கீரை…

wnka63okதொழில்நுட்ப வளர்ச்சி, ஒரே துறையில் ஆர்வம் உள்ளவர்களை எங்கிருந்தாலும் கைகோர்க்க வைக்கிறது என்பதற்குத் திரு.ஜெகதீஷ் மற்றும் திரு.பார்த்திபன் அவர்களின் நட்பை உதாரணமாகக் கூறலாம். 39 வயதான திரு.ஜெகதீஷ் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர். அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். திரு.பார்த்திபன் 29 வயது, கணினி பட்டதாரி, தற்போது கோவை ஐ.டி பார்க்கில், மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

சுமார் 8 வருடங்களாக அரிசி வியாபாரம் செய்து வந்தாலும் விவசாயத்தின் மீது ஆர்வமிகுந்திருந்தது. அந்தச்சூழலில் முகநூல் மூலம் நண்பரானார் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த திரு.பார்த்திபன் அவர்கள். முகநூலில், பலபதிவுகளிலும் எங்கள் விவசாய ஆர்வம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இருவரும் நட்பாகி; ஆலோசனை, முதலீடு  என விவசாயியாக மாறி இயற்கை விளை பொருட்களை வர்த்தகமும் செய்து வருகின்றனர்.

முகநூல் நண்பரான திரு.திவாக்கர் அவர்கள், கோவை மாவட்டம் , குரும்பபாளையம் – காளப்பட்டிச் சாலையில் ( வழியாம்பாளையம் ) உள்ள தங்களின் உறவினரின் தோட்டத்தை குத்தகைக்குப் பெற்றுத் தந்தார். சுமார் 6 ஏக்கர் களிமண் நிலத்தில் 7 வயதான மலை நெல்லி  முழுமையான இயற்கை விவசாயத்தில் (தண்ணீர் கூட மழைக்காலங்களில் மட்டுமே பயிர்களுக்குக் கிடைத்து வந்துள்ளது) பயிர் செய்யப்பட்டிருந்தது. தோட்டத்தின் உரிமையாளர் பெரும்பாலும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் கவனிப்பாரற்று இருந்தது. இந்த மண் சுமார் 10 ஆண்டுகளாக எந்த ஒரு இடுபொருட்களையும் பார்க்காத பூமியாக இருந்ததால் எங்களின் இயற்கை விவசாயப் பயணம் எளிதாக இருந்தது.

இவரைத் தொடர்ந்த திரு.பார்த்திபன் அவர்கள், நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான், எனது தந்தை விவசாயத்தைக் கவனித்துக் கொள்கிறார். ஆனால் இயற்கை விவசாயம் எதுவும் செய்யவில்லை. நானும் என் மனைவியும் ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறோம். கோவை மாநகரில் எங்களால் நல்உணவுவகைகளை கண்டறிந்து சாப்பிட முடியவில்லை, ஐயா நம்மாழ்வார் அவர்கள்  வாழ்ந்து உருவாக்கிய ‘வானகம்’ பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்றுவந்தேன். அந்தக்கணம் முதல் இயற்கையின் மீது ஓர் ஆர்வம். மேலும், எனது உணவுப் பழக்கத்தை மாற்றினேன். அன்று முதல், வீட்டில் சமைப்பது அனைத்தும் இயற்கையில் விளைந்த பொருட்களை கொண்டே சமைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். எனது அனுபவத்தைத் தந்தையிடம் பகிர்ந்தேன். அவரும் ‘வானகம்’ சென்று உணர்ந்தார். அன்றிலிருந்து எங்கள் பண்ணையை இயற்கை விவசாயப் பண்ணையாக மாற்றிப் பூ ( சாமந்திப் பூ), தேங்காய், கரும்பு ( சர்க்கரை ) என்று பயிர் சாகுபடி செய்து வருகின்றார் என்றார் உற்சாகமாக.

வணிகம் ஆரம்பித்தது

உணவுப் பழக்கத்தை மாற்றியதிலிருந்து இயற்கையில் விளைந்தக் கீரைகள் மற்றும் பழங்கள் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் இருவரின் நட்பும் மலர்ந்தது என்கிறார் திரு.பார்த்திபன். விவசாயியாக இணைந்தபின்பு, நாமே ஏன் வர்த்தகம் செய்யக்கூடாது என்று ஆரம்பிக்கப்பட்டது தான் www.pazhakadai.in

தோட்டம்
 

தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்த படியே பேச ஆரம்பித்த திரு. ஜெகதீஷ் அவர்கள், 6 ஏக்கர் குத்தகைத் தோட்டத்தில், 150 அடி ஆழம் உள்ள  கிணற்றில் 100 அடியில் தண்ணீர் உள்ளது; பயன்பாட்டிற்கான நல்ல குடிநீராகும். ஒரு காலத்தில் இந்தப் பகுதி மக்கள் இந்த நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த மண் இரசாயனங்களைப் பார்க்காததால் மண்புழுக்கள் இயற்கையிலேயே நிறைய இருந்தன.

