைந்த நிலப்பரப்பிலும் உள்ளதை அரசு பாதுகாத்திட வேண்டும் என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் தொடர்புக்கு,

SHINY MARIAM REHEL
Keystone centre, Groves Hill Road,
P.B.NO.35, Kotagiri – 643 217
The Nilgiris (T.N)., India.
04266 – 272277, 272977
94860 12404
shiny@keystone-foundation.org

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →