பார்த்தீனியம் நச்சுக்களை – பிரச்சனைகளும் கட்டுப்பாடுகளும்

525facwzஅமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பார்த்தீனியம் என்ற நச்சுக்களை 1955-ம் ஆண்டு வெளிநாட்டுத் தானியங்களுடன் இந்தியாவிற்குள் இறக்குமதியானது. எல்லா வகையான சூழ்நிலையிலும் வளரும் திறனுள்ள இச்செடி தற்போது இந்தியா முழுவதிலும் பரவி மனித நலத்திற்குத் தீங்கு விளைவித்து வருகிறது. இக் களைச்செடி தமிழகத்தின் அனைத்து நிலப்பரப்புகளிலும் அதிகமாகப் பரவி வளர்ந்து காணப்படுகிறது

இக்களையால் ஏற்படும் பாதிப்புகள்

பார்த்தீனியத்தில் உள்ள பார்த்தினின்  (Parthinin) மற்றும் அம்புரோசின்  (Ambrosin) எனும் நச்சுப்பொருட்களால் தோல் மற்றும் கண் அரிப்பு, வெடிப்பு, கொப்புளங்கள் மற்றும் எக்சிமா ஆகிய தோல் வியாதிகள், ஈளைநோய் ( ஆஸ்துமா ), மூச்சுத் திணறல், உடல் ஒவ்வாமை மற்றும் காய்ச்சல் போன்ற வியாதிகளை மனிதனுக்கு உண்டாக்குகிறது.

இக்களை பரவுதல்…

பார்த்தீனியச்செடி ஆண்டுக்கு மூன்று தலை முறைகள் வளரக்கூடியது.
விதைகள் காற்றின் மூலம் எளிதாகப் பரவும் அமைப்பைக் கொண்டது.
ஒரு செடியிலிருந்து10,000 விதைகள் உற்பத்தியாகின்றன.
விதைகள் நீண்ட காலம் 100 சத முளைப்புத்திறன் உடையவை.
எந்தச் சூழ்நிலையிலும் முளைத்து வளரும் தன்மை உடையது.

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

பார்த்தீனியம் விதைகள் முளைக்கும் முன்பும், முளைத்த செடிகள் பூப்பூத்து விதை உண்டாவதற்கு முன்பும் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதனால் விதைகள் முற்றி மேற்கொண்டு இச்செடிப் பரவுவது தடுக்கப்படுகிறது.

அழிக்கும் முறை

சமையல் உப்பு + சோப்புத்திரவம் = 200 கிராம் + 1 மி.லி / லிட்டர் நீருக்கு.
பார்த்தீனியச் செடிகள் பூக்கும் முன் தெளிக்க வேண்டும்.

இதர முறைகள்

பூப்பதற்கு முன் கையுறை அணிந்து அல்லது ஏதாவது கருவியை உபயோகித்துச் செடிகளை வேருடன் அகற்றி எரிப்பதால் விதை உண்டாகிப் பரவுவது தடுக்கப்படுகிறது.

தரிசு நிலங்களில் அடர் ஆவாரை (Cassia Sericea) மற்றும் துத்தி (Abutilon indicum)     வகைச்செடிகளை போட்டிச் செடிகளாக வளரச்செய்து பார்த்தீனியத்தின் வளர்ச்சியைக் குறைக்கலாம்.

மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளரும் தாவர இனங்களை வளர ஊக்குவிக்கலாம்.

பார்த்தீனியம் செடியை தின்று அழிக்கக்கூடிய ஸைக்கோகிராமா பைக்கலரேட்டா (Zygogramma bicolorata) என்ற மெக்ஸிகன் வண்டுகளைப் பரவச்செய்தும் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தலாம்.

பார்த்தீனியத்தை உரமாக்குதல்

பார்த்தீனியச் செடிகளைக் களைக்கொல்லி கொண்டு அழிக்காத தருணத்தில், அவற்றை வேருடன் அகற்றி நன்கு நறுக்கி குழியில் போட்டு மக்கவைத்து உரமாகப் பயன்படுத்தலாம்.

மேற்கூறிய பார்த்தீனியம் களைக்கட்டுப்பாட்டு முறைகளைச் சூழ்நிலைக்கேற்ற ஒருங்கிணைந்த முறையில் பரவலாக எல்லோரும் ஒரே நேரத்தில் கடைப்பிடித்து இந்நச்சுச்செடி வளர்வதையும், பரவுவதையும், தொல்லையையும் தடுக்க முயற்சிக்க வேண்டும்.

பார்த்தீனியத்தை அழிப்போம் மனித வாழ்விற்குப்       பாதுகாப்பு அமைப்போம்.

மேலும் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உழவியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் – 641 003.
0422 – 6611246 / 6611463.