முதல் அனுபவம்

கீரையை  முதலில் 10 அடி நீளம் 4 அடி அகலம் எனப் பாத்தி பிடித்து சாகுபடி செய்தோம். களைகள் அதிகமாக முளைத்தன; அதிலும், அருகைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இந்த அனுபவத்தில் தெளிந்தே மேட்டுப்பாத்தி அமைத்தோம். 6 ஏக்கர் நிலமிருந்தாலும் சோதனை முயற்சியாக 60 சென்டில் மட்டுமே கீரைகளைப் பயிர் செய்து பார்த்தோம். சோதனை முயற்சி வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, ஒரு பகுதியில் மேலும் சில மலை நெல்லி மரங்களை அப்புறப்படுத்தி அங்கு, கீரைகளையும், கீரை பயிர் செய்யப்பட்ட நிலத்தில் பசுந்தாள் உரப்பயிர்களான – சணப்பு, தக்கைப்பூண்டு… போன்றவைகளை விதைத்து பூ, பூப்பதற்கு முன்பு ரொட்டவேட்டர் கொண்டு உழவு செய்து பின் காய்கறிப் பயிர்கள் செய்யத் திட்டமிட்டு வருகிறோம்.

மேட்டுப்பாத்தி

60 சென்ட் நிலத்தை 4 பாகமாகப் பிரித்து,  ரொட்டவேட்டர் கொண்டு உழவு செய்து மண்ணை பொலபொலப்பாக்க வேண்டும். பொலபொலப்பாக்கிய மண்ணைக் கொண்டு 25 அடி நீளம், 4 அடி அகலமென, சுமார் 3/4 அங்குல உயரத்தில், 1 அடி இடைவெளியில் சுமார் 156 மேட்டுப்பாத்திகளை அமைத்தோம்.    

அடிஉரம்

மேட்டுப்பாத்தி அமைத்து மேல் மண்ணில் உரமிடவேண்டும். கீரைச் சாகுபடியின் போது பயன்படுத்திய உரங்கள்,
நெல் உமி சாம்பல் – காங்கேயத்திலிருந்து ஒரு மினி லாரி – ரூ.6000/-
மாட்டெருவு 4 டிராக்டர் – 1 லோடு எருவு ரூ.2500/-
25 கிலோவில் 50 மூட்டை மரத்தூள் – 25 கிலோ மூட்டை ஒன்று ரூ.50/-
156 மேட்டுப்பாத்தி அமைப்பதற்கு ரூ.4000/- கூலி
உரக்கலவையைப் பரப்பிவிட ரூ.2000/- கூலி

மேற்கூறியவைகளை ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு மேட்டுப்பாத்தியிலும் 1/2 அங்குல கனத்திற்குப் பரப்பிவிட வேண்டும். கீரையின் வேர் ஆழமாகச் செல்லாததினாலும், மேலோட்டமான வேர் உள்ளதாலும், மேல் மண்ணில் உரத்தை பரப்பிவிடுகிறோம் என்று விளக்கமளித்தார்.

பயிர் செய்யும் கீரை…

சிறுகீரை, அரைக்கீரை, பாலக் கீரை, தண்டங்கீரை (சிகப்பு, பச்சை), முளைக்கீரை (சிகப்பு, பச்சை), மணத்தக்காளி (சுக்கிட்டி கீரை), வெந்தையம், மல்லி… போன்றவைகளைப் பயிர்செய்கிறோம். கீரை உற்பத்தி மட்டுமே பிரதானம் என்பதால் விதை உற்பத்தி சாத்தியப்படுவதில்லை.  தேவையான விதைகளை முன்னோடி ஜீரோ பட்ஜெட் விவசாயிகளிடமிருந்து சேகரித்துக் கொள்கிறோம் என்கிறார் எதார்த்தமாக.
    
விதை நேர்த்தி

விதைகளை ஒரு மணி நேரம் வெயிலில் உலர்த்தி, பின்பு மாலைவேளையில் விதைப்பு செய்தோம். பாலக், அகத்தி, மல்லி, வெந்தயம் போன்றவற்றை முதல் நாள் இரவே பஞ்சகவ்யாவில் ஊற வைத்து மறுநாள் அதை உலர்த்தி விதைப்போம்.

சிறுகீரை, அரைக்கீரை போன்றவைகளை ஒரு மேட்டுப்பாத்தியில் 70 கிராம் விதையைச் சுமார் 200 கிராம் மணலுடன் கலந்து தூவ வேண்டும். பாலக், வெந்தையம், மல்லி இம்மூன்றிற்கு மட்டுமே மண்ணைக் கீரிவிட்டு விதைபோட்டு மூடவேண்டும். மற்ற வகைக்கீரைகளைத் தூவிக் கிளறிவிடுவோம், காரணம் இவைகள் அடர்த்தியாக வளரும்.

தொடர்ந்து அறுவடை செய்யக்கூடிய கீரைகள்

பாலக்கீரையை தொடர்ந்து 4 முதல் 5 மாதம் வரை அறுவடை செய்யலாம். மணத்தக்காளியைச் சுமார் 3 மாதம் வரை அறுவடை செய்யலாம். அரைக் கீரையை 2 முதல் 3 முறை அறுவடை செய்ய இயலும்.

சிறுகீரை, அரைக் கீரை, பருப்புக் கீரை போன்றவைகளை 20 முதல் 22 நாட்களில் அறுவடை செய்திடமுடியும். வெந்தையம் 17 முதல் 18 நாட்களிலும். தண்டங்கீரை 40 நாளிலும். பாலக்கீரை முதல் முறை 45வது நாளிலும், இரண்டாவது அறுவடையிலிருந்து 10 முதல் 12 நாட்களுக்கொருமுறை அறுவடை செய்திடலாம், மொத்தமாக 6 முதல் 7 அறுவடையை, நான்கு மாதங்கள் வரை செய்திடமுடியும்.

சிறுகீரை, பருப்புக் கீரை, முளைக்கீரை, அரைக்கீரை, வெந்தையம், மல்லி போன்றவைகளை வேரோடு பிடுங்கி விற்பனை செய்ய வேண்டும்.

பாசனத் தொழில்நுட்பம்

மேட்டுப்பாத்தி அமைப்பதினால் கீரைகளுக்குத் தெளிப்பு நீர்ப் பாசனமே சிறந்தது. மேட்டுப்பாத்தி அமைத்துக் காய்கறிச் சாகுபடி செய்ய சொட்டுநீர்ப் பாசனம் பயன்படுத்தலாம்.

5 ஹெச்.பி மோட்டார் உள்ளது – தெளிப்பு நீர்ப் பாசனம்.
60 சென்ட் நிலம் – 70 தெளிப்பு நீர்க் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன,
2 KG output pressure – 1 மணி நேரத்திற்கு 500  லிட்டர் நீர் டெலிவரி ஆகும்,70 தெளிப்பு நீர்க் கருவிகளை 4 பாகங்களாகப் பிரித்துள்ளோம்,
    1 பாகத்திற்கு 16 தெளிப்பு நீர்க் கருவிகள் செயல்படும், தேவையான பிரஷ்ஸர்க்குத் தகுந்தாற்போல் பாகத்திலுள்ள தெளிப்புநீர் கேட்வால்வைத் திறந்து / அடைத்துக் கொள்ள வேண்டும்.
    
பாசனத் தொழில்நுட்பத்தில் உள்ள சூட்சுமமே தினந்தோறும் தண்ணீர் விட வேண்டும். மிகமுக்கியமாக காலை, மாலை என இருவேளையிலும் தண்ணீரைப் பிரித்து விட வேண்டும் என்கிறார் திரு.ஜெகதீஷ் அவர்கள். காலையில் 10 நிமிடமும், வெயில் சற்று அதிகமாக இருந்தால் 11 மணிக்கு 5 நிமிடமும், கீரைகள் வாட்டமாகாமல் இருக்கக் கொடுக்க வேண்டும். மாலையில் சற்று அதிக நேரமாக சுமார் 15 நிமிடம் வரை நீர் கொடுக்க வேண்டும்.

உரம், பூச்சி விரட்டி…

பஞ்சகவ்யா, அமுத கரைசல், மீன் அமிலம், பழக்காடி, பூச்சி விரட்டி போன்றவைகளைத் தயார் செய்யும் முறைகளைப் பற்றிக் கூறுகிறார்.

அமிர்தகரைசல்

சாணம் மற்றும் கோமியம் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நிலத்தினுடைய வளமான மேல் மண் ஒரு கைப்பிடி அளவு. நாட்டுச் சர்க்கரை 200 கிராம் ( 1 கிலோ சாணம் மற்றும் கோமியத்திற்கான அளவு ). இந்நான்கையும் ஒருசேர வாளியில் கலந்து, நிழல்பாங்கான இடத்தில் வைத்து 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கலக்கி விட வேண்டும். 24 மணி நேரத்தில் அமிர்தகரைசல் தயாராகிவிடும். இவ்வளர்ச்சி ஊக்கியைத் தண்ணீர் பாய்ச்சும் போது கலந்து விடலாம். ஸ்பிரே செய்ய 300 மி.லி ஒரு டேங்கிற்கு ( 10 லிட்டர் தண்ணீர் ) கொடுக்கலாம்.

மீன் அமிலம் ( தழைச்சத்து )

10 கிலோ மீன் கழிவு, 10 கிலோ நாட்டுச் சர்க்கரை இவ்இரண்டையும் ஒருசேர ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு 40 தினங்கள் மூடி வைக்க வேண்டும். பொதுவாக மீன் கழிவின் நாற்றம் அனைவரும் அறிந்ததே, ஆனால் 41வது நாள் வாளியைத் திறந்தால் இக்கலவையில் நல்ல மணம் வீசும், தேன் போன்ற திரவ நிலையை அடைந்திருக்கும். இந்நிலையே மீன் அமிலம் தயாரானதற்குச் சான்று. மீன் அமிலத்தை சுமார் 3 மாதங்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம். 1 டேங்கிற்கு ( 10 லிட்டர் தண்ணீர் ) 200 மி.லி மீன் அமிலம் கலந்து ஸ்பிரே செய்யலாம். நில வள ஊக்கியாகவும் பயன்படுத்தலாம்.

பழக்காடி

வாழைப்பழம், அரசாணி, பப்பாளி, நாட்டுக் கோழி முட்டை ( ஒடை நீக்கிய ), சர்க்கரை (சர்க்கரை, இரசாயனம் கலக்காததாக இருக்க வேண்டும்). பழங்கள் அனைத்தும் நன்கு கனிந்து இருத்தல் நலம் ( பழக்கடைகளிருந்து கழித்த பழங்களை பெற்றும் பயன்படுத்தலாம்). இவற்றை நன்றாகக் கலக்கி 25 நாட்கள் மூடி வைத்தால் தயாராகிவிடும், இதனை 3 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். ஸ்பிரேயரில் 300 மி.லி ஒரு டேங்கிற்கு ( 10 லிட்டர் தண்ணீர் ) கொடுக்கலாம்.

பஞ்சகவ்யா

சாணம் – 3 கிலோ, கோமியம் – 3 லிட்டர், பால் – 2 லிட்டர், தயிர் – 2 லிட்டர், நாட்டுச் சர்க்கரை – 1 கிலோ. இவற்றை ஒருசேர கலக்கி மர நிழலில் வைத்து காலை மாலை என தினமும் கலக்கி வர 7வது நாள் பஞ்சகவ்யா தயாராகிவிடும். 1 டேங்கிற்கு (10 லிட்டர் தண்ணீர்) 200 மி.லி வரை கலந்து ஸ்பிரே செய்யலாம். பாசனத்தின் போதும் கொடுத்துப் பலன்பெறலாம்.

ஒரு கரைசல் ஊட்டத்திற்கு, ஒரு கரைசல் பூச்சி விரட்டி; என்று மாறி மாறி கொடுக்கவேண்டும். பூச்சி விரட்டியாக வேப்ப எண்ணெய் புங்கன் எண்ணெயும் ( ‘கோவை வணிகம்’ – மே 2014 இதழில் ‘பொன்னீம்’ பற்றிய விரிவான கட்டுரை இடம் பெற்றதை வாசகர் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் (பொன்னீம் – வேப்ப எண்ணெய் மற்றும் புங்கன் எண்ணெய்யின் கலவை ) )மற்றும் இலை தழைகளைக் கொண்டு மூலிகைப் பூச்சி விரட்டி கரைசல் தயார் செய்தும் பயன்படுத்தி வருகிறார். மூன்று நாளைக்கு ஒரு முறை ஊட்டத்திற்கென்று ஸ்பிரே செய்திட வேண்டும், பூச்சித் தாக்குதல் அதிகமாக இருந்தால் பார்முலாவை மாற்றியமைக்கும் சூழலும் ஏற்படும். 20 நாளில் 6 கரைசல் கொடுத்திடுவோம். அதாவது, வாரத்திற்கு இரண்டு முறை.

செயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் விளை பொருளை உண்பவருக்கு கேடு வருகிறேதோ இல்லையோ. அதன் தாக்கமும், பாதிப்பும் விவசாயியை நேரடியாக பாதித்துவிடுகிறது. நம்மைப் பாதுகாக்கவே இயற்கை விவசாயம். பூச்சிக் கொல்லி, களைக் கொல்லி ஆகியவைகள் தெளிக்கும் போது நம் மூச்சுக் காற்று, கையில் படிவது… போன்ற பல வகைகளில் நேரடியாக விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தான் தீய பழக்கங்கள் இல்லா விவசாயப் பெருங்குடிமக்களுக்கும் புற்றுநோய் ஏற்படுகின்றது. எத்தனை முறை பூச்சிக் கொல்லி, வளர்ச்சி யூக்கி என்று கீரைகளின் மீது தெளிக்கப்படுகிறது என்று நுகர்வோர் ஒரு முறை சென்று நேரில் கண்டால் அதிர்ச்சி காத்திருக்கும். மேலும், இரசாயன உணவு உற்பத்தியினால் மொத்த உயிரினமும் சுற்றுப்புறச்சூழலும் பெரிய அளவில் நோயுற்று கிடக்கிறது என்கிறார் வேதனையுடன்.

வர்த்தகம்

வர்த்தகத்தைப் பற்றி நம்மிடம் பேசிய திரு. பார்த்திபன் அவர்கள், விவசாயத்திலேயே உள்ள சிரமமான வேலை, விளை பொருளை விற்பதுதான். அதிலும் இயற்கை விளை பொருளை விற்பது என்றால் மக்களிடம் புரிதல் ஏற்பட வேண்டும். முதல்முறை கூடுதல் விலைகொடுத்து பொருள் வாங்க வாடிக்கையாளர்கள் தயங்கினாலும், பின்னாளில் தொலைபேசியில் அழைத்து ஆர்டர்கள் கொடுக்கின்றனர். விளைபொருளின் வித்தியாசத்தை உணருகின்றனர். சில நேரங்களில் பூச்சித் தாக்குதல், கீரைகளில் அதிகமாக இருப்பின், வாடிக்கையாளர்கள் பொருள் வாங்குவதற்குச் சற்று தயக்கம் காட்டுவர். பூச்சித் தாக்குதல் இருக்கும் கீரைகளில் அதிக சத்து இருக்கும். மேலும் பூச்சிக் கொல்லி தெளித்து, பூச்சியே தீண்டாத கீரைகளை நாம் எப்படி உண்ண முடியும்? ஆகவே தான் இயற்கைப் பூச்சி விரட்டிகளை மட்டும் பயன்படுத்தித் தரமான கீரைகளை உற்பத்தி செய்கிறோம். சீதோ­ணத்தின் காரணமாக சில நேரங்களில் பூச்சித் தாக்குதல்கள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், பாதுகாப்பான மற்றும் சத்து நிறைந்தவை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி விற்பனை செய்கிறோம்.

காய்கறி மற்றும் பழங்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறோம்.  மேலும், சில இயற்கை அங்காடிகளுக்கும் சப்ளை செய்து வருகிறோம். தற்போது தோட்டத்தில் நேரடி விற்பனை அங்காடி திறக்கவும் திட்டமிட்டுள்ளோம். கோவை மாநகரில், ஜீ.வி ரெசிடென்ஸியில் ஞாயிற்றுகிழமையிலும், கீரணத்தத்தில் ஐ.டி பார்க் மற்றும் வடவள்ளியிலும் வாரத்தில் ஒரு நாள் 3 முதல் 4 மணி நேரம் வரை ஸ்டால் அமைத்து வருகிறோம். ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளோம் என்பதும் எங்கள் வணிகத்தின் சிறப்பு என்றார்.

எங்கள் வாட்ஸ் ஆப் குழுவின் மூலம், ஜீரோ பட்ஜெட் விவசாயிகளிடமிருந்தும் காய்கறிகளை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம். காய்கறி மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்து பழங்கள் வாங்கி விற்பனையும் செய்து வருகிறோம்.

ஆப்பிள் -உத்தர்கான்
சாத்துக்கொடி – ஆம்பூர் ( வேலூர் ), கடப்பா
மாதுளை – ஹைத்ராபாத்
சப்போட்டா – சிவகங்கை, பண்ணாரி
வாழை – ஈரோடு, கோவை

இதுவரை இத்தோட்டத்தில் செய்யப்பட்ட செலவு
( எங்கள் நோக்கமறிந்த இத்தோட்டத்து உரிமையாளர் இதுவரை குத்தகைப் பணம் எதுவும் கேட்கவில்லை ) மற்றும் வர்த்தகத்திற்கெனச் சுமார் ரூபாய்.3 லட்சம் வரை முதலீடு செய்துள்ளோம். பழங்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் காய்கறிகளையும் கேட்பதால் காய்கறிகளை வெளியில் இருந்து வாங்கிக் கொடுத்து வருகிறோம்.

விவசாயத்தில், களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். உதாரணமாக: கீரைகளைப் பறித்து, கட்டி விற்பனைக்கு அனுப்பி வைப்பேன். 350 கிராம் முதல் 400 கிராம் வரை எடையுள்ள ஒரு கட்டுக் கீரை – ரூ.15/- என்று விற்பனை செய்கிறோம். எடை சற்று கூடுதலாக இருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்றார் வாடிக்கையாளர்களை நன்கு படித்த திரு.பார்த்திபன் அவர்கள்.

கோவையைப் பொருத்தமட்டில் வடவள்ளி, காந்திபுரம், ராமனாதபுரம், காளப்பட்டி, சரவணம்பட்டி போன்ற பகுதிகள் வரை சப்ளை செய்கிறோம். வாடிக்கையாளர்களுக்குக் கீரைகள் மட்டும் தனியாக விற்பதில்லை, பழ ஆர்டர் கொடுப்பவற்களுக்கு கீரையும் கொடுக்கிறோம். குறைந்தபட்சமாக ரூ.200/-க்கு வர்த்தகம் செய்வோருக்கு மட்டுமே டோர்டெலிவரி செய்கிறோம். சுற்றுப்புறச்சூழலைக் கருத்தில் கொண்டு துணிப்பையில் தான் ஆர்டர்களை டெலிவரி செய்கிறோம். ஆரம்பத்தில் ‘துணி பை’ க்காக ரூ.50/- பெற்றுக் கொண்டு சுழற்சி முறையில் பையை மாற்றி வர்த்தகத்தைத் தொடருவோம் என்றார், சுற்றுப்புறத்தின் மீது அதிக அக்கரையுள்ளவராக.
    
விவசாயம் மற்றும் வர்த்தகம் ஆரம்பித்ததிலிருந்து இலாபமோ, நஷ்டமோ இல்லை. எங்கள் நோக்கம் தற்போது இயற்கையைப் பற்றிய புரிதல் ‘ரீச்சாக’ வேண்டும். உணவு கலாசாரத்தில், பாரம்பரிய முறையைப் பின்பற்ற மக்களை வலியுறுத்துவதே எங்கள் நோக்கம். சம்பாத்தியம் இரண்டாம் பட்சம் தான், சம்பாதிக்கும் பணத்தை எப்படி செலவு செய்து நல்ல பொருட்களை வாங்கி உண்கிறோம் என்பதுதான் முக்கியம்.

மார்கெட்டிங் என் பொறுப்பு, உற்பத்தி திரு.ஜெகதீஷ் பார்த்துக்கொள்வார். நான் காலை மாலை 2 மணி நேரம் வேலை செய்கிறேன். வெளியில் இருந்து வாங்கும் பொருட்களை திங்கட்கிழமைகளில் சேகரித்து, செவ்வாய்க்கிழமையில் பிரித்து எடை போட்டு உரிய வாடிக்கையாளர்களுக்குப் பையில் சேகரித்து வியாழக்கிழமைகளில் டெலிவரி கொடுப்போம்.

இயற்கையில் விளைவிக்கும் கீரைகளை வாங்குவதால் நுகர்வோருக்குச் சத்து; நமது மரபு சார் விவசாய முறைகளே சிறந்த விவசாய முறை, அதைப் பின்பற்றி பிணியற்ற சமூகத்தை உருவாக்கி நாமும் சத்தான வருமானம் பெருவோம் என்று கூறி விடை கொடுத்தார்கள்.
மேலும் தொடர்புக்கு,
திரு. ஜெகதீஷ்
91765 21234
திரு. பார்த்திபன்
97900 92412

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →